Published : 25 Aug 2021 03:15 AM
Last Updated : 25 Aug 2021 03:15 AM

ஜிஎஸ்டி கவுன்சிலில் மாநிலங்களின் வாக்குரிமை

ச.ராஜா சேது துரை

கடந்த மே மாத இறுதியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 43-வது கூட்டத்துக்குப் பிறகு, தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுப்பு மாநிலங்களுக்குச் சமமான வாக்கு என்ற தற்போதைய கொள்கைக்கு எதிராகக் கடுமையாக வாதிட்டார். மாநிலங்களின் மக்கள்தொகை அல்லது வருவாய் அளவின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட விகிதாச்சார வாக்குரிமையை அவர் கோரினார்.

43-வது கூட்டத்தில், தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள், கோவிட் -19 மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு வரிச்சலுகையை விரும்பின. சில சிறிய மாநிலங்கள் அதற்கு ஆதரவாக இல்லை. அதற்குக் காரணம் அந்தச் சிறிய மாநிலங்களில் கோவிட்-19 பாதிப்பு ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது, மிக முக்கியமாக, எந்த ஒரு வரிச் சலுகையும் ஒன்றிய அரசின் வரிப் பகிர்வு மூலம் வரும் அவர்களின் வருவாயைப் பெருமளவு பாதிக்கிறது. இந்தக் கருத்து வேறுபாடு கவுன்சிலில் பெரிய மற்றும் சிறிய மாநிலங்களுக்கு இடையேயான மோதலை வெளிப்படையாகப் பிரதிபலிக்கிறது.

ஜிஎஸ்டி கவுன்சிலில் வாக்களிக்கும் முறை

இந்த கவுன்சிலில் மொத்தம் 33 உறுப்பினர்கள், ஒன்றிய அரசின் இரண்டு உறுப்பினர்களாக நிதியமைச்சரும் துணை நிதியமைச்சரும் உள்ளனர். அவர்களோடு 31 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் பிரதிநிதிகளும் உள்ளனர். இவர்களில் 17 உறுப்பினர்கள் கூட்டத்தின் கோரத்தை (Quorum) உருவாக்குகிறார்கள். எந்த ஒரு முடிவும் அதிகபட்சமாக 75% வாக்குகளைப் பெற்றால் மட்டுமே வெற்றிபெற முடியும். இரண்டு உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றிய அரசாங்கத்திற்கான மதிப்பு, மொத்த வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கு (33%) ஆகும். மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு அனைத்து மாநிலங்களும் சேர்ந்து பகிர்ந்துகொள்கின்றன. ஒன்றிய அரசுக்கு மூன்றில் ஒரு பங்கு விகிதாச்சாரத்தை ஒதுக்குவதற்கான காரணங்கள் ஜிஎஸ்டி கவுன்சிலின் சட்ட அமைப்பில் விளக்கப்படவில்லை. பெரும்பான்மைக்கு 75% தேவைப்படுகிறது. ஆனால், அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து 67% வாக்குகள் மட்டுமே உள்ளதால், இந்த வாக்களிப்பு விகிதம் கவுன்சிலில் ஒன்றிய அரசை அதிக சக்திவாய்ந்ததாக ஆக்குகிறது. எனவே, ஒன்றிய அரசின் இந்த மூன்றில் ஒரு பங்கு விகிதாச்சாரத்தை மாற்றாமல், மாநிலங்களுக்கு எந்த முறையில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் பரிந்துரைக்கப்பட்டாலும் பயனில்லை.

தற்போதுள்ள அமைப்பு மாநிலங்களுக்கு ஓரளவு பலத்தை அளிக்கிறது. ஏனெனில், இது ஒன்றிய அரசுக்கும் பொருந்தும்; 33% வாக்குகள் மட்டுமே உள்ளதால், சில மாநிலங்களின் ஆதரவு இல்லாமல் அவர்களால் தனியாக எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியாது. தற்போதைய வாக்களிப்பு முறை உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டாலும் வாக்களிக்காமல் இருக்க அனுமதிக்கிறது. எனவே, இது வாக்களிப்பில் பங்கேற்கும் உறுப்பினர்களின் அடிப்படையில் வாக்கு மதிப்பு மாறும் கட்டமைப்பாகும். இது ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான அரசியல் சமன்பாடுகளுக்கு ஏற்றவாறு மாறலாம். இந்தச் சூழ்நிலையில், இரண்டு வழிகளில் மாநில அரசுகள் ஒன்றிய அரசின் முடிவுகள் கவுன்சிலால் நிறைவேற்றப்படுவதைத் தடுக்கலாம். முதலில், கோரம் 17 ஆக இருப்பதால், அதே எண்ணிக்கையிலான மாநிலங்கள் கவுன்சில் கூட்டத்தைப் புறக்கணிப்பதன் மூலம் தடுக்கலாம். இரண்டாவதாக, அதைத் தடுக்க அவர்களுக்குச் சில மாநிலங்களின் ஆதரவு தேவை.

