Published : 02 Sep 2021 03:13 am

Updated : 02 Sep 2021 05:54 am

 

Published : 02 Sep 2021 03:13 AM
Last Updated : 02 Sep 2021 05:54 AM

கருணாநிதியின் அரசாணையை நிறைவேற்றுவாரா ஸ்டாலின்?

cm-stalin

எஸ்.பெருமாள் பிள்ளை

கரோனா முதல் அலையின்போது தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இரண்டாவது அலையில் இதுவரை தொற்றுக்கு ஆளான மருத்துவர்களின் எண்ணிக்கை 2,000-ஐத் தாண்டிவிட்டது. மதுராந்தகம் சுகுமார், தூத்துக்குடி கல்யாணராமன், பள்ளிப்பட்டு விவேகானந்தன், மதுரை அனுப்பானடி சண்முகப்ரியா, திருச்சி மணிமாறன், வேலூர் மகிமைநாதன், சைதாப்பேட்டை ஹேமலதா என்று ஏழு அரசு மருத்துவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதுவரை சுகுமார், கல்யாணராமன் என்ற இரண்டு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமே ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. சண்முகப்பிரியாவுக்கு துணிச்சலுக்கான கல்பனா சாவ்லா விருதை வழங்கி முதல்வர் கௌரவித்துள்ளார்.

கரோனா தொற்று முதல் அலையின்போது, தொற்று உச்சத்தில் இருந்த சமயத்தில், தமிழகத்தில் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டன. அப்போது கரோனா நோயாளிகளுக்கு மட்டுமின்றி, கரோனா அல்லாத நோயாளிகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அரசு மருத்துவமனைகளில்தான் பிரசவங்கள் அதிகமாக நடைபெற்றன. தமிழகம் முழுவதும் அவசர சிகிச்சைகள், அறுவைச் சிகிச்சைகள், அவசர அறுவைச் சிகிச்சைகள் உள்பட அனைத்தும் அரசு மருத்துவமனைகளில்தான் நடந்தன. இருப்பினும் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு மற்ற மாநிலங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதிய உயர்வு மறுக்கப்படுவது வருத்தமளிக்கிறது.


முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட அரசாணை 354 என்பது, கிராமப்புறங்களில் பணிபுரியும் இளைய மருத்துவர்கள் உட்பட அனைவருக்காகவும் கொண்டுவரப்பட்டது. கிராமப்புற சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு உதவும் அரசாணை அது. இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.300 கோடி ரூபாய் மட்டுமே கூடுதலாகத் தேவைப்படும். அதிலும் பெரும் பகுதியை முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாகவே மருத்துவர்கள் அரசுக்குச் சம்பாதித்துத் தருவோம் என்பதையும் அரசிடம் பலமுறை தெரிவித்துள்ளார்கள்.

கடந்த ஜூலை 1 மருத்துவர்கள் தினத்தன்று, அதுவும் கரோனா காலத்தில் மருத்துவர்களின் நீண்ட கால ஊதிய நிர்ணயக் கோரிக்கையை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்த்தோம். நடக்கவில்லை என்பது வருத்தமாகவே உள்ளது. இது மக்களின் அரசு மட்டுமின்றி மக்களின் உயிர்காக்கும் மருத்துவர்களின் அரசாகவும் இருக்கும் என அன்றைய தினம் முதல்வர் சூளுரைத்தார். பெருந்தொற்றுக் காலத்தில் ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றப் போராடிவரும் அரசு மருத்துவர்கள் மனநிறைவுடன் பணிசெய்ய அரசு உறுதுணையாக இருப்பதுதானே நியாயம்.

கரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுத்துவரும் அரசு, களத்தில் நின்று மக்களைக் காப்பாற்றும் அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தைத் தர மறுப்பது வருத்தமளிக்கிறது. அரசாணை 354-க்கு உயிர்கொடுங்கள், 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை நிறைவேற்றித் தருவதற்கு முதல்வர் உதவ வேண்டும். மேலும், அரசு மருத்துவர்களுக்கான ‘கார்ப்பஸ் ஃபண்ட்’ கோரிக்கையையும் நிறைவேற்றித் தர வேண்டும்.

அரசு மருத்துவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டபோது, அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் இன்றைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து ஆதரவு தெரிவித்தார். அப்போது, அடுத்து அமையும் திமுக ஆட்சியில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்கள். இருப்பினும் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்ற வருத்தம் ஒவ்வொரு மருத்துவரிடமும் இருக்கிறது. முந்தைய ஆட்சியில் ஊதியக் கோரிக்கைக்காகப் போராடிய மருத்துவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டபோதும், மருத்துவர் லட்சுமி நரசிம்மன் தன் உயிரையே தியாகம் செய்தபோதும், மு.க.ஸ்டாலின் முந்தைய அரசைக் கண்டித்ததோடு, வருத்தத்தைப் பதிவுசெய்தார்.

நாட்டிலேயே தமிழகத்தில்தான் மருத்துவர்கள் ஊதியக் கோரிக்கைக்காக இவ்வளவு பெரிய விலை கொடுத்த பிறகும் கோரிக்கை நிறைவேறவில்லை. கடந்த ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணிகளை நினைவில் கொண்டு, கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலின் அப்போதைய அதிமுக அரசை வலியுறுத்தினார்.

கருணாநிதி ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை நிறைவேற்றத்தான் இப்போதும் அரசு மருத்துவர்கள் வேண்டுகிறார்கள். தங்களது கோரிக்கை நிறைவேறும்பட்சத்தில், கரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளவிருக்கும் இந்த நேரத்தில், மருத்துவர்கள் மேலும் உற்சாகமாகப் பணிசெய்வார்கள்.

- எஸ்.பெருமாள் பிள்ளை, தலைவர், அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு.
கருணாநிதியின் அரசாணைகரோனா முதல் அலைஅரசு மருத்துவர்கள்தனியார் மருத்துவமனைகள்அரசு மருத்துவமனைமு.க.ஸ்டாலின்Cm stalin

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x