Published : 30 Aug 2021 03:13 AM
Last Updated : 30 Aug 2021 03:13 AM

தொல்லியல் படிப்புகள்: ஆதரிக்குமா அரசு?

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் அளித்த வரலாறு மற்றும் தொல்லியல் என்ற முதுகலைப் பட்டப்படிப்பு, முதுகலை வரலாற்றுக்கு இணை இல்லை என்று 2013-ல் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின் வாயிலாக முடிவெடுக்கப்பட்டது. இதனால், இங்கு படித்த மாணவர்கள் பல விதத்தில் அல்லலுற்றும், அரசுக்குப் பல முறையீடுகளை வைத்தபோதும் ஒன்றும் நடக்கவில்லை. பின்னர், 2020-ல் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் தமிழ்நாடு தொல்லியல் துறைக்குத் தேர்வுசெய்யப்பட்ட தொல்லியல் அலுவலர்கள் பதவிக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் தொல்லியல் படித்த மாணவர்களுக்கு, தேர்வு எழுதி மதிப்பெண் பெற்றும், வாய்ப்பு மறுக்கப்பட்டது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள், இந்திய அரசுத் தொல்லியல் துறையில் பணிபுரியும்போது, ஏன் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையில் பணிபுரிய இயலாது என்பது விளங்கவில்லை. இத்தகைய சூழலுக்கு அறிவுப் புலங்களுக்கிடையேயான அரசியலும் ஒரு காரணமாகும். சில சூழல்களில் வரலாற்றுப் பாடத்தில் தொல்லியலுக்கு உரிய இடம் அளிப்பதில்லை. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டபோது, அங்கு பட்டம் பெற்ற மாணவர்களும் பல நிறுவனங்களில் பணிக்குச் சேர இயலாமல் அல்லலுற்றார்கள்.

தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், மாணவர்கள் புலிமான்கோம்பை நடுகற் கல்வெட்டைக் கண்டுபிடித்ததன் வாயிலாகவும், கொடுமணல் அகழாய்வின் வாயிலாகவும் பல தமிழி எழுத்துக்கான சான்றுகள் வெளிவந்துள்ளன. தமிழுக்குச் செம்மொழித் தகுதி வருவதற்கும் இத்தகைய கண்டுபிடிப்புகள் உதவியுள்ளன. தொல்லியலை முறையான பாடமாக இளங்கலையில் கற்பிக்கும்போதுதான் திறன்மிக்க ஆய்வாளர்களை உருவாக்க இயலும்.

தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் பல வரலாற்றுத் துறைகள் உள்ளன. இவற்றில் பல இடங்களில் தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் பாடங்கள் நடத்தப்படுவதில்லை. தொல்லியல் படித்தவர்கள் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்படுவதில்லை. சிலர் நவீன கால, அமெரிக்க வரலாறுதான் வேண்டும் என்பார்கள். உலக வரலாறு, அமெரிக்க வரலாற்றுடன் இந்திய, தமிழ்நாடு வரலாறும், தொல்லியலும், கல்வெட்டியலும் மாணவர்களுக்குப் பாடங்களாக நடத்தப்பட வேண்டும். மாணவர்கள் உலக வரலாற்றுடன், தமிழ்நாட்டுத் தொல்லியலையும், கல்வெட்டியலையும், நாணயவியலையும் படிப்பது மிகவும் அவசியமாகும்.

இதற்காகத் தொல்லியல் பாடத்தைப் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் உள்ள வரலாற்றுத் துறைகளில் சில பணியிடங்களை ஒதுக்க வேண்டும். தொல்லியல் வேறு, வரலாறு வேறு என்ற குறுகிய மனப்பான்மை ஆய்வாளர்களிடையே வரக் கூடாது. வரலாறும் தொல்லியலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்போல. முறையாகப் பயிற்சிபெற்ற தொல்லியல் ஆய்வாளர்கள் தொல்லியல் பாடங்களை நடத்துவது மிகவும் அவசியமாகும். தமிழக அரசு இதற்கான நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும்.

தொல்லியல் என்றால், ஒருசில தொல்பொருள்களைக் கண்டுபிடித்து வெளியிடுவது மட்டும் அல்ல. முறையான கோட்பாடுகளின் அடிப்படையிலும், அறிவியல் அணுகுமுறைகளின் அடிப்படையிலும் ஆய்வுகள் நடத்தப்பெற வேண்டும். தற்காலத் தொல்லியல் ஆய்வுகள் டி.என்.ஏ. ஆய்வுகள், அறிவியல் பகுப்பாய்வுகள் என வளர்ந்துவருகின்றன. எனவே, முறையான தொல்லியல் ஆய்வுகளை ஊக்குவிக்க வேண்டும்.