இரண்டு மாறுபட்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்வோம், குறைந்தபட்சம் 17 உறுப்பினர்கள் கலந்துகொண்டு அனைவரும் வாக்களிக்கும் கவுன்சில் கூட்டம். மற்றொன்று, அனைத்து (33) உறுப்பினர்களும் கலந்துகொண்டு அனைவரும் வாக்களிக்கும் கவுன்சில் கூட்டம். முதல் சூழ்நிலையில், ஒன்றிய அரசின் இரண்டு பிரதிநிதிகள், மாநிலங்களிலிருந்து 15 பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு வாக்களிப்பார்கள். தற்போதைய திட்டத்தின்படி, ஒன்றிய அரசு 33% வாக்குகளையும், 15 மாநிலங்கள் மீதமுள்ள 67% வாக்குகளைப் பகிர்ந்துகொள்கின்றன. ஒவ்வொரு மாநிலமும் தோராயமாக 4.5% வாக்குகளைப் பெறும். எனவே, ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற அல்லது தடுக்க, குறைந்தபட்சம் பத்து மாநிலங்கள் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களிக்க வேண்டும், இது கலந்துகொள்ளும் மாநிலங்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆகும். இரண்டாவது சூழ்நிலையில், இரண்டு ஒன்றிய அரசுப் பிரதிநிதிகள் மற்றும் 31 மாநிலங்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு வாக்களித்தாலும் இதே நிலைதான். இங்கே ஒவ்வொரு மாநிலமும் தோராயமாக 2.2% வாக்குகளைப் பெறுகிறது, எனவே, ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற அல்லது தடுக்க, அதற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களிக்க 20 மாநிலங்கள் தேவை. ஆக, இதுவும் கலந்துகொள்ளும் மாநிலங்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆகும். எனவே, கோரத்தின் எண்ணிக்கை எதுவாக இருந்தாலும், கவுன்சிலில் எந்தவொரு முடிவையும் தடுக்க அல்லது நிறைவேற்றுவதற்குக் கலந்துகொள்ளும் மாநிலங்களின் வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு தேவைப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலின் தற்போதைய வாக்களிப்பு முறை ஒன்றிய அரசுக்கு வீட்டோ அதிகாரத்தை வழங்குவதால், எந்தச் சீர்திருத்தமும் கவுன்சிலில் மாநிலங்களுக்கான வாக்கு மதிப்பை மாற்றாது.

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம்

மக்கள்தொகை அல்லது வரி வருவாய் போன்ற அளவுகளுக்கு ஏற்ப வாக்கு மதிப்புக் கொடுப்பது பற்றிய எந்த விவாதமும், வரி இணக்கத்தின் அடிப்படைக் கொள்கையை மட்டுமே பாதிக்கும். மக்கள்தொகைக்கு ஏற்ப விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை எடுத்துக்கொள்ளுங்கள்; இந்தியாவின் ஆதார் அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி ஜிஎஸ்டி கவுன்சிலில் உள்ள 31 உறுப்பு மாநிலங்களில், இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் மிகப் பெரிய மாநிலமான உத்தர பிரதேசம் 17.35%-மும், மிகச் சிறிய மாநிலமான சிக்கிம் 0.05%-மும், இடைப்பட்ட இடத்தில் இருக்கும் பஞ்சாப் 2.2%மும் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. இந்த விகிதாச்சார மதிப்பை ஜிஎஸ்டி கவுன்சிலில் மாநிலங்களின் வாக்கு சதவீதமான 67%-க்குச் சமன்செய்தால், மிகப் பெரிய மாநிலத்துக்கு 12%-மும், சிறிய மாநிலத்துக்கு 0.04%-மும், இடைப்பட்ட மாநிலத்துக்கு 1.5%-மும் கிடைக்கும். ஆனால், தற்போதைய திட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மிகக் குறைந்த வாக்கு மதிப்பாக 2.2% கிடைப்பதால், 50%-க்கும் அதிகமான மாநிலங்கள் தங்கள் வாக்கு மதிப்பை இழக்க நேரிடுகிறது. எனவே, இந்த மாற்றம் எளிய, பெரும்பான்மைப் பார்வையில் சாத்தியமில்லை.

அதேபோல், மாநிலத்தின் வரி வருவாயை விகிதாச்சார அளவுகோலாகக் கருதுவோம். வரி வருவாய் அந்தந்த மாநிலத்தின் உற்பத்தி அளவை அடிப்படையாகக் கொண்டது. இது முக்கியமாக, மாநிலத்தின் புவியியல், நிலஅளவு, மக்கள்தொகை போன்ற பண்புகளுடன் தொடர்புடையது. வரவிருக்கும் ஆண்டுகளில் இது மாறப்போவது இல்லை. எனவே, இதை அடிப்படையாகக் கொண்டு வாக்குரிமை விகிதாச்சாரத்தை மாற்றுவது முற்றிலும் நியாயமற்றது.

தற்போதைய அமைப்பை மாற்றுவதற்கான எந்தவொரு பரிந்துரைக்கும் முன், நேர்மையான பதில் தேவைப்படும் ஓர் அடிப்படைக் கேள்வி என்னவென்றால், ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற 75% பெரும்பான்மை தேவைப்படும் ஒரு கவுன்சிலில், ஒரு உறுப்பினர் 25%-க்கும் அதிகமான மதிப்பைக் கொண்டிருப்பது நியாயமா? கவுன்சிலின் எந்தவொரு உறுப்பினருக்கும் வீட்டோ அதிகாரம் கொடுப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. அனைத்து மாநிலங்களும் ஒரு தீர்மானத்தில் உடன்பட்டாலும், அதை ஒன்றிய அரசு ஏற்கவில்லை என்றால், அதைச் செயல்படுத்த முடியாது என்ற அளவுக்கு அது மாநிலங்களைக் கட்டுப்படுத்துகிறது. ஒரு நியாயமான வாக்குப்பதிவு நெறிமுறை என்பது அனைவருக்கும் சமமான வாய்ப்பை அளிக்கும் முறையேயாகும், தற்போது அது ஜிஎஸ்டி கவுன்சில் வாக்களிப்பு முறையில் இல்லை.

- ச.ராஜா சேது துரை, பொருளியல் பேராசிரியர், ஹைதராபாத் பல்கலைக்கழகம். தொடர்புக்கு: rajasethudurai.s@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x