Published : 16 Feb 2016 08:43 AM
Last Updated : 16 Feb 2016 08:43 AM

தனியார் பள்ளி வேட்டை!

தனியார் பள்ளிகளில் பெரும்பாலானவை பெரிய அளவில் கல்விக் கட்டணம் வசூலிப்பதில்லை

அரசுப் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் எண்ணிக்கை வேகவேகமாகச் சரிகிறது. எதிர்ப்புறம் தனியார் பள்ளிகளிலோ எண்ணிக்கை அதிகரிக்கிறது. என்ன நடக்கிறது இங்கே?

ஒரு உண்மையிலிருந்து இந்த விவாதத்தை நாம் தொடங்கலாம். பொதுவாக, எல்லோரும் நினைப்பதற்கு மாறாக, நாட்டில் உள்ள அரசு உதவி பெறாத 3.3 லட்சம் தனியார் பள்ளிக்கூடங்களில் பெரும்பாலானவை பெரிய அளவில் கல்விக் கட்டணம் வசூலிப்பதில்லை என்பதே அந்த உண்மை. இன்னும் சொல்லப்போனால், சுமார் 16,000 பள்ளிகள் மட்டுமே மிக அதிகக் கட்டணம் வசூலிக்கும் மேல்தட்டுப் பிரிவினருக்கான பள்ளிக்கூடங்கள்; அவை மேல்நிலைக் கல்விக்கான இந்திய கவுன்சில் (ஐ.சி.எஸ்.இ.) மற்றும் மேல்நிலைக் கல்விக்கான மத்திய போர்டு (சி.பி.எஸ்.இ.) ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்றவை. உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சராசரி மாதக் கல்விக் கட்டணம் கிராமங்களில் ரூ.117; நகரங்களில் ரூ.250 என்கிற அளவுக்கெல்லாம்கூட இருக்கிறது 2014-ல் எடுக்கப்பட்ட ‘தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு’ (என்.எஸ்.எஸ்.) இதைச் சொல்கிறது.

தனியார் பள்ளிகள் மேம்பட்டிருப்பது உண்மை

அரசுப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களின் ஊதியத்தைக் கணக்கில் எடுத்தால் ஒரு மாணவனுக்காக மட்டும் ஆசிரியருக்கு மாதந்தோறும் ஊதியமாக அளிக்கப்படும் தொகை ரூ.1,300. மாணவர்களின் கற்றல் திறனைப் பார்க்கும்போது அரசுப் பள்ளி மாணவரைவிடத் தனியார் பள்ளிகள் மேம்பட்டிருப்பதாகப் பெற்றோர்கள் கருதுகிறார்கள். இதில் உண்மையும் இருக்கத்தான் செய்கிறது. விளைவு, அரசுப் பள்ளிகளை மக்கள் புறக்கணிக்கிறார்கள். அரசுப் பள்ளிகள் மூடப்படுகின்றன. 2014-15-ல் ராஜஸ்தான், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர் மாநிலங்களில் மட்டும் மொத்தம் 23,900 பள்ளிக்கூடங்கள் வருகைக்குறைவு காரணமாக மூடப்பட்டிருக்கின்றன.

இப்படி அரசுப் பள்ளிக்கூடங்களை விட்டு மாணவர்கள் வெளியேறும் வேகம் அதிகமாக இருப்பது கல்வித் துறை அதிகாரிகளுக்குத் தர்மசங்கடத்தை நிச்சயம் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஒரு சிலக் கட்டமைப்புக் குறைபாடுகள் இருந்தாலும் மாணவர்களுக்குக் கற்பிப்பதில் குறை வைக்காத, குறைந்த செலவில் நன்கு நிர்வகிக்கப்படும் தனியார் பள்ளிக்கூடங்களை மதிக்க கல்வித் துறை அதிகாரிகள் கற்றுக்கொள்ள வேண்டும். 20 மாணவர்களுக்கும் குறைவாகப் படிக்கும் அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் படிக்க, எழுத நன்கு கற்றுக்கொள்கின்றனர் என்பதை அதிகாரிகள் ஏற்க வேண்டும். இப்படிக் குறைந்த கல்விக் கட்டணத்தில் செயல்படும் தனியார் பள்ளிக்கூடங்களில் அடித்தளக் கட்டமைப்புகள் அல்லது வேறு குறைபாடுகள் இருந்தால், அவற்றைச் சரி செய்ய கல்வித் துறை உதவ வேண்டும். ஆனால், என்ன நடக்கிறது தெரியுமா?

தனியார் பள்ளிகளைக் குறி வைத்தல்

வசதி குறைந்த தனியார் பள்ளிகளை வேட்டையாடும் பணியில் இறங்கியிருக்கிறது இந்தியக் கல்வித் துறையின் அதிகார வர்க்கம். ‘கல்விபெறும் உரிமைச் சட்டம்’(ஆர்.டி.இ.) வகுத்தளித்த நியதிகளுக்கேற்ப இல்லை என்று கூறி, குறைந்த கட்டணம் வசூலிக்கும் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிக்கூடங்களை அரசே மூடவைத்திருக்கிறது. 2014 மார்ச் வரையிலான காலத்தில் 4,355 தனியார் பள்ளிக்கூடங்கள் கட்டாயப்படுத்தி மூடவைக்கப்பட்டன. மேலும், 15,083 பள்ளிக்கூடங்களுக்கு மூடலுக்கான நோட்டீஸ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதனால், சுமார் 39 லட்சம் மாணவர்களின் கல்வி பெறும் உரிமை பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

இதற்குக் காரணம், கல்விபெறும் உரிமைச் சட்டம் வகுத்தளித்துள்ள விதிகளின்படி தனியார் பள்ளிக்கூடங்களில் எல்லாவிதக் கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இவை போக, அந்தந்த மாநில அரசுகள் கூடுதல் நிபந்தனைகள் விதித்து ஆணைகள் பிறப்பிக்கின்றன. அவையும் பின்பற்றப்பட வேண்டும். 2013 மே 8-ல் உத்தரப் பிரதேச அரசு பிறப்பித்த ஆணை 40 வித நிபந்தனைகளை அங்கீகாரம் பெறுவதற்கு விதிக்கிறது. பள்ளிகளை மேம்படுத்துவது நல்ல நிர்வாகமா, மூடுவது நல்ல நிர்வாகமா?

