Published : 18 Feb 2016 09:07 AM
Last Updated : 18 Feb 2016 09:07 AM

தேர்தல்.. கொள்கை.. கூட்டணி! - சொத்து Vs வாக்கு

1857 - இந்தியாவின் ஆகப் பெரிய ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்ட ஆண்டு. அப்போது வெடித்துக் கிளம்பிய சிப்பாய் புரட்சிக்குப் பிறகே கிழக்கிந்தியக் கம்பெனி யிடமிருந்த அதிகாரத்தைத் தன்வசப்படுத்தியது பிரிட்டிஷ் அரசு. விக்டோரியா மகாராணியின் நேரடி ஆளுகைக்குள் வந்தது பிரிட்டிஷ் இந்தியா. அன்று தொடங்கி தொண்ணூறு ஆண்டுகளுக்கு பிரிட்டிஷாரே நம்முடைய ஆட்சியாளர்கள்.

ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் உள்ளங்கைக்குள் அடக்கி வைத்திருந்த பிரிட்டிஷாருக்கு 1909-ல் லேசான மனமாற்றம் வந்தது. குவிந்துகிடக்கும் அதிகாரத்தைக் கொஞ்சம் போலப் பிரித்து இந்தியர்களுக்கும் கொடுக்கலாமே என்று யோசனை அரும்பியிருந்தது. அதை எப்படிக் கொடுக்கலாம் என்பது குறித்து அறிக்கை அளிக்கும் பொறுப்பை பிரிட்டிஷ் இந்திய அமைச்சர் எட்வின் மாண்டேகுவும் கவர்னர் ஜெனரல் செம்ஸ்போர்டும் எடுத்துக்கொண்டனர்.

இருவர் கொடுத்த பரிந்துரைகள், அவற்றின் மீதான விவாதங்கள், சீர்திருத்தங்களைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் இந்தியாவில் தேர்தல் நடத்துவதற்கு வசதியாக 23 டிசம்பர் 1919 அன்று புதிய சட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி அடுத்த ஆண்டே மத்திய சட்டசபைக்கும் மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அப்போது வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை கிடையாது. 22 வயது ஆகியிருக்க வேண்டும். கூடவே, அரசுக்குச் சொத்துவரி செலுத்த வேண்டும். அவர்களுக்கே வாக்குரிமை. இன்னபிறர் அனைவரும் வெறும் பார்வையாளர்கள். முக்கியமாக, பெண்களுக்கு வாக்குரிமை இல்லை. 10 ரூபாய் நிலவரி கட்டுவோர் கிராமப்புற வாக்காளர்கள். மூன்று ரூபாய் நகராட்சி வரி செலுத்துவோர் நகர்ப்புற வாக்காளர்கள். இத்தனை வடிகட்டலுக்குப் பிறகு சென்னை மாகாண வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 12 லட்சம்.

மாகாண சட்டசபையின் ஆட்சிக்காலம் மூன்றாண்டுகள். ஆளுநர் விரும்பினால் அதனை ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளலாம். அதுபோலவே, அவர் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் சட்டசபையைக் கலைத்துவிடலாம். ஆக, அன்று தொடங்கி இன்றுவரை ஆளுநர் பதவி என்பது சர்ச்சைக்குரியதாகவே இருந்துவருகிறது.

சென்னை மாகாண சட்டமன்றத்தில் மொத்தம் 132 உறுப்பினர்கள். அவர்களில் 98 பேரைத் தேர்தல் மூலமும் எஞ்சிய 34 பேரை நியமன முறையிலும் தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுத்தொகுதி, தனித்தொகுதி என்ற பிரிவினை அப்போது முதலே வழக்கத்தில் இருந்தது. குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மக்கள், இஸ்லாமியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், இந்தியக் கிறித்தவர்கள், ஐரோப்பியர்கள் என்று தனித்தொகுதிகள் வரையறுக்கப்பட்டிருந்தன.

அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் சென்னை மாகாண அரசியல் களத்தில் இரண்டு கட்சிகள் பிரதானமாக இருந்தன. இந்திய தேசிய காங்கிரஸ், நீதிக்கட்சி. 1920 செப்டம்பர் மாதத்தில் தேர்தல் என்று அறிவிப்பு வெளியானபோது, காங்கிரஸ் ஓர் அதிரடி முடிவை எடுத்தது. நாங்கள் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை!

- ஆர். முத்துக்குமார், எழுத்தாளர். ‘இந்தியத் தேர்தல் வரலாறு’ முதலான நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: kalaimuthukumar@gmail.com

(கோஷம் போடுவோம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x