Published : 17 Aug 2021 03:14 AM
Last Updated : 17 Aug 2021 03:14 AM

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் திருத்த மசோதா: பாஜகவின் சமூக நீதி அரசியல்

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முடிவுசெய்யும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே திரும்ப அளிக்க வகைசெய்யும் அரசமைப்புத் திருத்த மசோதா, அடுத்தடுத்த நாட்களில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டிருப்பது, மழைக்காலக் கூட்டத்தொடரில் நடந்த அமளிகளுக்கு நடுவிலும் பாஜகவுக்குப் பாராட்டுகளைப் பெற்றுத்தந்திருக்கிறது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு, இத்திருத்தம் நடைமுறைக்கு வரும். பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தைச் செயல்பட விடாமல் கடும் அமளியில் ஈடுபட்டிருந்த எதிர்க்கட்சிகள், இத்திருத்த மசோதாவை நிறைவேற்ற ஒத்துழைத்து, விவாதங்களில் பங்கேற்கவும் ஆதரிக்கவும் செய்தன. தமிழ்நாட்டில் பாஜகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக, பாஜகவைக் கடுமையாக விமர்சித்துவரும் திமுக இரண்டு கட்சிகளுமே இந்தத் திருத்தத்தைப் பாராட்டியுள்ளன. இது கூட்டாட்சித் தத்துவத்துக்குக் கிடைத்த வெற்றி என்று கூறியிருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அரசமைப்பின் 102-வது திருத்தத்தின்படி சேர்க்கப்பட்ட புதிய கூறான 342(அ), சமுதாய அளவிலும் கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினர் யார் என்பது குறித்து ஆளுநரின் கருத்தைப் பெற்று, குடியரசுத் தலைவரே முடிவுகளை எடுக்கவும், அந்தப் பட்டியலில் சேர்க்கவும் நீக்கவும் நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் அளித்தது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் யார் என்று முடிவுசெய்வதில் மாநில அரசுகளுக்கு இருந்த அதிகாரம், இத்திருத்தத்தால் மத்திய அரசின் கைகளுக்கு மாற்றப்பட்டது. இத்திருத்தத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் மராத்தா வழக்கில் அளித்த தீர்ப்பு, மாநில அரசுகளைக் கலக்கத்துக்கு ஆளாக்கியது. தற்போது இந்தப் பிரச்சினைக்கு முடிவுகட்டப்பட்டிருக்கிறது. எனினும், பாஜக ஆட்சிக் காலத்தில்தான் 102-வது திருத்தம் கொண்டுவரப்பட்டது என்பதும் நினைவில் கொள்ளப்பட வேண்டியது. தற்போது நிறைவேறியிருக்கும் மசோதா பாஜகவின் முந்தைய திருத்தத்துக்கான திருத்தம்தான்.

மாநிலக் கட்சிகளின் அரசியல் என்பது பெரிதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உரிமைப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்நிலையில், இந்துத்துவக் கட்சி என்ற அடையாளத்துடன் இயங்கிவரும் பாஜக, மாநில அரசியலுக்குள்ளும் தன்னுடைய அரசியல்வெளியை விரித்தெடுக்கும் முயற்சியாகவும் இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொள்ளலாம். சமூகநீதிக்கு பாஜக எப்போதுமே எதிராக இருந்ததில்லை என்று தீவிரமாக ஒலிக்கத் தொடங்கியுள்ள குரல்கள், அதை இன்னும் உறுதிப்படுத்துகின்றன. மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு பாஜக ஆட்சிக் காலத்தில்தான் நடைமுறைக்கு வந்திருக்கிறது என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. தாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் விளைவு இது என்கிறது திமுக. அந்தத் தீர்ப்பை மத்திய அரசு மேல்முறையீடு செய்யாமல் ஏற்றுக்கொண்டது என்கிறது பாஜக தரப்பு. மாநிலக் கட்சிகளின் பிரதான அரசியல் ஆயுதமான இடஒதுக்கீட்டை பாஜகவும் கையில் எடுத்திருப்பதன் மூலமாக, பிற்படுத்தப்பட்டோர் நலன்களுக்கு எதிரான கட்சி என்ற அடையாளத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள முயற்சிப்பது மட்டும் தெளிவாகவே தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x