Last Updated : 05 Sep, 2021 03:14 AM

 

Published : 05 Sep 2021 03:14 AM
Last Updated : 05 Sep 2021 03:14 AM

தமிழறிஞர் வ.உ.சி.

நடப்பு சட்டமன்றக் கூட்டத்தில் நாட்டுடைமையாக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழறிஞர்களின் படைப்புகளில் கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத் தலைவர் அ.சங்கர வள்ளிநாயகத்தின் படைப்புகளும் உள்ளடக்கம். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வ.உ.சி. அறக்கட்டளைச் சொற்பொழிவில் சங்கர வள்ளிநாயகம் ஆற்றிய உரை, அதே நிறுவனத்தால் ‘வ.உ.சி.யும் தமிழும்’ என்ற தலைப்பில் நூலாக வெளியாகியுள்ளது. வ.உ.சி.யின் இலக்கியப் பணிகளை ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர் சங்கர வள்ளிநாயகம். அவரின் சொற்பொழிவு வ.உ.சி.யின் தமிழ்ப் பணிகளைப் பற்றிய நல்லதொரு அறிமுகம்.

சுதந்திரப் போராட்டத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட வ.உ.சிதம்பரனார் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அரசியல் தலைவர். அதன் காரணமாகவே, வ.உ.சி. என்றதும் அவரது அரசியல் செயல்பாடுகள்தான் முதலில் நினைவுக்கு வருகின்றன. நூலாசிரியராகவும் உரையாசிரியராகவும் பதிப்பாசிரியராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அவர் ஆற்றிய தமிழ்ப் பணிகள் பெரிதும் இரண்டாம்பட்சமாகிவிடுகின்றன. தமிழறிஞர்களின் வரிசையிலும் வைத்தெண்ணப்பட வேண்டியவர் வ.உ.சி. விடுதலைப் போரில் சிறைவாசம் அனுபவித்த அரிதான தமிழறிஞர்களில் அவரும் ஒருவர்.

நவீன வள்ளுவர்

சிதம்பரனாரின் ‘சுயசரிதை’, ‘மெய்யறிவு’, ‘மெய்யறம்’, ‘பாடற்றிரட்டு’ ஆகிய நான்கு நூல்களும் செய்யுள் வடிவில் இயற்றப்பட்டவை. செய்யுள்களில் பெரும் பகுதி அவரது சிறைவாசத்தின்போது உருவானவை. வ.உ.சி.யின் சுயசரிதை அவர் சிறையில் அனுபவித்த கொடுமைகளின் வரலாற்றுப் பதிவையும் உள்ளடக்கியது. ‘மெய்யறிவு’ நூலானது, அவரது சக கைதிகள் மனந்திருந்தும்பொருட்டு அறிவுரையாக எழுதப்பட்டது. வெண்பா யாப்பில் அதிகாரம் ஒன்றுக்குப் பத்து பாடல்கள் என்ற கணக்கில் பத்து அதிகாரங்களையும் நூறு பாடல்களையும் கொண்டது. வ.உ.சி.யின் சொல்லாட்சியிலிருந்து அவர் வள்ளுவத்தை ஆழ்ந்து பயின்றதை அறியமுடிகிறது.

அவரது ‘மெய்யறம்’ குறளின் அடிப்படையில் ஐந்து இயல்களாக இயற்றப்பட்டது. திருக்குறளைப் போலவே அதிகாரத்துக்குப் பத்து பாடல்களாக 125 அதிகாரங்களில் எழுதப்பட்ட இந்த நூல் மாணவரியல், இல்வாழ்வியல், அரசியல், அந்தணவியல், மெய்யியல் என்று மனித வாழ்வை ஐந்து இயல்களாகப் பிரித்துக் காண்கிறது. பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வனப்பிரஸ்தம், சந்நியாசம் ஆகிய நால்வகை ஆசிரமங்களுக்கு மாறானது இது. வள்ளுவத்தின் சொல்லாட்சியை இந்த நூலிலும் காண முடிகிறது. வள்ளுவர் குறட்பாக்களில் உணர்த்த விழைந்த கருத்துகளை ஓரடியி லேயே எடுத்துக்காட்டியுள்ளார் வ.உ.சி. தம் சமகாலத்தின் புதிய அறங்களாய் ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்தவும் குழந்தைத் திருமணங்களைக் கண்டிக்கவும் செய்துள்ளார்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் வ.உ.சி. எழுதிய பாடல்களின் தொகுப்பான ‘பாடற்றிரட்டு’ அவரது கவியுள்ளத்தை எடுத்துக்காட்டுவது. சிறை செல்லும் முன் எழுதப்பட்ட 97 பாடல்கள் முதல் தொகுதியாகவும் சிறைவாசத்தின்போது எழுதிய 284 பாடல்கள் இரண்டாம் தொகுதியாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. வெண்பா, விருத்தம், கட்டளைக் கலித்துறை என்று யாப்பில் அவருக்கிருந்த புலமையை இந்தப் பாடல்களிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. வ.உ.சி.யின் சிறைவாசத்தால் வறுமை சூழ்ந்த அவரது குடும்பத்தின் நிலையையும் சில பாடல்கள் தெரிவிக்கின்றன.

