Published : 30 Aug 2021 03:13 AM
Last Updated : 30 Aug 2021 03:13 AM

கடல்வளத்தைக் கெடுக்கும் இறால் பண்ணைகள்

தமிழ்நாட்டில் உவர்நீர் இறால் பண்ணைப் பூங்காக்கள் அமைக்க தமிழ்நாடு அரசு 2020-ல் திட்டமிட்டது. மாநில அரசின் ஏற்பாட்டில், மைய உவர்நீர்ப் பண்ணை நிறுவனம் (CIBA, சென்னை) 2017-ல் தொலையுணரி-புவி தரவுத் தொகுப்பு (Remote sensing - Geographical Information System) தொழில்நுட்பத்தின் உதவியுடன், தமிழ்நாட்டுக் கடற்கரைகளில் இறால் பண்ணை அமைப்பதற்குப் பொருத்தமான நிலங்களைப் பட்டியலிட்டது. விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள மாநிலக் கடலோரங்களின் கழிமுகங்கள், காயல்கள், ஓடைகள் உள்ளிட்ட 56,000 ஹெக்டேர் உவர்நீர்ப் பரப்புகளில் 10%-தான் இறால் பண்ணைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் அதிகமான பரப்புகளில் இறால் வளர்ப்புக்கு வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது.

இந்த ஆய்வின் பின்னணியில், மக்கள் இறால் பண்ணைகளில் மிகுதியாக முதலீடு செய்வதற்கு இசைவாக அடிப்படை வசதிகளை வழங்கும் வகையில் ‘சிப்காட்- மாதிரி’ இறால் பண்ணைப் பூங்காக்களை நிறுவ முந்தைய அரசு திட்டமிட்டது. மையப்படுத்திய நீர்வழங்கல் கட்டமைவு, கழிவுக் குட்டைகள், குஞ்சு பொரிப்பகம், சினை இருப்பு மேலாண்மை வசதிகளை உட்படுத்தி அமைக்கப்படும் என்று மாநில மீன்வளத் துறை அறிவித்தது. வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் முயற்சி இது.

1980-களின் இறுதியில் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியக் கடற்கரைகளில் உவர்நீர் இறால் வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கின. ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்கீழ் அதற்குச் சாதகமாகக் கொள்கைகள் வகுக்கப்பட்டன. ஒன்றிய அரசு மீன் வளர்ப்போர் வளர்ச்சி முகமை, அதைத் தொடர்ந்து உருவான உவர்நீர் மீன் வளர்ப்போர் வளர்ச்சி முகமை ஆகிய இரண்டு அமைப்புகளுக்கும் ஆதரவாகச் செயல்பட்டது. 80,000 ஹெக்டேர் நிலங்கள் இறால் பண்ணைகளாக மாற்றப்பட்டிருந்தன. 1993-ல் ஆண்டுக்கு 70,000 டன்னாக இருந்த கடலுணவு ஏற்றுமதியை கி.பி.2000-த்துக்குள் 2,00,000 டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ‘நீலப் புரட்சித் திட்டம்’ மீனவர் வளர்ச்சித் திட்டங்களை உட்படுத்துவதாக ஒன்றிய அரசு குறிப்பிட்டது எனினும் பெருநிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்கே அத்திட்டம் உதவியது. 1993-94-ல் ஆறு இறால் வளர்ப்பு நிறுவனங்கள் ஈட்டிய சராசரி நிகர லாபம் 300%.

1990-களில் பெரும் வளர்ச்சி கண்ட உவர்நீர் இறால் வளர்ப்பு 2004 சுனாமிக்குப் பிறகு வீழ்ச்சியைச் சந்தித்தது. இடைக்காலத்தில் மிகுதியான நச்சு அளவின் காரணமாக இறக்குமதியாளர்கள் இந்திய இறாலை ஏற்கவில்லை. 2009-ல் லிடொபெனேயஸ் வானமி (Litopenaeus vannamei) என்னும் அயல் இன இறாலின் அறிமுகத்தோடு கடற்கரைகளில் இறால் பண்ணைகள் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தன. இந்தியாவின் உவர்நீர்/ கடல் இறால் ஏற்றுமதியில் வானமி இறாலின் பங்கு 80% (கடலுணவு ஏற்றுமதியில் 50%).

