Last Updated : 19 Feb, 2016 09:28 AM

 

Published : 19 Feb 2016 09:28 AM
Last Updated : 19 Feb 2016 09:28 AM

கெயில் விலகுமா?

நீதிமன்றம் தனது தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு மனு செய்துள்ளது



கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், குடியிருப்போர், கல்வி, தொழில் நிறுவனங்களை கெயில் நிறுவனம் பற்றிய பயம் பிடித்தாட்டுகிறது.

‘கெயில் நிறுவனம் தமிழகத்தில் ஏற்கெனவே திட்டமிட்ட பாதையில் எரிவாயுக் குழாய்களைப் பதிக்கலாம். நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும்!’ என்று சொல்லிவிட்டது உச்ச நீதிமன்றம்.

கொச்சியிலிருந்து பெங்களூருவுக்கும், மங்கலாபுரத் துக்கும் இரண்டு பாதைகளில் எரிவாயுவைக் குழாய்கள் மூலம் கொண்டு செல்வதுதான் திட்டம். 2012-ல் கெயில் நிறுவனத்தின் பாதைகளில் பெரும் பகுதி விவசாய நிலங்களும் மக்கள் வசிப்பிடங்களும் சிக்கிக்கொண்டன.

விவகாரம் நீதிமன்றம் போனது. விவசாயிகளும் தமிழக அரசும் சொன்ன நியாயத்தை உணர்ந்த உயர் நீதிமன்றம், கருத்தாய்வுக் கூட்டத்தைக் கூட்டிப் பேசுமாறு கெயிலுக்கு உத்தரவிட்டது. கெயில் அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை. அதற்குப் பதிலாக 1962 சட்டத்தை முன் வைத்து உச்ச நீதிமன்றத்துக்கு வழக்கைக் கொண்டுபோனது. அதில்தான் இப்போது கெயிலுக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைத்துள்ளது.

விவசாயிகளிடமிருந்து நிலம் எடுக்கும்போது சட்டப்படி தரப்படும் நஷ்டஈடு நிலத்தின் வழிகாட்டி மதிப்பில் 10%. தற்போது உச்ச நீதிமன்றத்தால் 13% கிடைக்கலாம், அவ்வளவே. அதனால் ஒன்றும் பெரிய மாற்றம் நடக்கப்போவதில்லை.

பெட்ரோலியக் குழாய் பதிப்புச் சட்டம் -1962 என்ன சொல்கிறது? குழாய்கள் செல்லும் பாதையில் 6 மீட்டர் தூரத்துக்கு விவசாயம் செய்யக் கூடாது. இருபுறமும் 1 கி.மீ. தொலைவுக்குப் பாதுகாக்கப்பட்ட பகுதி. குழாய் செல்லும் பகுதியில் மண் அகழ்வு, மரம் வளர்ப்பு நடந்தாலோ, குழாய்கள் சேதப்பட்டாலோ நிலத்தின் உடமையாளரே முழுப் பொறுப்பு. அப்படி ஏதாவது நடந்தால், நிரபராதி என்பதை நிலத்தின் சொந்தக்காரரே நிரூபிக்க வேண்டும். நிரூபிக்காவிட்டால் சேதத்தின் மதிப்புக்கேற்ப 2 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை தண்டனை உண்டு என்கிறது இந்தச் சட்டம்.

தனியார் மய பயம்

‘1962-ல் சட்டம் உருவானபோது தனியார் துறைகள் எல்லாம் பொதுத்துறை நிறுவனங்களாக மாறிய காலம். பொதுநல நோக்குக்காக நிலம் எடுப்பது அப்போது சரியானதாகக்கூட இருந்திருக்கலாம். ஆனால், இப்போது பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார் துறையாக மாறும் காலம். பழைய சட்டத்தை வைத்துக்கொண்டு யாருக்காக இந்த அதிகாரிகள் நிலம் எடுக்கிறார்கள்? நாளைக்கு இதே கெயில் நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரைவார்க்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?’ என்று மக்களிடையே கேள்விகள் உள்ளன.

“ரிலையன்ஸ் கம்பெனிக்கு பெட்ரோலியப் பொருட்களுக்கான அனுமதி அளித்திருக்கிறார்கள். அவர்களும் இதே சட்டத்தைப் பயன்படுத்தி விவசாய நிலங்களை இஷ்டம் போல் வளைக்க மாட்டார்களா?” என்றும் கேட்கிற குரல்களில் நியாயம் இருக்கிறது.

சந்தேகம் போக்காத அதிகாரிகள்

கொச்சியிலிருந்து பெங்களூரு வரை 871கி.மீ. தூரத்துக்குக் குழாய் பதித்து எரிவாயு கொண்டு போக ரூ.3,500 கோடி செலவு. இதில் 310 கி.மீ. நீளமுள்ள பகுதி தமிழ்நாட்டின் வழியாகச் செல்லும். 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக இந்தப் பாதை உள்ளது.