உரையாசிரியர்

திருக்குறளின் அறத்துப்பாலுக்கும் பதினெண் கீழ்க்கணக்கில் இடம்பெற்றுள்ள மற்றொரு நூலான இன்னிலைக்கும் சைவ சமயச் சாத்திரமான சிவஞானபோதத்துக்கும் வ.உ.சி. உரை எழுதியிருக்கிறார். சிறுநூலான இன்னிலைக்கு அவர் எழுதிய உரையில், 30 நூல்களை மேற்கோள் காட்டியுள்ளது அவரது விரிந்து பரந்த வாசிப்புக்கும் உரைத்திறனுக்கும் சான்று.

அறத்துப்பாலுக்கு வ.உ.சி. எழுதிய உரை பரிமேலழகர் உரையிலிருந்து மாறுபட்டது. இயல் வகைபாடு, அதிகார வைப்பு, குறள் வைப்பு என அனைத்திலும் அவர் பரிமேலழகரிலிருந்து வேறுபட்டே நிற்கிறார். கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய அதிகாரங்களை வள்ளுவர் இயற்றவில்லை என்பது வ.உ.சி.யின் துணிபு. மூலத்திலிருந்து 44 பாட வேறுபாடுகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிவஞானபோத உரையில், பிற உரைகளைப் போல மாற்று சமயத்தாரின் கொள்கைகளைக் கண்டிக்கும் போக்கைத் தவிர்த்திருக்கிறார்.

பதிப்பும் மொழிபெயர்ப்பும்

திருக்குறளின் அறத்துப்பாலுக்கு மணக்குடவர் எழுதிய உரையையும் தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்துக்கும் பொருளதிகாரத்தின் அகத்திணை, புறத்திணை இயல்களுக்கும் இளம்பூரணர் எழுதிய உரையையும் வ.உ.சி. பதிப்பித்துள்ளார். மணக்குடவர் உரையே தமிழ் மரபுரை என்று அவர் கருதியதே அதைப் பதிப்பிக்கக் காரணம். மணக்குடவர் விளக்கம் தராத இயலுக்கும், குறள்களுக்கும் வ.உ.சி.யே உரை விளக்கங்களை எழுதிப் பதிப்பித்திருக்கிறார். சில குறள்களுக்கு மணக்குடவர் உரைக்கும் பரிமேலழகர் உரைக்கும் உள்ள வேறுபாடுகளையும் குறித்துக்காட்டியுள்ளார். தொல்காப்பியத்தின் பொருளதிகாரப் பதிப்பில் பாட வேறுபாடுகளைக் களைந்தும் சிதைவுகளை முழுமை செய்தும் வெளியிட்டுள்ளது வ.உ.சி.யின் பழந்தமிழிலக்கிய இலக்கணப் புலமையை எடுத்துக்காட்டுகிறது. அகத்திணை, புறத்திணை தவிர்த்த பொருளதிகாரத்தின் ஏழு இயல்களையும் எஸ்.வையாபுரியுடன் இணைந்து பதிப்பித்துள்ளார்.

‘மனம்போல வாழ்வு’, ‘அகமே புறம்’, ‘வலிமைக்கு மார்க்கம்’, ‘சாந்திக்கு மார்க்கம்’ ஆகியவை ஆங்கிலத்திலிருந்து வ.உ.சி. மொழிபெயர்த்த நூல்கள். இவை நான்கும் பிரிட்டனைச் சேர்ந்த தத்துவவியலாளர் ஜேம்ஸ் ஆலன் எழுதியவை. பின்னைய இரு நூல்களும் ஒரே நூலின் இரண்டு பகுதிகளாக அமைந்தவை. தமிழ் மொழியின் இயல்புக்கேற்ப மொழியாக்கம் செய்யப்பட்டவை. 1927-ல் சேலத்தில் காங்கிரஸ் மகா சபை மூன்றாவது அரசியல் மாநாட்டில் வ.உ.சி. ஆற்றிய தலைமைச் சொற்பொழிவு ‘அரசியல் பெருஞ்சொல்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. அந்த உரையில், சமகால அரசியல் பிரச்சினைகளைக் குறித்துப் பேசும்போதும் திருக்குறளை மேற்கோள் காட்டியே அவர் பேசியுள்ளார்.

பாண்டித்துரை நிறுவிய மதுரை தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பாளர்களில் வ.உ.சி.யும் ஒருவர். தமிழே வ.உ.சி. என்ற பேராளுமையை உருவாக்கியது. வள்ளுவத்தின் அறமே அவரது உருவாகி நின்றது. அரசியல் துறவறம் மேற்கொண்ட இறுதிக் காலத்திலும் தமிழே அவரது ஆறுதலாகவும் அமைந்தது.

வ.உ.சி. பிறந்த 150ஆவது ஆண்டு தொடக்கம்: செப். 5

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x