Published : 31 Aug 2021 06:01 AM
Last Updated : 31 Aug 2021 06:01 AM

பள்ளிகள் திறப்பு: சவால்களும் தீர்வுகளும் என்னென்ன?

தொகுப்பு: எஸ்.கோபாலகிருஷ்ணன்

கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை ஓய்ந்து மூன்றாம் அலை குறித்த எச்சரிக்கைகள் வந்துகொண்டிருக்கும் சூழலில் தமிழகத்தில் பல மாதங்களுக்குப் பிறகு 9, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படவிருக்கின்றன. முகக் கவசம், சமூக இடைவெளி, ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி, மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து, ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிக்கு வரச் சொல்லியிருப்பது, பள்ளிக்கு வர விரும்பாதவர்கள் வீட்டிலிருந்தபடியே தொலைவழிக் கல்வியைத் தொடர அனுமதித்திருப்பது எனப் பல்வேறு நோய்த் தடுப்பு, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனாலும், பள்ளிக்கு வரும் மாணவர்கள் மருத்துவரீதியாகவும் கல்வியியல்ரீதியாகவும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்தச் சவால்கள் குறித்து மருத்துவ நிபுணர்களும் பள்ளிக் கல்வியில் நீண்ட அனுபவம்பெற்ற ஆசிரியர்களும் தமது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அவற்றுக்கான தீர்வுகளையும் முன்வைக்கிறார்கள்.

“பள்ளிக்கு வரும் மனநிலையை மாணவர்களிடம் உருவாக்க வேண்டும்!”
சு.உமா மகேஸ்வரி, அரசுப் பள்ளி ஆசிரியர், ‘நமது கல்விச் சிக்கல்கள்’ என்னும் நூலின் ஆசிரியர்.

கடந்த ஆண்டு சில மாதங்கள் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனாலும் இரண்டாம் அலையின் காரணமாக 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதேபோல் இந்த ஆண்டும் அமைந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் அசிரத்தையுடன் இருக்கக்கூடும். ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் கணிசமானோர் வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டார்கள். அவர்களைக் கண்டறிவதற்கான கணக்கெடுப்பு நடவடிக்கைகளை அரசு தொடங்கிவிட்டது. இவர்கள் அனைவரையும் மீண்டும் பள்ளிக்கு வரவைக்க வேண்டும். வேலைக்குப் போகாதவர்களும் அதிக நேரம் வீட்டில் இருந்தபடியும் வெளியில் விளையாடியும் பொழுதைக் கழிக்கப் பழகிவிட்டனர். இவர்களை எல்லாம் பள்ளிக்கு வரவைத்து, தினமும் சில மணி நேரம் வகுப்பில் உட்காரப் பழக்குவது எளிதல்ல. பள்ளிக்கு வருவது, ஆசிரியரிடமிருந்து கல்வி கற்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு புரியவைக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் பாடங்களைக் கற்பிப்பதில் முழுமையான கவனம் செலுத்த முடியும். ஆசிரியர்களுக்கு இது கூடுதல் பணிச் சுமைதான். கரோனா பெருந்தொற்றால் பல ஆசிரியர்கள் மன அழுத்தத்துக்கும் ஆளாகியிருப்பார்கள். இதையெல்லாம் மாணவர்களிடம் காண்பித்துவிடக் கூடாது. அவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ள வேண்டும்.

***

“18 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது!”
மருத்துவர் ரெக்ஸ் சற்குணம், அரசு குழந்தைகள் மருத்துவமனை முன்னாள் இயக்குநர்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாணவர்கள் சந்தித்துக்கொள்ளப்போகிறார்கள். எனவே, அவர்கள் கைகொடுப்பது, தோளில் கைபோட்டுக்கொண்டு பேசுவது உள்ளிட்ட தொடுதல் செய்கைகளில் ஈடுபடுவார்கள். அதேபோல் எவ்வளவு கட்டுப்பாடுகளை விதித்தாலும் மாணவர்கள் இடைவேளை நேரங்களிலும் உணவருந்தும்போதும் ஒன்றுகூடுவதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானது. இதையெல்லாம் செய்யாமல், எப்போதும் முகக் கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியைத் தக்கவைப்பது குறித்து மாணவர்களின் மனம்நோகாமல் அவர்களுக்குப் புரியவைத்து, நடைமுறைப்படுத்துவது மிகப் பெரிய சவால்தான். பள்ளிக்கல்வி இயக்குநரகம் மாணவர்களுக்கு எளிய மொழியில் கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களைக் கொடுக்கலாம். வாராந்திரக் கூட்டங்களில் இவற்றை மீண்டும் மீண்டும் வலியுறுத்தலாம். இவற்றையெல்லாம் தாண்டி, மாணவர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் ஒரு எல்லை வரைதான் பயனளிக்க முடியும். மாணவர்களுக்கு கரோனா பெருந்தொற்று ஆபத்து பெரிதாக இல்லை என்றாலும், அவர்களிடமிருந்து பெரியவர்களுக்குப் பரவும் ஆபத்து இருக்கிறது. ஆக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியைத் துரிதப்படுத்த வேண்டியதற்கான அவசியம் பள்ளிகள் திறக்கப்பட்டிருப்பதால் மேலும் அதிகரித்திருக்கிறது. தடுப்பூசி செலுத்தும் பணியில் தமிழகம் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. ஆனால், தடுப்பூசிகளை மத்திய அரசிடமிருந்து பெற வேண்டியிருக்கிறது. செங்கல்பட்டில் உள்ள
எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தைத் தடுப்பூசித் தயாரிப்பு மையமாகப் பயன்படுத்தலாம். இதற்கு அனுமதி
அளிக்க மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

***

“கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்!”
மருத்துவர் த.அறம், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர்.