தொல்லியல் ஆய்வுக்கென ஆய்வுத் துறைகள் புதியதாக உருவாக்கப்பட வேண்டும். ஏனெனில், தமிழ்நாட்டின் பண்பாட்டு வளர்ச்சிகளை முழுமையாக ஆய்வுசெய்ய ஒருசில தொல்லியல் துறைகளால் மட்டும் இயலாது. பல தொல்லியல் இடங்கள் வேகமாக அழிந்துவருகின்றன. தொல்லியல் அகழாய்வு செய்து அறிக்கைகளை வெளியிடுவது என்பது சாதாரணப் பணியல்ல. இத்தகைய ஆய்வுகளைத் தொடர, தமிழ்நாட்டின் மேலும் இரு பல்கலைக்கழகங்களில் (மேற்கு, தென்தமிழ்நாட்டுப் பகுதிகளில்) தொல்லியல் துறை தொடங்குவது அவசியமாகும். மேலும், வளர்ச்சித் திட்டங்களினால் அழியும் தொல்லியல் சின்னங்களைப் பதிவுசெய்யக் கவனம் செலுத்த வேண்டும். அறிவியல் ஆய்வுகளை ஊக்குவிக்கும் வகையில் பல்கலைக்கழகத் தொல்லியல் துறைகள் மேம்படுத்தப்பட வேண்டும். தற்போதுள்ள தொல்லியல் துறைகளில் ஓரிரு ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள். ஒருகாலத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையில் ஏழு பேராசிரியர்கள் பணிபுரிந்தனர். எனவே, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை முறையாக நிரப்புவதும் அவசியமாகும்.

சமூக ஊடகங்களின் வழி தவறான செய்திகளும், கட்டுக்கதைகளும் பரவும் சூழலில், முறையாகப் பயிற்சி பெற்ற தொல்லியல் ஆய்வாளர்கள் வழியாகப் பல துறை ஆய்வுகளை (தொல்விலங்கியல், தொல்தாவரவியல்) ஊக்கப்படுத்துவது அவசியமாகும். புனேவில் உள்ள தக்காணக் கல்லூரியில் 20-ம் நூற்றாண்டில் பேராசிரியர் எச்.டி.சங்காலியாவால் பல்துறை சார் ஆய்வுக்கூடங்கள் உருவாக்கப்பட்டன. அதுபோலத் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் பல்துறைசார் ஆய்வுக்கூடங்கள் அமைத்து, முறையான தொல்லியல் ஆய்வுகளை ஊக்கப்படுத்த வேண்டும். செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் நல்கைகள் தமிழ்ப் பாடத்தில் படித்தவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகின்றன. தொல்லியல், கல்வெட்டியல் சார்ந்த ஆய்வாளர்களை இத்தகைய நிறுவனங்களில் நியமிக்க வேண்டும். தொல்லியல் வரலாறு, பண்பாட்டு ஆய்வுசெய்யும் பலர் தமிழில் ஆய்வுசெய்கின்றனர். இவர்களுக்கும் குறிப்பிட்ட அளவில் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்கான நல்கைகள் வழங்கப்பட வேண்டும்.

தொல்லியலுக்கும், தொல்லியல் படித்தவர்களுக்கும் பல கல்வி நிலையங்களில் உரிய மதிப்பு கிடைப்பதில்லை. தொல்லியல் பாடம் விளிம்பில் வைக்கப்பட்டிருக்கிறது. இதையும், ஏனைய அறிவுப்புலங்களையும் பிணைத்துள்ள தளைகளை அவிழ்ப்பதும், கட்டுக்கதை உருவாக்கும் அணுகுமுறைகளை விடுத்து, அறிவியல்பூர்வமான ஆய்வை மேற்கொள்வதும், தமிழ்ச் சமூகத்தின் வேரைத் தேடும் முயற்சியை முடுக்கிவிடுவதும் சமூகக் கடமைகளாகும்.

- வீ.செல்வகுமார், தலைவர், கடல்சார் வரலாறு & தொல்லியல் தூறை, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தொடர்புக்கு: selvakumarodi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x