Published : 24 Aug 2021 03:13 AM
Last Updated : 24 Aug 2021 03:13 AM

துறைமுகங்கள் சட்ட முன்வரைவு: காலத்துக்குப் பொருந்தாத அதிகாரக் குவிப்பு

க.அஷோக் வர்தன் ஷெட்டி

இந்தியாவில் 12 பெரிய துறைமுகங்களும், சுமார் 200 சிறிய துறைமுகங்களும் உள்ளன. ஏறத்தாழ 95% அளவிலான அயல்நாட்டு வணிகத்தை இவை கையாளுகின்றன. பெரிய துறைமுகங்கள் அனைத்தும் மத்திய அரசின் அதிகார வரம்புக்குள்ளும், சிறிய துறைமுகங்கள் அந்தந்த மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குள்ளும் உள்ளன. ஆனால், சட்டம் மற்றும் நிர்வாக விஷயங்களில் மாநிலங்களை மீற மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.

1908-ம் ஆண்டு இந்தியத் துறைமுகங்கள் சட்டம், அனைத்துத் துறைமுகங்களுக்கும் பொதுவானதாகும். அதை ரத்துசெய்யவும், சர்ச்சைக்குரிய முறையில் மாற்றவும் 2021-ம் ஆண்டு இந்தியத் துறைமுகங்கள் மசோதா முன்மொழிகிறது.

பிற நாடுகளுடன் ஒப்பீடு

சீனாவில் துறைமுகங்களின் நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடாமல், நகராட்சிகளின் அளவில் விடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பெரும்பாலான துறைமுகங்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமானவை; அவற்றால் நிர்வகிக்கப்படுபவை ஆகும். ஸ்வீடனிலும், பின்லாந்திலும் துறைமுகங்கள் நகராட்சிக்குச் சொந்தமானவை; நகராட்சி நிலையிலேயே நிர்வகிக்கப்படுகின்றன. ஜெர்மனி, டென்மார்க், பெல்ஜியம் நாடுகளில் உள்ள துறைமுகங்கள் நகராட்சிகள் மற்றும் பிராந்தியங்களுக்குச் சொந்தமானவை என்பதுடன், அவற்றால் நிர்வகிக்கப்பட்டும் வருகின்றன. எனவே, இந்தியாவிலும் துறைமுகப் பிரிவில் மையப்படுத்தலைக் குறைப்பதே காலத்தின் தேவையாகும். கடல்சார் மாநிலங்களும் துறைமுக நகரங்களும், முக்கியத் துறைமுகங்களின் மேம்பாடு, செயல்பாடு மற்றும் விரிவாக்கத்தில் ஒரு கணிசமான பங்குரிமையைப் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.

பெரிய துறைமுகங்களை விஞ்சிய சிறிய துறைமுகங்கள்:

1993-94 முதல் 2020-21 வரை, சிறிய துறைமுகங்கள் கையாண்டுள்ள சரக்குப் போக்குவரத்தின் பங்கு 8%-லிருந்து 46%ஆக உயர்ந்தது. மூன்று மடங்கு வேகமாக வளர்ந்தது மட்டுமல்லாமல், துறைமுக உற்பத்திக்கான பல்வேறு பண்புக்கூறுகளைப் பொறுத்தவரையிலும் சிறிய துறைமுகங்கள் பெரிய துறைமுகங்களைவிடச் சிறந்து விளங்குகின்றன.

கடல்சார் மாநிலங்கள் இதை எவ்வாறு செய்துகாட்டின? குஜராத் மாநிலத்தின் உதாரணத்தைப் பின்பற்றி, கடல்சார் மாநிலங்கள் வணிகத்துக்கு உகந்த கொள்கைகளைக் கொண்டும், தேவையற்ற ஒழுங்குமுறைகள் இல்லாமலும், முற்றிலும் அரசு – தனியார் பங்கேற்பு வாயிலாகச் சிறு துறைமுகங்களைச் சிறப்பாக மேம்படுத்திவருகின்றன. இதற்கு மாறாக, பெரிய துறைமுகங்கள் தமது பணியாளர்களுடனும் தளவாடங்களுடனும் பல்வேறு துறைமுகச் செயல்பாடுகளைத் தாமே நிகழ்த்திவந்தன. குறைந்த தொழில்திறன், புதுமைகளைத் தமதாக்கிக்கொள்வதில் மெத்தனப் போக்கு, தேவையற்ற ஒழுங்குமுறைகள் போன்றவை பாதகமாக அமைந்தன. 1996-லிருந்து பெரிய துறைமுகங்களிலும் புதிய துறைமுக வசதிகளை உருவாக்குவதில் தனியார் நிறுவனங்களுக்கு, அரசு-தனியார் பங்கேற்பின் (PPP) அடிப்படையில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்த மாற்றம் மிகுந்த தாமதத்துடன் நடைபெற்று வருகிறது. இதிலிருந்து, ‘குறைவான ஒழுங்கு நெறிமுறைக் கட்டுப்பாடுகள் அதிகப் பலனைத் தரும்’ என்பது தெளிவாகிறது.

