Published : 03 Sep 2021 03:14 AM
Last Updated : 03 Sep 2021 03:14 AM

பாடநூல்களின் அரசியல்

வங்க எழுத்தாளரும் பழங்குடிகள் உரிமைச் செயற்பாட்டாளருமான மஹாஸ்வேதா தேவியின் ‘திரௌபதை’ சிறுகதையை டெல்லி பல்கலைக்கழகம் தனது ஆங்கில இளநிலைப் பட்டப் படிப்புக்கான பாடத்திட்டத்திலிருந்து நீக்கியிருக்கிறது. தமிழ் எழுத்தாளர்கள் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகளும் அவ்வாறே நீக்கப்பட்டுள்ளன. பாமாவும் சுகிர்தராணியும் தமிழில் நன்கறியப்பட்டவர்கள். பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்திருப்பது இலக்கியவாதிகளின் மீது மாநில அரசுக்கு உள்ள மதிப்பை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.

பழங்குடிப் பெண் ஒருவர் நக்ஸல் அமைப்புடன் தொடர்புடையவர் என்று குற்றம்சாட்டப்படுவதை மையமாகக் கொண்ட கதை ‘திரௌபதை’. விசாரணை என்ற பெயரில் கூட்டு வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட அந்தப் பெண், தனது நிர்வாணத்தை எதிர்ப்பின் அடையாளமாக்குவார். அவமானத்துக்குள்ளாக்கப்படும் பெண்ணைக் காப்பாற்ற எந்தக் கடவுளும் வரவில்லையே என்பதைச் சுட்டிக்காட்டவே மஹாஸ்வேதா தேவி இந்தச் சிறுகதைக்கு இதிகாச பாத்திரமான திரௌபதியின் பெயரைத் தலைப்பாக்கியிருந்தார்.

‘திரௌபதை’ என்ற தலைப்புதான் பாடத்திட்டத்திலிருந்து அக்கதையை நீக்க வைத்திருக்கிறது என்றால், அதைவிடவும் அறியாமை வேறொன்று இருக்க முடியாது. திரௌபதை இந்திய மக்களின் வாழ்வோடு உள்ளூர்த் தெய்வமாக ஒன்றிணைந்துவிட்ட தொன்மம். இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு நம்பிக்கைகளுடன் அது ஊடாடிக் கலந்திருக்கிறது. ‘பாஞ்சாலி சபதம்’, பாரதியின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்று. தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் நடக்கும் தெருக்கூத்துகளில் திரௌபதை துகிலுரியப்படும் காட்சிகள் இன்னமும்கூடக் கிராமத்து மக்களிடம் எவ்வளவு மனக்கலக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் குறித்து இயக்குநர் சஷிகாந்த் ‘கேளாய் திரௌபதாய்’ என்ற தலைப்பில் ஒரு முழுநீள ஆவணப்படமே எடுத்திருக்கிறார். திரௌபதை என்ற ஒரு பெயர் தமிழகத்தில் பெரும் அரசியல் ஒருங்கிணைப்பையே நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. இதிகாச பாத்திரங்களுக்குத் தங்களது தேவைக்கும் சூழலுக்கும் காலத்துக்கும் ஏற்ப மக்கள் புத்துயிர் கொடுத்துக்கொண்டிருப்பார்கள். இதிகாசப் பாதுகாவலர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது துரதிர்ஷ்டம்.

வகுப்பறையில் பாடம் நடத்துவதற்கு ஏற்ற கதையாக இது இல்லை என்பதும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. பள்ளிக் குழந்தைகள் கைகளில் இருக்கும் செல்பேசிகளையே அச்சத்தோடு பார்க்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம். பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இன்னும் புராணக் காலத்திலேயே இருக்கிறார்கள் என்பதைத்தான் இத்தகைய காரணங்களிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. பேராசிரியர்கள் கூடி விவாதித்து முடிவுசெய்த பாடத்திட்டத்தை மேற்பார்வைக் குழுவொன்று மாற்றியமைப்பதற்கு அதிகாரமில்லை, அந்தச் சரிபார்ப்புக் குழுவிலும் வல்லுநர்கள் யாருமில்லை என்றும் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஆட்சிகள் மாறும்தோறும் அதிகாரத்துக்கு வரும் கட்சிகள் தங்களது கொள்கைகளைப் பாடநூல்களில் திணிப்பதும் தங்களுக்கு மாறான கொள்கைகளை நீக்குவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கமாகவே மாறிப்போயிருப்பது துரதிர்ஷ்டம். மிகச் சமீபத்தில்தான் உத்தர பிரதேச மாநில அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்திலிருந்து ரவீந்திரநாத் தாகூர், எஸ்.ராதாகிருஷ்ணன், சரோஜினி நாயுடு, ராஜாஜி ஆகியோரின் பாடங்களை நீக்கியது. பாடச் சுமையைக் குறைப்பதுதான் நோக்கம் என்று கூறப்பட்டாலும் பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் எஸ்.இராதாகிருஷ்ணனின் கட்டுரையை ஏன் நீக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பதிலில்லை. அதே நேரத்தில், சௌத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தின் தத்துவவியல் பாடத்திட்டத்தில் பாபா ராம்தேவ், உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் ஆகியோரைப் பற்றிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