1,350 ஹெக்டேர் பரப்பில் அமைந்த பிச்சாவரம் கண்டல் வனம் 17 கிராமங்களிலுள்ள மக்களுக்குப் பகுதி/ முழுமையான வாழ்வாதாரமாக இருந்துவந்தது (மீன் அறுவடை ஆண்டுக்கு 245 டன்). கிள்ளைச் சதுப்புநிலம் ஆண்டுக்கு 100 டன்களுக்குக் குறையாத இறால் அறுவடை தந்துகொண்டிருந்தது. இறால் பண்ணைகள் கண்டல் வனங்கள், சதுப்புகளிலிருந்து இடையறாது நீரைக் கணக்கின்றி உறிஞ்சியெடுத்ததன் விளைவாகப் பிச்சாவரம்-கிள்ளை உவர்நீர்ப் பரப்புகள் சுருங்கிப்போயின; இறால் பண்ணைக் கழிவுகளை இந்நீர்நிலைகளிலும் கடலிலும் கலக்கவிட்டதால் மீன்வளம் வீழ்ச்சியடைந்தது. அங்கு வலைவீசும் மீனவர்கள் தோல் நோய்ப் பாதிப்புகளுக்கு உள்ளாயினர். கடற்கரைச் சமூகங்கள் கடலுக்குச் செல்லும் பொதுப்பாதைகள் மறிக்கப்பட்டதால் பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடித் தொழிலைத் தொடர்வதிலும் சிரமம் ஏற்பட்டது.

கிள்ளை இறால் பண்ணைகள் ஐந்து வருவாய்க் கிராமங்களைச் சார்ந்த விவசாயிகளுக்குக் கொடுங்கனவானது. நெல்லோ நிலக்கடலையோ எதுவும் இந்த மண்ணில் முளைக்கவில்லை. அருமையான விளைச்சல் தந்துவந்த நிலங்கள் மேல்மண் உவர்ப்பாகி விவசாயத்துக்குத் தகுதியற்றுப் போய்விட்டன. குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டது. வேளாண் நிலங்களில் உவர்நீர் ஏற்றத்தினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அவர்கள் அகதிகளாகி நகர்ப்புறங்களுக்கு இடம்பெயரத் தொடங்கினர்.

பாக் நீரிணைப் பகுதி ஆழம் குறைவான இடம். ஆனால் மீன் உற்பத்தியாகுமிடம். காவிரியாற்று நன்னீரைக் கடலில் கொண்டுசேர்க்கும் முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகளும் சதுப்பு நிலங்களும் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்கும் குஞ்சுகள் வளர்வதற்கும் பொருத்தமான இடங்கள். தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பாக் நீரிணைக் கடற்கரைகளில் இறால் பண்ணைகளால் வேளாண் நிலங்களும் கரைக்கடல் மீன்வளமும் பாதிப் படைந்துள்ளதாக விவசாயிகளும் மீனவர்களும் தெரிவிக்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தின் 19 கடற்கரைக் கிராமங்களிலும் இறால் பண்ணைகள் இயங்கிவருகின்றன.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு மீன் உற்பத்தியில் ஆந்திரத்தின் பங்கு 37% (36.1 லட்சம் டன்); இதில் பெரும்பகுதி கடலோர இறால் பண்ணைகளின் பங்களிப்பு. ஆனால், மேற்கு கோதாவரி உள்ளிட்ட கடற்கரைகளில் பண்ணைக் கழிவுகளின் வெளியேற்றத்தால் நிலத்தடிநீர் முழுமையாக மாசடைந்துள்ளது. வங்கதேசக் கடற்கரைகளில் வாழும் பெண்களுக்குக் கருப்பை நீக்கு சிகிச்சைகள் மிக அதிக எண்ணிக்கையில் நிகழ்வதாக ஒரு ஊடகர் தனது ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார். கடலோர உவர்நீர் இறால் பண்ணைகளில் பணிபுரியும் பெண்களுக்கு ஏற்படும் தோல் நோய்தான் கருப்பைக் கோளாறுகளுக்குக் காரணம் எனக் கண்டறிந்துள்ளனர். தமிழ்நாட்டுக் கடலோரத்தில் இயங்கிவரும் 1,892 (பதிவுபெற்ற) இறால் பண்ணைகளில் பெண்களே மிகுதியாக வேலைபார்க்கின்றனர். பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்ந்து, கடலோர நிலத்தடி நீர்வளம் உவர்ப்பாகிக்கொண்டிருக்கும் நிலையில், இறால் பண்ணைகளின் சூழல், சுகாதாரத் தாக்கம் குறித்து துறைசார் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கிராம சுயராஜ்ய இயக்கத் தலைவர் ஜெகநாதன் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு (1995) கடற்கரையில் இறால் பண்ணைகளைத் தடை செய்ததோடு வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கியது. அவற்றில் ‘விவசாய நிலங்களை இறால் பண்ணைகளாக மாற்றுவதற்கு எதிரான தடை உடனடியாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும், இறால் வளர்ப்புக்காக இறால் குஞ்சுகளைக் கழிமுகங்கள், ஓடைகள், கடலிலிருந்து சேகரிப்பதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்’ என்பவை முக்கியமானவை.

தமிழ்நாட்டுக் கடலோர விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை இறால் பண்ணைகளிடமிருந்து மீட்டெடுப்பது அரசின் கடமையாகும்.

- வறீதையா கான்ஸ்தந்தின், பேராசிரியர், கடல் சூழலியல் - வள அரசியல் ஆய்வாளர், vareeth2021@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x