2021-ல் இந்தியத் துறைமுகங்கள் மசோதா சர்ச்சைக்குரியதாக ஆனதற்கான காரணம், கடல்சார் மாநில மேம்பாட்டுக் குழுமம் (Maritime States Development Council) தொடர்பான அத்தியாயங்கள் II மற்றும் III-ன் விதிகளே ஆகும். இக்குழுமம், 1997-ல் ஒரு செயலாணை மூலம் உருவாக்கப்பட்டது. மத்தியக் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரைத் தலைவராகக் கொண்டும் கடல்சார் மாநிலங்கள் / மத்திய அரசின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகள் ஆகியவற்றின் துறைமுகங்களுக்கான பொறுப்பாளர்களான அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்டும் இது உருவாக்கப்பட்டது. பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான தலைமை ஆலோசனைக் குழுவாக இது செயல்பட்டது. கடந்த 24 ஆண்டுகளில் இக்குழுமம் 17 முறைகள் மட்டுமே கூடியுள்ளது.

இச்சட்ட முன்வரைவு, MSDC தனக்கெனச் சொந்த அலுவலகம், பணியாளர்கள், கணக்குகள் மற்றும் தணிக்கை போன்றவற்றைக் கொண்ட நிரந்தர அமைப்பை உருவாக்கி அதற்குப் பலதரப்பட்ட அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை வழங்கலாம் எனக் கருதுகிறது. தற்போதுள்ள துறைமுகங்கள் மற்றும் புதிய துறைமுகங்கள் உட்பட பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் மேம்பாட்டுக்கான தேசிய அளவிலான திட்டம் ஒன்றை வகுத்து, அதனை அதிகாரபூர்வமான அரசிதழில் வெளியிடவும், அத்திட்டத்தை அவ்வப்போது திருத்திக்கொள்வதற்கும் இக்குழுமத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சிறிய துறைமுகங்கள் தேசிய அளவிலான திட்டத்துக்கேற்பப் பெரிய துறைமுகங்களுடன் ஒருங்கிணைந்த வளர்ச்சியைக் கொண்டுள்ளனவா என்பதைக் கண்காணிக்கும் பணியை மேற்கொள்வதையும் அது உறுதிசெய்துள்ளது. தேசியத் திட்டத்தை எந்தவொரு துறைமுகம் மீறினாலும், உரிய விசாரணைக்கு MSDC ஆணையிடலாம். தேசியத் திட்டத்துடன் இணங்கிச் செயல்படாத துறைமுகத்தை முடக்கும் அதிகாரத்தை மத்திய அரசு பெற்றுள்ளது. சாதாரண நிர்வாகப் பிழைகளைக்கூடக் குற்றங்களாகக் கருதும் அச்சமூட்டும் சட்டவியல் கோட்பாட்டுக்கு முன்னோடியாக இச்சட்ட முன்வரைவு திகழ்கிறது. துறைமுக ஆணைக்குழு, துறைமுக அலுவலர்கள் மற்றும் ஏனையோர் MSDC-ன் ஆணைகளுக்கு இணங்கிச் செயல்படாத நேர்வுகளில், பிரிவு 83-ன்படி, அவர்களுக்குச் சிறைத்தண்டனை உள்ளிட்ட மிகக் கடுமையான தண்டனைகள் வழங்குவது பற்றி இச்சட்ட முன்வரைவு குறிப்பிடுகிறது.

இவ்வகையில், மத்திய திட்டமிடல் மற்றும் ஆய்வாளர் ஆட்சி ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த சோஷலிசப் போக்கின் தவறுகள் மீண்டும் இழைக்கப்படுகின்றன. தற்போது புதிதாக அதிகக் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ள போக்கானது, சிறிய துறைமுகங்களின் எதிர்கால வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அமைந்திருப்பதால், இந்தியப் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்த வழிகோலும். மசோதாவின் கூட்டாட்சி எதிர்ப்பு அம்சங்களைப் போலவே இதுவும் கவலை அளிக்கிறது.

எனவே, இச்சட்ட முன்வரைவில், கடல்சார் மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமம் (MSDC) தொடர்பான அத்தியாயம் II மற்றும் III-ஐயும், இக்குழுவின் ஆணைகளுக்கு இணக்கமாகச் செயல்படாத நேர்வில், மிகக் கடுமையான தண்டனைக்கு வகைசெய்யும் 83-ம் பிரிவின் விதிகளையும் நீக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. கடல்சார் மாநிலங்களின் மேம்பாட்டுக் குழுமம், வழக்கம்போல், தலைமை ஆலோசனை அமைப்பாக விளங்கிட வேண்டும்.

- க.அஷோக் வர்தன் ஷெட்டி, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x