Published : 08 Sep 2021 03:15 AM
Last Updated : 08 Sep 2021 03:15 AM

நீதித் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும்

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் இந்தியாவின் 12 உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளாக நியமிப்பதற்கு வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளின் பட்டியலை இறுதிசெய்துள்ளது. 68 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் 10 பேர் பெண்கள். மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் நீதிபதி மார்லி வாங்குங், கவுகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவர் தேர்ந்தெடுக்கப்படும்பட்சத்தில், சுதந்திர இந்தியாவின் முதல் பழங்குடியினப் பெண் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொலிஜியத்தின் பரிந்துரைகள் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்படும். உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியத்தால் உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்களில் சராசரியாக ஏழில் ஒருவரே பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஒன்பது பேரில் மூவர் பெண் நீதிபதிகளாவர். அவர்களில் ஒருவரான நாகரத்னா 2027-ல் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கும் வாய்ப்புள்ளது. பணிமூப்பின் அடிப்படையில், அவர் 36 நாட்களே அந்தப் பொறுப்பை வகிக்க முடியும். எனவே, முதலாவது பெண் தலைமை நீதிபதி என்ற வாய்ப்பும்கூட அடையாள நிமித்தமாகவே அமையக்கூடும். சுதந்திர இந்தியாவின் புதிய அரசமைப்பின்படி உருவாக்கப்பட்ட உச்ச நீதிமன்றம் 77-வது ஆண்டில் அடியெடுத்துவைக்கும்போதுதான், முதலாவது பெண் தலைமை நீதிபதிக்கான வாய்ப்பு அமையும் என்றால், பாலின சமத்துவத்தை நீதித் துறையிலேயே நடைமுறைப்படுத்த இயலவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளைத் தேர்வுசெய்யும்போதே பெண்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டால் உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான கூடுதல் வாய்ப்புகள் அமையும். நீதித் துறையுடன் மாநில அரசும் இணைந்து முடிவெடுக்க வேண்டிய இவ்விஷயத்தில், தமிழ்நாடு இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்கிவருகிறது. தற்போது உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13-லிருந்து 14 ஆக உயரும். நாட்டிலேயே சென்னை உயர் நீதிமன்றத்தில்தான் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் தற்போதைய பெண் நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 4 மட்டுமே. மத்திய சட்ட அமைச்சகம் செப்டம்பர் 2020-ல் நாடாளுமன்றத்தில் அளித்த தகவலின்படி நாடு முழுவதும் உள்ள 25 நீதிமன்றங்களில் உள்ள பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 80 மட்டுமே. அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் உள்ள மொத்த நீதிபதிகளின் பணியிடங்கள் 1,100-க்கும் மேல் என்ற நிலையில், பெண் நீதிபதிகளின் விகிதாச்சாரம் என்பது சுமார் 7% ஆக உள்ளது. உச்ச நீதிமன்றத்துக்கும் உயர் நீதிமன்றங்களுக்கும் வழக்கறிஞர்களிலிருந்து நீதிபதிகளைத் தேர்வுசெய்கையில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டிய அவசியத்தையே இந்தத் தகவல்கள் உணர்த்துகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x