Last Updated : 18 Aug, 2021 03:12 AM

 

Published : 18 Aug 2021 03:12 AM
Last Updated : 18 Aug 2021 03:12 AM

பேரழிவின் காலத்தில் காந்தி!

பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு (ஐபிசிசி) வெளியிட்டிருக்கும் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை, மனித குலத்துக்கு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை என்று சொல்லலாம். இன்னும் 20 ஆண்டுகளில் புவி வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஸியஸ் அதிகரிப்பதையும் அதன் கடுமையான விளைவுகளையும் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று ஐபிசிசியின் அறிக்கை கூறியுள்ளது. கையில் இருக்கும் ஒரே புவியை நம் பேராசையிடம் சூதாடித் தோற்றுக்கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில், உலகின் முன்னோடிச் சுற்றுச்சூழலியரான காந்தியின் நினைவு வருவதைத் தவிர்க்க முடியாது.

‘சுற்றுச்சூழல்’ (environment) என்ற சொல்லை ஒரு முறைகூடப் பயன்படுத்தாதவர் காந்தி. ஆனால், உலகெங்கிலும் இந்தியா முழுவதிலும் உள்ள சுற்றுச்சூழலியர்கள், சூழல்சார் பொருளியர்கள் பலரும் காந்தியால் உந்துதல் பெற்றவர்கள் என்பது ஆச்சரியம். உலக அளவில் ஈ.எஃப். ஷூமாக்கர், ஆர்ன் நேஸ் போன்றோரும், இந்திய அளவில் சுந்தர்லால் பகுகுணா, வந்தனா சிவா, மாதவ் காட்கில், மேதா பட்கர், ராமச்சந்திர குஹா போன்றோரும் காந்தியிடமிருந்து தாக்கம் பெற்றவர்கள். காந்தியின் சீடர்களான ஜே.சி.குமரப்பா, மீரா பென் போன்றோர் சுற்றுச்சூழல் செயல்பாடுகளுக்கு முக்கியமான பங்காற்றியிருக்கிறார்கள். இந்தியாவில் உருவான சிப்கோ இயக்கம், நர்மதா பச்சாவ் அந்தோலன் போன்ற சுற்றுச்சூழல் இயக்கங்கள் சத்தியாகிரகப் போராட்ட வழிமுறைகளைப் பின்பற்றியவை.

தன் வாழ்க்கை முறையால் மிகச் சிறந்த சுற்றுச்சூழலியராக காந்தி திகழ்ந்தார். காந்தி தென்னாப்பிரிக்காவில் உருவாக்கிய டால்ஸ்டாய் பண்ணை, ஃபீனிக்ஸ் குடியிருப்பு இந்தியாவில் உருவாக்கிய சத்தியாகிரக ஆசிரமம், சபர்மதி ஆசிரமம், சேவாகிராம் ஆசிரமம் போன்றவற்றில் கடைப்பிடிக்கப்பட்ட வாழ்க்கை முறை சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்ததாக இருந்தது. தன்னிறைவு கொண்ட ஆசிரமங்களாக அவற்றை காந்தி உருவாக்கினார். அந்த ஆசிரமங்களில் வசிப்பவர்களுக்குத் தேவையான நீர், உணவு, ஆடைகள் போன்ற வசதிகளைப் பெரிதும் அங்கேயே ஏற்படுத்திக்கொண்டனர். ஒவ்வொருவருடைய உழைப்பும் அவர் உண்ணும் உணவுடன் நேரடியாக உறவு கொண்டிருந்தது. தீண்டாமையற்ற, ஒரு முன்மாதிரிக் கிராமம் போன்று அவருடைய ஆசிரமங்கள் விளங்கின.

