Published : 23 Aug 2021 03:12 AM
Last Updated : 23 Aug 2021 03:12 AM

எதிர்பாராத பெருமழைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோமா?

கடந்த சனிக்கிழமையன்று சென்னையின் சில இடங்களில் பெய்த கனமழையால் சாலைகளில் நீர் தேங்கி, பல மணி நேரங்களுக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலைகளையொட்டியுள்ள மழைநீர் வடிகால்களின் பராமரிப்பு குறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தைத் தற்போதைய மழை மீண்டும் நினைவூட்டியுள்ளது. மழைநீர் வடிகால்களின் கட்டமைப்பிலும் கண்காணிப்பிலும் தொடர்ந்து அலட்சியம் காட்டும்பட்சத்தில், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மேலும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். வழக்கமான பருவமழைக் காலங்களைத் தாண்டி, பருவநிலை மாற்றத்தின் காரணமான எதிர்பாராத பெருமழையையும் கடற்கரை நகரமான சென்னை வருங்காலங்களில் சந்திக்க வேண்டியிருக்கலாம். அதற்குரிய தெளிவான திட்டமிடல்களும் செயல்பாடுகளும் முன்கூட்டியே தொடங்கப்பட வேண்டும்.

சென்னையில் தற்போது சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதற்குக் கடந்த ஆட்சிக் காலத்தின் அவல நிலையே காரணம் என்று ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் பணிகளை அக்டோபர் 15-க்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக சென்னை மாநகராட்சியின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் தள்ளிவைக்கப்பட்டதும் இத்தகைய அடிப்படைக் கட்டமைப்புகளுக்கான பணிகள் சுணங்கிப்போனதற்கு முக்கியக் காரணம். தவிர, மாநகரப் பகுதிக்குள் ஓடும் அடையாறு, கூவம் ஆறுகளுக்கும் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கும் மழைநீர் செல்லும் வடிகால்கள் ஆக்கிரமிப்புக்கு ஆளாகியுள்ளன. ஏரிகளைப் பாதுகாத்து சுற்றுச்சுவர் எழுப்பினாலும் அவற்றுக்கு நீர் கொண்டுவரும் பாதைகள் அடைபட்டுப்போன நிலையில், ஆங்காங்கே தண்ணீர் தேங்கிநிற்பது தவிர்க்கவியலாதது. ஏரிகளைத் தூர்வாருவதுபோல, ஏரிகளுக்கு வரும் வடிகால்களையும் தூர்வார வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்டிருந்தால் தரைக்கு அடியிலேனும் வடிகால் வரத்துகளை ஏற்படுத்திச் சரிசெய்ய வேண்டும்.

கடந்த சில மாதங்களில் தென்மேற்குப் பருவமழையின் பாதிப்புகளை எதிர்கொள்ள முடியாமல் கேரளம் தொடங்கி மஹாராஷ்டிரம் வரையிலான மேற்குக் கடற்கரையோர மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பருவநிலை மாற்றத்தின் காரணமான எதிர்பாராத பெருமழையால் கடந்த ஜூலை மாதம் சீனா மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் சீனாவில் கொட்டித் தீர்த்தது. இத்தகைய பெருமழைகளால் பெருநகரங்களே முதலில் பாதிக்கப்படுகின்றன. சாலைப் போக்குவரத்து முடங்குவதோடு சாலைகளின் அடியில் அமைக்கப்பட்ட சுரங்கப் பாதைகளும் நீரில் மூழ்குகின்றன. கடந்த சில மாதங்களில் ஐரோப்பாவில் பெய்த பெருமழைக்குப் பிறகு, நகரக் கட்டமைப்பில் சுரங்கப் பாதைகளின் மறுவடிவமைப்பு குறித்துத் தீவிரமாக விவாதிக்கப்பட்டுவருகிறது.

பெருமழை ஒன்றைச் சென்னை மாநகரம் சந்திக்க நேர்ந்தால், பாலங்களின் அடியில் தாழ்வாக அமைந்துள்ள பல சாலைகள் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஏராளம். மழைநீரை உறிஞ்சும் இயந்திரங்களைப் பயன்படுத்துவது தவிர, மாநகரத்தின் திட்ட வடிவமைப்பிலும் பெருங்கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதையே கடந்த சில மாதங்களின் உலக அனுபவங்கள் உணர்த்துகின்றன. மாநகரப் பகுதிகளின் சாலைகளில் மழைநீர் தேங்குவது குறித்து இனியும் அலட்சியம் காட்டக் கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x