Published : 06 Sep 2021 03:14 AM
Last Updated : 06 Sep 2021 03:14 AM

பாராலிம்பிக்: புதிய நம்பிக்கையளிக்கும் இந்திய வீரர்களின் சாதனை

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆகஸ்ட் 25 தொடங்கி நேற்றோடு நிறைவடைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா 5 தங்கப் பதக்கங்களையும் 8 வெள்ளிப் பதக்கங்களையும் 6 வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளது. மொத்தம் 19 பதக்கங்கள். இந்தியா இதுவரை கலந்துகொண்ட பாராலிம்பிக் போட்டிகளிலேயே அதிக பதக்கங்களை வென்ற போட்டி இதுதான். குறிப்பாக, ஆகஸ்ட் 30 அன்று ஒரே நாளில் 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என்று மொத்தம் 5 பதக்கங்களை வென்றது, அந்நாளை இந்தியாவின் மகிழ்ச்சிகரமான நாளாக்கிவிட்டது.

பேட்மின்ட்டன், துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் தலா 2 தங்கப் பதக்கங்களையும் ஈட்டி எறிதலில் ஒரு தங்கப் பதக்கத்தையும் இந்தியா வென்றுள்ளது. உயரம் தாண்டுதல், டேபிள் டென்னிஸ், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் ஆகியவை பதக்கங்கள் வென்ற மற்ற போட்டிகளாகும். பாராலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றிருக்கும் துப்பாக்கி சுடும் வீரர் அவனி லேகாரா, இருவேறு பிரிவுகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் சேர்த்துக்கொண்டிருக்கிறார். அவரைப் போலவே துப்பாக்கி சுடும் வீரர் சிங்ராஜ் அதானாவும் இருவேறு பிரிவுகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார். டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பவினா படேல், அப்போட்டியில் முதல் பதக்கம் பெற்றவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். அது போலவே, வில்வித்தைப் போட்டியில், தனது வெண்கலப் பதக்கத்தின் மூலமாகப் பதக்கக் கணக்கைத் தொடங்கிவைத்திருக்கிறார் ஹர்வீந்தர் சிங்.

ஒலிம்பிக் போலவே பாராலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற வீரர்களையும் பாராட்டி இந்தியப் பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் உடனுக்குடன் வாழ்த்துச் செய்திகளைப் பதிவிட்டார். வெற்றிபெற்ற வீரர்களைக் கைகுலுக்கி வாழ்த்தும் புகைப்படங்களுடன் வெளிவந்த அந்தச் செய்திகள், பெரும் கவனத்தை ஈர்த்தன. உயரம் தாண்டுதல் போட்டியில் வெற்றிபெற்ற தமிழ்நாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ.2 கோடி ஊக்கப் பரிசு அறிவித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆட்சியாளர்களும் ஊடகங்களும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அளித்த அதே கவனத்தை பாராலிம்பிக் போட்டிகளுக்கும் அளித்திருக்கிறார்கள். ஆனால், விளையாட்டு அமைப்புகளும் இந்தக் கவனத்தை அளிக்கத் தயாராக வேண்டும். பாராலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களின் உடற்தகுதிகளை வரையறுப்பதில் உள்ள தெளிவின்மைகள் இனிவரும் காலங்களிலாவது சரிசெய்யப்பட வேண்டும். வட்டு எறியும் வீரர் வினோத் குமார் வெண்கலப் பதக்கத்தை வென்றபோதிலும், உடற்தகுதியைக் காரணம்காட்டி, அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள் முன்கூட்டியே தவிர்க்கப்பட்டிருக்கலாம். இவ்விஷயத்தில், இந்திய வீரர்களுக்குத் தேவையான விழிப்புணர்வை அளிப்பதற்கு இந்திய பாராலிம்பிக் கமிட்டி உதவ வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x