அவருடைய ஆசிரமங்களில் கடைப்பிடிக்கப்பட்ட மறுசுழற்சி முறை, கழிவு மேலாண்மை இன்று நமக்குப் பெருமளவில் வழிகாட்ட முடியும். காந்தி ஆசிரமங்களில் மனித, விலங்குக் கழிவுகளை உரமாக மாற்றி, தோட்டப் பயிர்களுக்கும் வயலுக்கும் உரமாக இடுவார்கள். நீர், உணவு, உடை, நுகர்வு, பணம் என்று எல்லாவற்றிலும் சிக்கனம் கடைப்பிடிக்கப்பட்டது. தேவைக்கு அதிகமான நுகர்வு ஆபத்தானது என்று காந்தி கருதினார். நம் அதீத நுகர்வும், இயற்கை வளங்களைச் சுரண்டும் போக்கும் இன்று நம்மை அபாயகரமான கட்டத்துக்குக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. ‘இயற்கை… நம் அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்யப் போதுமானவற்றை உற்பத்திசெய்கிறது என்றும், இது இயற்கையின் அடிப்படை விதி என்றும் நான் துணிந்து கூறுவேன்; ஒவ்வொருவரும் தனக்குத் தேவையான அளவுக்கு மட்டும் இயற்கையிடமிருந்து எடுத்துக்கொண்டிருந்தால், இந்த உலகத்தில் ஏழ்மை என்பதே இருந்திருக்காது, பட்டினியால் எந்த மனிதரும் இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது’ என்றார் காந்தி. இனியும் தன்னால் தாக்குப்பிடிக்கவே முடியாது என்ற நிலையை இன்று இயற்கை அடைந்திருப்பதற்குப் பிரதானக் காரணங்கள், நம் பேராசையும் நுகர்வும் அலட்சியமும் அவற்றைத் தனது பசிக்கு இரையாகக் கொண்ட முதலாளித்துவமும்தான் என்பதை நாம் உணர வேண்டும்.

காந்தி தன் பெரும்பாலான பயணங்களுக்குப் பொதுப் போக்குவரத்தான ரயிலையே, அதுவும் ஏழை மக்கள் பயணிக்கும் மூன்றாம் வகுப்பையே தேர்ந்தெடுத்தார். சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிமுறைகளுள் ஒன்றாகப் பொதுப் போக்குவரத்தை இன்று உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுச்சூழலியர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆனால், ஒரு தேசத்தின் தந்தை என்று கொண்டாடப்படும் ஒருவர், பொதுப் போக்குவரத்தைத் தன் வாழ்க்கை முறையாகக் கடைப்பிடித்து எல்லோருக்கும் முன்னோடியாகவும் முன்மாதிரியாகவும் இருந்திருக்கிறார்.

மனிதர்களைக் கடும் உழைப்பிலிருந்து விடுவிக்கும் தொழில்நுட்பம், கருவி (எடுத்துக்காட்டாக, தையல் இயந்திரம்) போன்றவற்றை வரவேற்ற அதே நேரத்தில், மனிதர்களை உழைப்பிலிருந்தே ஒட்டுமொத்தமாக விடுவிக்கும் தொழில்நுட்பத்தை காந்தி அச்சத்துடன் பார்த்தார். உற்பத்தி செய்பவருக்கும் உற்பத்தி செய்யப்படும் பொருளுக்கும் அதன் மூல நிலையிலிருந்து, தயாரிப்பு நிலை வழியாக, பயன்பாட்டு நிலை வரை உறவு இருக்க வேண்டும் என்று கருதினார். இன்று நம் கையில் இருக்கும் எந்தப் பொருளுடனாவது இந்த மூன்று நிலைகளில் ஏதாவது ஒரு நிலையில் உறவு இருக்கிறதா?

பெரும் உற்பத்திக்குப் பதிலாகப் பெருந்திரள் மக்களின் உற்பத்திக்கு காந்தி முக்கியத்துவம் கொடுத்தார். இந்தப் பெரும் உற்பத்தி தனக்குத் தேவையான வளங்களைப் புவியிடமிருந்து சுரண்டி, அந்த வளங்களைத் தீர்த்துக்கொண்டிருக்கிறது. காற்று, நீர், கனிமங்கள் உள்ளிட்ட வளங்கள் குறிப்பிட்ட அளவுக்குத்தான் புவியில் இருக்கிறது. இந்த வளங்களில் பெரும்பாலானவை மீள்தன்மை இல்லாதவை; அதாவது, பயன்படுத்தினால் மறுபடியும் புதிதாக உற்பத்தியாகாதவை. ஆகவேதான், இவற்றைச் சிறுகச் சிறுகப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இதில் விசித்திரம் என்னவென்றால், ஏழைகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இந்த வளங்களும் அவற்றைப் பெறுவதற்கான பணவசதி உள்ளிட்ட வசதிகளும் மிகக் குறைவாகவே இருப்பதால், அவர்கள் இயல்பாகவே காந்தியர்களாக இருக்கிறார்கள். செல்வந்தர்களும் செல்வந்த நாடுகளும்தான் அளவுக்கும் தேவைக்கும் மீறி எல்லா வளங்களையும் சுரண்டிப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆகவே, மேல்தட்டு வர்க்கம் காந்திய வழிமுறைகளைப் பின்பற்றினால்தான் இந்தப் புவியைக் காப்பாற்ற முடியும்.

