Published : 09 Sep 2021 03:14 am

Updated : 09 Sep 2021 05:46 am

 

Published : 09 Sep 2021 03:14 AM
Last Updated : 09 Sep 2021 05:46 AM

உட்கார்வதும் தொழிலாளர்களின் உரிமையே!

sitting-is-an-labors-right

பணி நிமித்தமாக நாள் முழுவதும் நின்றுகொண்டே இருக்க வேண்டிய கொடுமையிலிருந்து கடைகள், வணிக நிறுவனங்களில் வேலை பார்க்கும் பல லட்சம் தொழிலாளர்கள் விடுபடுவதற்கான காலம் கனிந்திருக்கிறது. தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947-ல் திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதாவைக் கடந்த செப்டம்பர் 6 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் திட்டக்குடி வி.கணேசன் தாக்கல்செய்தார். இந்தத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், சட்டத்தில் சேர்க்கப்படவிருக்கும் பிரிவு 22-அ, ‘‘ஊழியர்கள் பணி நேரத்தில் அமர்ந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்போது, அதைப் பயன்படுத்தும் விதமாகவும் பணி நேரம் முழுவதும் நின்றுகொண்டே இருக்க வேண்டிய நிலையைத் தவிர்க்கும் பொருட்டும் அனைத்து நிறுவன வளாகங்களிலும் ஊழியர்கள் அமர்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்” என்கிறது.

ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், காலணிக் கடைகள் போன்றவற்றின் ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்குப் பல பொருட்களை எடுத்துக் காண்பிக்க வேண்டும் என்பதால், நின்றுகொண்டே வேலை பார்க்க வேண்டிய பணி நிர்ப்பந்தத்தில் இருப்பவர்கள். அமர்வதற்கான உரிமை என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகவே கருதப்பட வேண்டும். நம் வீட்டுக்கோ அலுவலகத்துக்கோ யாரேனும் வந்தால், நாம் சொல்வது ‘உட்காருங்க’ என்றுதான். ஆனால், அந்த அடிப்படைக் கனிவைத் தம்மிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்குவதற்கு மிகப் பெரும்பாலான தொழிலதிபர்கள், முதலாளிகளுக்கு மனம் வருவதில்லை. இதைக்கூடச் சட்டம் மூலமாகத்தான் நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கிறது என்று கூறுகிறார்கள் தொழிலாளர் உரிமை ஆர்வலர்கள்.


2018-ல் கேரள அரசு கடைகள், மற்றும் வணிக நிறுவனங்களில் ஊழியர்கள் உட்கார்வதற்கான இருக்கை வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதைக் கட்டாயமாக்கும் சட்டத் திருத்தத்தை மேற்கொண்டது. 2017-ல் ஊழியர்கள் பலர் நடத்திய போராட்டங்களின் விளைவாகத்தான் அந்தச் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதையடுத்து, தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருக்கும் இந்தச் சட்டத் திருத்தத்தை மருத்துவ சமூகத்தினர் பாராட்டி வரவேற்கிறார்கள். “ரத்தக்குழாய் நிபுணராக நான் இந்தச் சட்டத் திருத்தத்தைப் பெரிதும் வரவேற்கிறேன். ஏனென்றால், வெகு நேரம் நின்றுகொண்டே இருப்பவர்களுக்குத்தான் காலில் ரத்த நாளங்கள் தேக்கமடைந்து, வெரிகோஸ் வெய்ன் போன்ற வியாதிகள் வருகின்றன. அதைத் தடுக்கும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்திருக்கிறது. இரண்டாவதாக, இது ஒரு தனிமனிதரின் சுயமரியாதையையும் கண்ணியத்தையும் உறுதிப்படுத்தும் விஷயம் என்பதாலும், முதல்வருக்கு நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்கிறார் ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணரும் தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் உறுப்பினருமான மருத்துவர் ஜோ.அமலோற்பவநாதன்.

சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளரான மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், இந்தச் சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் முன்வைக்கிறார். “இது பாராட்டத்தக்க சட்டத் திருத்தம். பல தனியார், கார்ப்பரேட் மருத்துவமனைகளில்கூட மருத்துவர்கள், செவிலியர்கள், இதர பணியாளர்கள் அமர்வதற்கான இருக்கை வசதிகள் இருப்பதில்லை. பல கடைகள், நிறுவனங்களில் 12 மணி நேரம் வேலை பார்க்க வைக்கிறார்கள். அவ்வளவு நேரம் நின்றுகொண்டே இருக்க முடியாது என்பதால், முதலாளியோ கண்காணிப்பாளரோ இல்லாத நேரங்களில் ஊழியர்கள் தரையில் உட்கார்ந்துகொள்கிறார்கள். இது அவர்களின் சுயமரியாதையைப் பாதிக்கிறது. ஆகவே, இந்தச் சட்டத் திருத்தத்தை வெறும் விற்பனை நிலையங்களுக்கு மட்டுமல்லாமல் மருத்துவமனைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் உட்பட இந்தப் பிரச்சினை நிலவும் அனைத்து நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.. தொழிலாளர் நலத் துறை, இதைக் கண்காணிப்பதற்கென்றே பிரத்யேகத் தொழிலாளர் ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும். அவர்கள் குறிப்பிட்ட கால அளவில் இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வுக்குட்படுத்தலாம். தனிப்பட்ட முறையில் ஊழியர்களிடமும் பேசி உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களான பொதுமக்களுக்கும் இந்தச் சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் பொறுப்பு இருக்கிறது” என்கிறார்.