பதின்பருவத்தினருக்கான கரோனா தடுப்பூசிகள் எதுவும் இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்த வயதினருக்கு, குழந்தைப் பருவத்தில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் வீரியம் குறையத் தொடங்கியிருக்கும். மாணவர்களுக்கான தங்கும் விடுதிகளும் திறக்கப்படவிருக்கின்றன. குழந்தைகளுக்கு நுரையீரல் தாக்குதல் ஏற்படுவதில்லை. அதனால், கரோனாவால் குழந்தைகள் பெரிதாகப் பாதிக்கப்படுவதில்லை. ஆனால், பெரியவர்களுக்குப் பரவும் வாய்ப்பு இருக்கிறது. ஆக, இறங்குமுகத்தில் இருக்கும் கரோனா பெருந்தொற்று பள்ளிகளைத் திறந்தவுடன் அதிகரித்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதே நேரம், பள்ளிகளைத் திறக்காமலே இருக்கவும் முடியாது. ஆக, பள்ளிகளில் கரோனா கட்டுப்பாடுகள் முழுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். கல்வித் துறை அதிகாரிகள் தினமும் வந்து அனைத்து வகுப்புகளிலும் சோதனை செய்ய வேண்டும். 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் நடைமுறைக்கு வர வேண்டும். அவற்றிலும் விடுதியில் தங்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பள்ளி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் பெற்றோரும் வீட்டில் இருக்கும் மற்ற பெரியவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

***

“கற்பித்தல் சார்ந்த மாற்று வழிமுறைகளைச் செயல்படுத்த வேண்டும்!”
பி.பேட்ரிக் ரெய்மாண்ட், பொதுச் செயலாளர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு.

பல மாதங்களுக்குப் பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடனடியாகப் பாடங்களைத் தொடங்க வேண்டாம். முதல் 45 நாட்களுக்கு மாணவர்களை மீண்டும் பள்ளிக்கல்வி நடைமுறைக்குப் பழக்குவதற்கான இணைப்பு வகுப்புகளை நடத்தச் சொல்லியிருக்கிறார்கள். மாணவர்கள் மீண்டும் அன்றாடம் பள்ளிக்கு வரும் பழக்கத்தை உருவாக்க இது உதவிகரமாக இருக்கும். ஆனால், 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த 45 நாட்களில் வழக்கமான பாடங்கள் இல்லாமல் இருப்பது புதிய சிக்கல்களைக் கொண்டுவரும். திடீரென்று அவர்களைப் பொதுத்தேர்வு, நீட் உள்ளிட்ட உயர்கல்வித் தேர்வுகளுக்குத் தயார்படுத்துவது கடினமாகிவிடும். பொதுத்தேர்வை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், பள்ளிக்கு வருவதன் அவசியத்தை அவர்கள் தாமாகவே உணர்ந்திருப்பார்கள். எனவே அவர்களுக்குப் பாடங்களைக் கற்பிப்பதற்கான மாற்று வழிமுறைகளை யோசிக்கலாம். எளிதாக இருக்கும் பாடங்களை உடனடியாகக் கற்பிக்கத் தொடங்கலாம். ஒருநாள் கல்வித் தொலைக்காட்சியில் கற்பித்தவற்றை அடுத்த நாள் பள்ளி வகுப்பில் தொடரலாம். அதில் ஏற்பட்ட சந்தேகங்களைப் போக்கலாம். கல்வித் தொலைக்காட்சிக்கும் நேரடி வகுப்புக்கும் ஒரு இணைப்பை ஏற்படுத்தலாம். மாணவர்களை இடைவெளியுடன் அமரவைத்து, சிறுசிறு செயல்பாடுகள், விளையாட்டுகள் மூலம் பழைய பாடங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரலாம். இதுபோல் செயல்வழிக் கற்பித்தல் முறைகள் மூலம் பள்ளிகளுக்கு வருவதற்கான மாணவர்களின் ஈடுபாட்டையும் அதிகரிக்க முடியும். வழக்கமான முறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தால், இத்தனை நாட்கள் வீட்டில் மனம்போன போக்கில் இருந்து பழகிவிட்டவர்கள் பள்ளிக்கு வருவதை நிறுத்திவிடுவார்கள். ஒருவேளை தொற்று அதிகரித்து, மீண்டும் பள்ளிகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டால், அப்போது மீண்டும் கல்வியைத் தொடர்வதற்கான மாற்று வழிகளையும் இப்போதே யோசிக்க வேண்டும். கல்வித் தொலைக்காட்சியை மட்டும் நம்பிக்கொண்டிருக்கக் கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x