தங்கள் வாழ்வின் பெரும் பகுதியைக் கல்விப் பணிகளுக்காகச் செலவிட்ட பேராசிரியர்கள், அதைக் காட்டிலும் தாங்கள் துணைவேந்தராகவோ கல்வித் துறை அதிகாரியாகவோ நியமிக்கப்பட்ட காலத்தின் ஆட்சியாளர்களுக்கே அதிக விசுவாசமாக இருக்கிறார்கள். கட்சி அரசியலின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டதாகவே கல்வி நிறுவனங்கள் இருக்க வேண்டும். காய்தல் உவத்தலின்றி அரசியல் கொள்கைகளின் அனைத்துத் தரப்புகளும் மாணவர்களுக்குச் சென்றுசேர வேண்டும். இலக்கியப் படிப்புகளுக்கு இது மேலும் பொருந்தும்.

இலக்கியப் பாடங்களைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்த சர்ச்சைகளில் தமிழ்நாடும்கூட விதிவிலக்கல்ல. ஆனால், அத்தகைய சர்ச்சைகள் ஆரோக்கியமான விவாதங்களாக மாறாமல் துணைவேந்தர்களின் சாமர்த்தியங்களாலேயே முடிவுக்கு வந்த வரலாறுதான் அதிகமும். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்பினருக்கான தமிழ் மொழிப் பாடத்தில் புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி’ சிறுகதையும் வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ புதினமும் இடம்பெற்றிருந்தன. அந்தக் கதைகள் குறிப்பிட்ட சில சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை வருத்தம்கொள்ளச் செய்யலாம் என்று அவற்றைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கக் கோரி தமிழ் விரிவுரையாளர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்றைத் தொடுத்தார். அதையடுத்து, புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி’ சிறுகதை பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்தது.

பல்வேறு சிறுகதைத் தொகுப்புகளின் வழியாகப் பல்லாயிரக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்ட ‘துன்பக்கேணி’க்கே அதுதான் நிலை. இலங்கையில் தோட்டத் தொழிலாளர்கள் நடத்தப்பட்ட விதத்தை நுட்பமாக விவரிக்கும் கதை அது. அதற்கு முன்பு, நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த டி.செல்வராஜின் ‘நோன்பு’ என்ற சிறுகதை, மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக எழுந்த எதிர்ப்புக் குரல்களால் நீக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

டெல்லி பல்கலைக்கழகத்தில் ஏ.கே.இராமானுஜனின் ‘முந்நூறு இராமாயணங்கள்’ என்ற ஆய்வுக்கட்டுரையை பாடத்திட்டத்திலிருந்து நீக்கியதையொட்டி தேசிய அளவில் ஆய்வறிஞர்களிடையே மிகப் பெரும் விவாதம் எழுந்தது. ஆனால், தமிழ்நாட்டில் முக்கிய எழுத்தாளர்களின் படைப்புகள் பாடத்திட்டத்தில் இடம்பெற்று, அதை நீக்கக் கோருவதற்கான எதிர்ப்புகள் உருவாகிய நிலையில், இலக்கியம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களிடமிருந்து மட்டுமல்ல, எழுத்தாளர்களிடமிருந்தும்கூடக் குறிப்பிடும் விதத்தில் கருத்துகள் ஏதும் வெளியாகவில்லை. குறைந்தபட்சம் இந்தப் படைப்புகளைக் கவனப்படுத்தி, ஒரு மறு வாசிப்பையாவது சாத்தியப்படுத்தியிருக்கலாம்.

எல்லாத் தீமையிலும் ஏதோ ஒரு நல்லதும் நடக்கும். வங்க எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவியின் கதைகள் காயத்ரி ஸ்பைவாக் மொழிபெயர்ப்பில் ஏற்கெனவே உலகம் முழுவதும் வாசிக்கப்பட்டுவருகின்றன. டெல்லி பல்கலைக்கழகப் பாடத்திட்ட சர்ச்சைக்குப் பிறகேனும் பாமாவின் ‘சங்கதி’யும் சுகிர்தராணியின் ‘கைம்மாறு’ம் உலகை வலம்வரட்டும்.

- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x