Published : 18 Aug 2021 03:12 AM
Last Updated : 18 Aug 2021 03:12 AM

தாலிபான்களின் ஆதிக்கம்: இந்தியாவின் கொள்கை முடிவு என்ன?

நம் அருகமை நாடான ஆப்கானிஸ்தான் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தாலிபான் பயங்கரவாதிகளிடம் வீழ்ந்திருக்கிறது. இதன் மூலம், அமெரிக்கா-கூட்டணி நாடுகளின் 20 ஆண்டு காலப் போராட்டமும் அமெரிக்கா செலவிட்ட ரூ.700 லட்சம் கோடிக்கு மேலான நிதியும் நிரந்தரப் பயனில்லாமல் போய்விட்டன. ஏறக்குறைய 100 ஆண்டுகளாகத் தொடரும் யுத்தங்களால் நிலையற்ற தன்மையைச் சந்தித்துக்கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள் சொல்லவியலாத துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர்.

பாகிஸ்தானின் ஆதரவு

பாகிஸ்தானுடனான நீண்ட எல்லையானது ஆப்கானிஸ்தானுக்கு மட்டுமின்றி, தாலிபான்களை உருவாக்கிய பாகிஸ்தானுக்கும் தொடர் தலைவலிதான். இந்த எல்லையின் இருபுறங்களிலும் ஆப்கானிஸ்தானின் பெரும்பான்மை இனமான பாஸ்டூன் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த எல்லையைப் பயன்படுத்திதான் தாலிபான்கள் தங்களுக்குத் தேவையான ஆயுதங்கள், போக்குவரத்து மற்றும் நிதி உதவிகளை பாகிஸ்தானிடமிருந்து தொடர்ந்து பெறுவதோடு, போதைப் பொருட்களைக் கடத்துவதால் தங்கள் இயக்கத்துக்குத் தேவையான நிதியையும் திரட்டிவருகின்றனர். தெற்காசியாவுக்கும், முன்னாள் சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த மத்திய ஆசிய நாடுகளுக்கும் போதைப் பொருட்கள் ஆப்கானிஸ்தானிலிருந்துதான் எளிதாகக் கடத்தப்படுகின்றன.

முன்பு பாகிஸ்தான், அமெரிக்காவின் துணையுடன் சோவியத் ஒன்றியத்தை எதிர்த்துப் போராடிய முஜாஹிதீன்கள், சோவியத்தை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறச் செய்தனர். அதன் பின்னர், பாகிஸ்தான் இந்த முஜாஹிதீன் போராளிகளை இந்தியாவில், குறிப்பாக காஷ்மீரில் பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து இந்தியாவுக்கு எதிராகப் போராடத் தூண்டிவிட்டது. தற்போது அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின், தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், இந்தப் போராளிகள் பாகிஸ்தான் உதவியுடன் இந்தியாவில் காஷ்மீரிலும், சீனாவின் ‘ஜின்ஜியாங்’ மாகாணத்திலும் மற்றும் மத்திய ஆசிய நாடுகளான முன்னாள் சோவியத் ஒன்றிய உறுப்பு நாடுகளிலும் உள்ள பிரிவினைவாதிகளுக்குத் துணைபோக மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

ஆப்கானியரின் சந்தேகம்

மூன்று நாட்களுக்கு முன்பு டெல்லியில் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்திருப்பவர்கள் என்னிடம் பகிர்ந்துகொண்ட தகவல்கள், ஆப்கானிஸ்தான் வீழ்வதை உலக சமூகம் வேடிக்கை பார்த்து நின்றதோ என்ற ஐயத்தையே ஏற்படுத்துகிறது. அமெரிக்கக் கூட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்தபோது பெண்களுக்கான கல்வி, கட்டுமானங்கள், மருத்துவ வசதி, பள்ளி மாணவர்கள் படிக்கத் தேவையான பொருட்கள், போக்குவரத்து, பள்ளி-கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியங்கள், ஆப்கானிஸ்தான் மேம்பாட்டுக்காகத் தங்குதடையின்றித் தொடர்ந்தன. அதே நேரத்தில், போரினால் பாதிக்கப்பட்ட ஒரு நாடு ஜனநாயக வழியை ஏற்கும்போது அரசு ஊழியர்களும் அரசியலர்களும் பெரும் ஊழல்வாதிகளாக இருந்தார்கள் என்பதையும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். முன்னாள் ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கனி பண மூட்டையுடன்தான் ஓடியிருக்கிறார். இவர்கள் தங்களைப் பற்றியும், தங்கள் குடும்பங்களைப் பற்றியும்தான் அதிக அக்கறைகொள்கிறார்கள் எனப் பகிர்ந்துகொண்டார் ஒரு பெண் அகதி.

ஹீரத் மாகாணத்தைச் சார்ந்த ஒரு மாணவர், ‘தாலிபான்கள் மீண்டெழுந்து வந்துவிட்டார்கள். ஆப்கானிஸ்தான் 2,000 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி நகர்வதைத் தவிர்க்க முடியாது’ என்று கூறினார். ‘பெரும்பான்மையான மக்கள் தாலிபான்களை வெறுக்கிறார்கள். இதற்குக் காரணம், இன்று தாலிபான்கள் தாங்கள் மாற்றம் அடைந்திருப்பதாகக் கூறினாலும் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறிதான். இந்தப் போராளிகள் திருமணமானவர்களாக இருந்தாலும் பல மாகாணங்களில் துப்பாக்கி முனையில் இளம் பெண்களை இவர்கள் மீண்டும் மணம்முடிக்கிறார்கள்’ என்று கண்ணீருடன் கூறினார் ஒரு மாணவி.