அமர்வதற்கான வசதியைத் தாண்டி, வணிக நிறுவனங்களிலும் கடைகளிலும் பணியாற்றும் எண்ணற்ற பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகள் மிக விரிவானவை. இது குறித்துக் கள ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, அரசு கவனம் செலுத்த வேண்டிய தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சினைகளைப் பட்டியலிடுகிறார். “சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு தொழிலாளர்களுக்கான அடிப்படை உரிமைகளை நிறைவேற்றுவதற்கான விதிமுறைகளை வகுத்துள்ளது. குறைந்தபட்சக் கூலி, அனைத்துப் பாலினருக்கும் சம வேலைக்குச் சமமான கூலி, கண்ணியமான, பாதுகாப்பான வேலை ஆகியவை அவற்றில் முக்கியமானவை. இதில் பாதுகாப்பு, கண்ணியம் போன்றவற்றில் குறிப்பாக பெண் ஊழியர்கள் பல பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். கழிப்பறை வசதி இல்லாமல் இருப்பது பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் விவரிக்க முடியாத துன்பத்தை அளிக்கக்கூடியது. ஆனால், கழிப்பறை, உடை மாற்றிக்கொள்வதற்கான அறை போன்ற வசதிகள் பெரும்பாலான நிறுவனங்களில் இருப்பதில்லை. பாலியல் அத்துமீறல், வன்முறைக்குள்ளாக்கப்படுவது போன்ற பிரச்சினைகளையும் பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்வது அதிகரித்துவருகிறது. இவற்றிலிருந்தெல்லாம் பெண்களை மீட்க ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு புகார் குழுவை உருவாக்க வேண்டும். இதை உச்ச நீதிமன்றமே அறிவுறுத்தியுள்ளது. வணிகர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளைச் சுமையாகப் பார்க்கும் மனநிலையிலிருந்து விடுபட்டு, இவற்றைத் தொழிலாளர்களுக்கான அடிப்படை உரிமையாகக் கருத வேண்டும். முதலில் அமர்வதற்கான இருக்கை உரிமை சட்டரீதியாகக் கிடைத்திருக்கிறது. இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.. அடுத்த கட்டமாகக் குறைந்தபட்ச ஊதியம், கண்ணியமான பணிச்சூழல், பாதுகாப்பு வசதிகள் போன்ற விஷயங்களிலும் தமிழ்நாடு அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்கிறார்.

சென்னையின் பிரபலமான ஷாப்பிங் மாலில் உள்ள கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் சிலரிடம் பேசியதிலிருந்து அவர்களில் பலருக்கும் இருக்கை வசதியை உறுதிசெய்வதற்கான சட்டத் திருத்தம் சற்றேனும் நம்பிக்கையையும் நிம்மதியையும் அளித்திருப்பதை உணர முடிந்தது. அதே நேரம், தங்கள் பணியின் தன்மை காரணமாக நாள் முழுவதும் நின்றுகொண்டே இருப்பதைத் தவிர்க்க முடியாது என்று பலர் நம்புவதையும் அதனால் ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதையும் தெரிந்துகொள்ள முடிந்தது.

கடை உரிமையாளர்கள் சிலரிடம் பேசியபோது அவர்கள் “வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க முடியும். அவர்கள் வரும்போது ஊழியர்கள் அமர்ந்திருந்தால் வியாபாரம் நடக்காது” என்றார்கள். “ஊழியர்களுக்கு இருக்கை வசதி கட்டாயமில்லை. தேவைப்பட்டால், ஓய்வு அறைகளில் அமர்ந்துகொள்ளலாம்” என்றார் ஒருவர். சென்னை திருவல்லிக்கேணியில் ஆடவர் உடைகளுக்கான கடையை நடத்திவரும் முகமது, “நான் இந்த சட்டத் திருத்தத்தை மனதார வரவேற்கிறேன். ஊழியர்கள் அமர்வதற்கான இருக்கை என்பது அத்தியாவசியமானது. இதுபோன்ற அடிப்படை வசதிகளை ஊழியர்களுக்குச் செய்துகொடுத்தால், அவர்கள் வாடிக்கையாளர்களிடம் மேலும் கனிவாக நடந்துகொள்வார்கள். அது வியாபாரத்துக்கும் நல்லது” என்கிறார். இந்தச் சட்டம் செயல்வடிவம் பெறுவதற்கு முன்பே அவருடைய கடையில் ஊழியர்கள் இருக்கைகளில் அமர்ந்துகொண்டிருப்பதைக் காண முடிந்தது. இப்படியும் சில முதலாளிகள் இருக்கவே செய்கிறார்கள்.

கடைகளில் மேலாளர்களாகவும் விற்பனைப் பிரதிநிதியாகவும் பணியாற்றுவோர் மட்டுமல்லாமல் வாயில் காப்பாளர்கள், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் எனப் பல வகையான ஊழியர்களையும் பாதிக்கும் பிரச்சினை இது. இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கான கண்காணிப்பு விதிமுறைகளை அரசு திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டும். இந்த நல்ல தொடக்கத்தின் நீட்சியாகத் தொழிலாளர்களின் மற்ற பிரச்சினைகளிலும் இதே போன்ற இடையீடுகளை நிகழ்த்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

- ச.கோபாலகிருஷ்ணன், தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in
தொழிலாளர்களின் உரிமைவணிக நிறுவனங்கள்ஊழியர்கள் அமர்வதற்குத் தேவையான ஏற்பாடுAbors rightSitting

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x