பள்ளிக்கூடம் போகும் வயதிலான குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் சராசரியாக மொத்த மக்கள்தொகையில் 3.8% அளவுக்கு உயர்ந்துகொண்டே வருகிறது என்று 2001 முதல் 2011 வரை எடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கூறுகிறது.

இப்படி ஆயிரக்கணக்கில் தனியார், அரசுப் பள்ளிக்கூடங்கள் மூடப்படுவதாலும் பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும் தேசிய அளவில் புதிய நெருக்கடி உருவாகிவருகிறது. குழந்தைகளின் கல்வி பெறும் உரிமையை நிலைநாட்டுவதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டமே அவர்கள் கல்வி பெற முடியாமல் பள்ளிக்கூடங்களை மூடவைப்பது முரண்நகையாக இருக்கிறது. பணம் செலுத்திப் படிக்க விரும்பும் குழந்தைகள் தங்களுக்குப் பிடித்தமான பள்ளியில் சேருவதை மறுப்பதாகவும் அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.

கேள்விகளுக்குப் பதில் என்ன?

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகரமான லக்னோவை எடுத்துக்கொள்வோம். கல்விக்கான மாவட்டத் தகவல் அமைப்பின்படி 2010 முதல் 2014 வரையில் லக்னோவின் நகர்ப்புறப் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை 407-லிருந்து 289 ஆகக் குறைந்துவிட்டது. கல்விபெறும் உரிமைச் சட்டத்தின் 6-வது பிரிவு கூறுவதற்கு எதிராக இது நடந்திருக்கிறது. பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே பள்ளிக்கூடங்கள் இருக்க வேண்டும் என்கிறது இப்பிரிவு. லக்னோவின் மொத்தமுள்ள 110 வார்டுகளில் 31 வார்டுகளில் இப்போது அரசு அல்லது தனியார் பள்ளிக்கூடங்களே இல்லை. சராசரியாக ஒரு வார்டுக்கு 38,000 பேர் வசிக்கின்றனர். அரசு தன்னுடைய பள்ளிகளில் 118-ஐ மூடிவிட்டது. மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகள் தங்கள் பங்குக்கு, அரசு உதவியின்றி அதே சமயம் அங்கீகாரமும் இன்றி நடந்துவந்த 108 பள்ளிக்கூடங்களை மூடச் சொல்லி உத்தரவிட்டனர்.

சரி, அருகில் அரசுப் பள்ளிக்கூடம் ஏதும் இல்லை என்றால் என்ன செய்வது? அரசுப் பள்ளிக்கூடம் இருந்தாலும் அங்கு மாணவர்களைச் சேர்க்கும் அளவுக்கு இடம் இல்லாவிட்டால் என்ன செய்வது? அருகில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் வசூலிக்கும் கல்விக் கட்டணம் மூடப்படும் பள்ளிக்கூடக் குழந்தைகளின் பெற்றோர்களால் செலுத்த முடியாத அளவுக்கு அதிகமாக இருந்தால் என்ன செய்வது?

கல்வி உரிமை மறுப்பு

கல்வி பெறும் உரிமைச் சட்டம் மட்டும் இயற்றினால் போதாது, தரமான கல்வி பெறும் உரிமையை வழங்க வேண்டும். கற்றுத்தருவதில் ஆசிரியர்களுக்குள்ள பொறுப்பைச் சரியாக நிறைவேற்றுவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் அதிக மாணவர்களைச் சேர்க்கும் அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு நிதி வடிவில் ஊக்குவிப்புகளைத் தர வேண்டும். மேற்கத்திய நாடுகளில் இந்த முறையைத்தான் கடைப்பிடிக்கின்றனர்.

நகரில் அல்லது ஊரில் உள்ள வெவ்வேறு பள்ளிக்கூடங்களின் கல்வித்தரம் குறித்த தகவல்களைப் பெற்றோர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் தரமான பள்ளி எது என்பதைப் பெற்றோர் அறிந்துகொண்டு அதற்கேற்ப முடிவுகளை எடுக்க முடியும். அப்போதுதான் சுமாரான தரம் உள்ள பள்ளிகளில் உள்ளவர்களுக்குத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற தீவிரம் ஏற்படும். ஆசிரியர்களுக்கு வேலையில் சேருவதற்கு முன்னர் அளிக்கும் பயிற்சியோடு நிறுத்திவிடாமல் அவ்வப்போது அவர்களுடைய பாடங்கள் தொடர்பாகவும் கற்பிக்கும் முறைகள், தொழில்நுட்பங்கள் தொடர்பாகவும் மறுபயிற்சி அளித்து அவர்களைத் தரப்படுத்த வேண்டும். மாணவர்களுடைய படிப்புத் திறனைத் தவிர, மற்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் கோடிக்கணக்கான இந்தியக் குழந்தைகளின் எதிர்காலம் வீணாகிவிடும்.

- கீதா காந்தி கிங்டன், லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியைச் சேர்ந்தவர்.

தமிழில்: சாரி,

©: ‘தி இந்து’ ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x