ஆப்கானியர்கள் தங்கள் நாட்டை நேசிக்கின்றனர். ஆனால், அடிமைகளாக இருக்க விரும்பவில்லை. தாலிபான்கள் தங்களுக்குச் சாதகமான ஆணாதிக்கச் சட்டதிட்டங்களை நிறைவேற்றுவார்களே அன்றி மக்கள் நலனைக் கருத்தில் கொள்ள மாட்டார்கள். ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் நிக்கோலஸ் பர்ன்ஸ் கூறுவதுபோல, ‘அமெரிக்கப் படையினர் நீண்ட போரை முடிவுக்குக் கொண்டுவந்தது வரவேற்கத் தக்கது. ஆனால், பேச்சுவார்த்தையுடன் அரசியல் தீர்வையும் கொடுத்த பின்பு வெளியேறியிருக்க வேண்டும்’.

தவறிப்போன கணிப்புகள்

மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச உறவு வல்லுநர்களின் கணிப்பைத் தகர்த்தெறிந்திருக்கிறார்கள் தாலிபான்கள். ஆப்கானிஸ்தான் ராணுவத்தினருக்கு மேற்கத்திய நாடுகள் கொடுத்திருந்த ராணுவப் பயிற்சியையும் அதன் விளைவுகளையும் சரியாக ஆராயாததன் காரணமாகவே இன்று ஆப்கானிஸ்தான் துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. மேலும், இன்றைய பல முனைகளைக் கொண்ட சர்வதேச உறவில் உலகின் ஒரே வல்லரசான அமெரிக்காவின் தற்போதைய செயல்பாடுகள் சர்வதேசப் பிரச்சினைகளுக்கு அவர்களிடம் தீர்வு அளிக்கும் வல்லமை இல்லையா அல்லது அறிந்தேதான் இவ்வாறு செய்கிறார்களா என்ற ஐயங்களைத் தோற்றுவிக்கிறது. ஒசாமா பின்லேடனை வீழ்த்திய பிறகு, அமெரிக்கக் கூட்டுப் படைகளின் நோக்கம் தாலிபான்களை வீழ்த்துவதாக இருந்தாலும், அரசியல் தீர்வுதான் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக்கும் ஸ்திரத்தன்மைக்கும் தேவையானது என்பதை அவர்கள் எப்படி அறியாதிருக்க முடியும்?

ஆப்கானிஸ்தானில் அரசுக்கும் தாலிபான்களுக்கும் இடையே எந்தவிதமான சமாதான ஒப்பந்தமும் ஏற்படாத நிலையில், அமெரிக்கப் படை வெளியேறுவதற்கான முடிவை டொனால்டு ட்ரம்ப் தன் உள்நாட்டு அரசியல் லாபத்துக்காக அவசரப்பட்டு அறிவித்தார். இதற்கு அமெரிக்க மக்களின் ஆதரவும் இருந்ததால் இன்றைய அதிபர் ஜோ பைடனும் அந்த முடிவைப் பின்பற்றுவதற்கு மறைமுகமாக நிர்ப்பந்திக்கப்பட்டுவிட்டார். அமெரிக்கப் படை வெளியேற்றத்தால் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலையைக் கண்டு வருந்தும் அமெரிக்க அதிபர் பைடன் இந்தப் பிரச்சினை என்னுடன் முடியட்டும் என்று கூறியுள்ளார். ஆனால், தாலிபான்களின் பயங்கரவாதம் முழுமையாக அழிக்கப்பட வேண்டுமென்றால், ஆப்கானிஸ்தான் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருடனும் இடைவிடாத தொடர் பேச்சுவார்த்தைகளால் மட்டுமே அரசியல் தீர்வை அளிக்க முடியும்.

இதைச் செய்யத் தவறியதால் தங்களுக்கு எதிராக வரும் சவால்களை ரஷ்யா, சீனா மற்றும் மேற்கத்திய நாடுகள் அறிந்தே இருக்கின்றன. இந்தியா-பாகிஸ்தான் இடையே நல்லுறவு இல்லாத இந்தச் சூழ்நிலையில், இந்தியாவுக்கு எதிராகத் தாலிபான்களைத் திருப்பும் முயற்சிகளைத் தொடங்கவும் வாய்ப்பு உண்டு. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று ஆப்கானிஸ்தானில் மேம்பாட்டுத் திட்டங்களைச் செய்துவரும் இந்தியாவுக்குத் தெரியும். ஆனால், அவற்றைச் சந்திக்க இந்தியாவிடம் தேவையான கொள்கை முடிவு உள்ளதா?

- சி.ஆன்றணி விஜிலியஸ், மூத்த ஆசிரியர், மாடர்ன் டிப்ளமஸி (ஆசிய-பசிபிக்)

தொடர்புக்கு: casvvigilious@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x