காந்தியின் அகிம்சைத் தத்துவம் என்பது மனிதர்களுக்கு மட்டுமானது என்று குறுக்கிப் புரிந்துகொள்ளப்படுகிறது; கூடுதலாக, இறைச்சி உண்ணாமையோடும் தொடர்புபடுத்தப்படுகிறது. உண்மையில், அகிம்சை என்பது இயற்கை முழுவதற்குமானது. ஒருமுறை காந்தியின் சீடர் காகா கலேகர் பஞ்சினைச் சுத்தம் செய்வதற்கான வில்லின் நாணைத் துடைப்பதற்கு நான்கைந்து வேப்ப இலைகள் வேண்டும் என்பதற்காக ஒரு கிளையையே முறித்தார்; அதற்கு காந்தி, “இது வன்முறை. மரத்திலிருந்து இலைகளைப் பறிப்பதற்கு முன்பு அதனிடம் வருத்தம் தெரிவித்துக்கொண்டு, அதற்குப் பிறகு தேவையான இலைகளை மட்டுமே பறிக்க வேண்டும். நீங்கள் ஒட்டுமொத்த கிளையையே ஒடித்துவிட்டீர்கள், இது வீணானது மட்டுமல்லாமல் தவறானதும்கூட” என்றிருக்கிறார். இது நமக்கு அதீதமாகத் தோன்றலாம். ஆனால் இயற்கையிடம் எவ்வளவு நுட்பமாகவும் நுண்ணுணர்வோடும் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான ஓர் உதாரணம் இது. ஒரு வகையில் காந்தியிடம் இருந்தது, இயற்கையோடு இயைந்து வாழும் பழங்குடி மனப்பான்மை எனலாம். அகிம்சை என்பதை, ‘இயற்கையின் உள்ளுணர்வுடன் மனிதரின் உள்ளுணர்வு இயைந்து செயல்படுவது’ என்றும்கூட நாம் விரித்துக்கொள்ளலாம். இந்தப் புரிதல் மனிதர்கள், இயற்கை இரண்டின் மீதும் வன்முறை செலுத்துவதைத் தடுக்கிறது.

காந்தி, வாழ்க்கையையும் அது எதன் அடிப்படையில் நிகழ்கிறதோ அந்த இயற்கையையும் ஒரு பெரிய முழுமையாகவும் அதன் அங்கங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவும் பார்த்தார். ஆனால், நவீன மனிதர்கள் வாழ்க்கையை ஒன்றுக்கொன்று தொடர்பற்ற பகுதிகளாகப் பார்க்கிறார்கள். இந்தப் பிளவான பார்வைதான் இன்றைய பேரழிவுக்கு மிகவும் முக்கியக் காரணம்.

புவி வெப்பமாதல், பருவநிலை மாற்றம் என்பவையெல்லாம் ஒரு நோயின் அறிகுறிகள். இயற்கை மீது செலுத்தப்படும் வன்முறைதான் நோய். ஒரு நல்ல மருத்துவர் அறிகுறிகளைக் குணப்படுத்துவதைவிட நோயைக் குணப்படுத்துவதில்தான் அக்கறை காட்டுவார். அந்த வகையில், காந்தி நமக்கு முன்னோடி மருத்துவர். அந்த மருத்துவரின் மகத்தான மருந்தான அகிம்சைதான் இந்தப் புவிக் கோளையும் மனிதர்கள் உள்ளடக்கிய உயிர்களையும் காப்பதற்கான ஒரே வழி!

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x