ஒவ்வொரு 5 கி.மீ. தூரத்துக்கும் கெயில் நிறுவனத்தின் எரிவாயு பம்பிங் ஸ்டேஷன் இருக்கும். இதற்காக அங்கு தலா ஒரு ஏக்கர் நிலம் அதிகமாகக் கையகப்படுத்தப்படும். ஒரு பம்பிங் ஸ்டேஷனுக்கும் அடுத்த பம்பிங் ஸ்டேஷனுக்கும் இடையே ஒரு லட்சம் எரிவாயு சிலிண்டர்களின் அழுத்தம் இருக்குமாம். இப்படிப்பட்ட ஓரிடத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அது 2 கி.மீ. தொலைவுக்குப் பாதிக்கும். அப்படிப்பட்ட அபாயமான நேரத்தில் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் இருபுறமும் உள்ள பம்பிங் ஸ்டேஷன்களை மூடிவிடுவோம் என்கிறது கெயில்.

“அப்படிப்பட்ட தீவிபத்து ஏற்பட்டால் தீயணைப்புக்கான முன்னேற்பாடுகள் என்ன இருக்கின்றன? அந்தப் பகுதியில் பரவும் எரிவாயு எரிந்து முடியும் வரை அப்படியே விட்டுவிடுவார்களா? சுற்றிலும் விவசாயம் செய்பவர்களும் குடியிருப்போர்களும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டுதான் வாழ வேண்டுமா?” என்ற சந்தேகங்கள் மக்களிடம் உள்ளன. அதிகாரிகள் சந்தேகங்களைப் போக்கி மக்களுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை.

முதல்வர் சொன்னது என்ன?

கெயில் விஷயத்தில் விவசாயிகளுக்குத் துணை நிற்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்பது உண்மைதான். ஆனால், அவர் கடந்த 2012- ல் மே 11-ம் தேதி சட்டமன்றத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் ‘கெயில் நிறுவனம் பதிக்கும் எரிவாயுக் குழாய் தொடரின் பாதை இருக்கிற தமிழகத்தின் பகுதிகளில் உள்ள தொழில் மையங்கள், போக்குவரத்து வாகனங்கள், நகர்ப்புறத்தில் உள்ள வீடுகள் ஆகியவற்றுக்குத் தேவையான எரிவாயுவை விநியோகம் செய்வதற்கு இணையான தனியான குழாய்கள் அமைக்கும் திட்டத்தை மேற்கொள்ளப்போகிறோம். இந்தத் திட்டத்துக்கு ரூ.1,000 கோடி முதலீடு செய்யப்படும்’ என்று அறிவித்திருக்கிறார்.

கெயில் நிறுவனத்தின் குழாய்கள் செல்லும் சேலம் பகுதியிலிருந்து கடலூர் பகுதி வரைக்கும் நாளொன்றுக்கு 6 மில்லியன் கன மீட்டர் எரிவாயு கொண்டுசெல்லும் குழாய்களை அமைக்கும் திட்டம் ரூ.500 கோடியில் செயல்படுத்தப்படும். தென் மாவட்டங்களின் கடலோரப் பகுதியிலும் மிதக்கும் திரவ நிலை எரிவாயு மையம் ஒன்று ரூ.2,500 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்படும் என்றும் ஜெயலலிதா விளக்கியிருக்கிறார்.

இந்தத் திட்டங்கள் கெயில் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) இதற்குத் தேவையான ஒத்துழைப்பைத் தரும். கொச்சி, பெங்களூரு எரிவாயுக் குழாய் தொடரில் கிடைக்கும் எரிவாயு மூலம் முதல் கட்டமாக 500 மெகா வாட் திறனுள்ள மின் உற்பத்தித் திட்டம் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

இதை நிறைவேற்ற தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும் (டிட்கோ) கெயில் நிறுவனமும் இணைந்து ஒரு கூட்டுத் துறை நிறுவனத்தை ஏற்படுத்தும். இந்த திட்டம் வரும் ஐந்தாண்டுகளில் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, அதில் ரூ.10,000 கோடி முதலீடு செய்யப்படும்!’ என்றும் முதல்வர் மேலும் அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் தரப்பில் கெயில் நிறுவனத்தோடு சேர்ந்து செயல்படும் முனைப்புகள் தெரிந்தாலும், உச்ச நீதிமன்றம் தற்போது அளித்துள்ள தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் என்றுதான் தமிழக அரசு நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. எரிவாயுக் குழாய்களை நெடுஞ்சாலைகள் ஓரமாகவும் அரசுக்குச் சொந்தமான நிலங்களிலும் புதைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு 2016 பிப்ரவரி 8-ல் முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

பாஜகவும் அதிமுகவும் தற்போது தமிழகத்தில் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதனால், இப்போதைக்கு கெயில் நிறுவனம் மக்களைப் பாதிக்கும் வகையில் குழாய்களைப் பதிக்கும் வேலையில் இறங்காது என்பது மக்களுக்கு ஆறுதலாக இருக்கலாம்.

- கா.சு. வேலாயுதன்,

தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x