Published : 15 Aug 2021 03:24 AM
Last Updated : 15 Aug 2021 03:24 AM

விடுதலைப் போர்: தமிழ்நாட்டுத் திருப்புமுனைகள்

தொகுப்பு: செ.இளவேனில், கோபால், தம்பி

இந்திய விடுதலைப் போராட்டத்தில் வடஇந்தியப் போராட்டங்களே பெரிதும் கவனப்படுத்தப்பட்டாலும், தமிழகமும் அதற்குப் பெரும் பங்காற்றியுள்ளது. அந்த வகையில் 10 முக்கியப் போராட்டங்கள் குறித்த தொகுப்பு.

முதல் எதிர்ப்புக் குரல்: பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிராக தெற்குச் சீமை கிளர்ந்து எழுந்தது. ஆர்க்காடு நவாப் கிழக்கிந்திய கம்பெனியுடன் சேர்ந்து மதுரையிலும் நெல்லையிலும் தனது ஆட்சியை விரிவுபடுத்த முயன்றபோது, அதற்கு எதிராக மேற்குப் பாளையக்காரர்களை ஒருங்கிணைத்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டவர் பூலித்தேவன். அவரின் உயிர்த் தியாகத்துக்குப் பிறகு கிழக்குப் பாளையக்காரர்களை ஒருங்கிணைத்து, பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்த கட்டபொம்மன் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்துவந்தார். ஆங்கிலேயர்கள் அவரைத் தூக்கிலிட்டனர். இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் தீபத்தைக் கையிலேந்தியவர்கள் பூலித்தேவனும் கட்டபொம்மனும்தான்.

காளையார்கோயில் போர்: கட்டபொம்மனைத் தூக்கிலிட்டாலும் அவர் விதைத்த விடுதலை உணர்வை ஆங்கிலேயர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்துக்கு அரசர்களே அடிபணிந்துவிட்ட பிறகும் பாளையக்காரர்கள் தங்களது உரிமையை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரையின் துணையோடு சிவகங்கையின் மருது சகோதரர்கள் போரில் இறங்கினர். சுதந்திரப் பிரகடனத்தையும் வெளியிட்டனர். காளையார்கோயிலை மையமாகக் கொண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிரான தென்னிந்தியக் கூட்டமைப்பை உருவாக்கினர். அதன் கீழ் ராமநாதபுரம், திருநெல்வேலி, திண்டுக்கல், மலபார்-கோயமுத்தூர் ஆகிய நான்கு பிராந்தியக் கூட்டமைப்புகள் இயங்கின. 1799-1801-ம் ஆண்டுகளில் நீடித்த இந்தக் கிளர்ச்சி, இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டமாகக் கருதத்தக்கது என்கிறார் வரலாற்றறிஞர் கே.ராஜய்யன்.

ஆங்கிலேயருக்கு எதிரான முதல் கலகம்: இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்று குறிப்பிடப்படுவது 1857-ல் மீரட்டில் தொடங்கிய சிப்பாய்க் கலகம். ஆனால் 1806-லேயே தமிழகத்தின் வேலூர் கோட்டையில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்கு எதிராகக் கலகம் வெடித்தது. வேலூர் கலகத்தை இந்தியாவின் முதல் விடுதலைப் போராகக் கருத வேண்டும் என சில வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். கோட்டையில் திப்பு சுல்தானின் குடும்பத்தினர் சிறைவைக்கப்பட்டிருந்தனர். அங்கிருந்த படை வீரர்களுக்கு விதிக்கப்பட்ட ஆடைக் கட்டுப்பாடுகளும் மதச் சின்னங்களை அணிந்துகொள்வதற்கான தடையும் இந்து, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த 1,500 வீரர்களைச் சீற்றம்கொள்ள வைத்தன. ஜூலை 10 இரவில் இந்திய வீரர்களின் புரட்சி வெடித்து, 200-க்கும் மேற்பட்ட ஆங்கிலேயே அதிகாரிகள் கொல்லப்பட்டனர். கோட்டை புரட்சியாளர்கள் வசமானது. ஆனால், அது ஒரு நாள் மட்டுமே அவர்களிடம் நீடித்தது. மற்ற ஊர்களிலிருந்து வந்த ஆங்கிலேயப் படை புரட்சியாளர்களைக் கொன்று வேலூர் கோட்டையை மீண்டும் கைப்பற்றியது.

சுதேசி இயக்கத்தின் அடுத்தகட்ட நகர்வு: அந்நியப் பொருட்களைப் புறக்கணித்து, உள்நாட்டு உற்பத்திப் பொருட்களையும் உள்நாட்டு மக்கள் வழங்கும் சேவைகளையும் பயன்படுத்தும் சுதேசி சிந்தனை 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் பரவியது. தமிழக சுதேசி இயக்கம் அன்றைய நெல்லை மாவட்டத்தில் மையம்கொண்டிருந்தது. தூத்துக்குடியில் வழக்கறிஞராக இருந்த வ.உ.சிதம்பரனார் சுதேசி நாவாய்ச் சங்கத்தைத் தொடங்கினார். பிரித்தானிய கப்பல் நிறுவனங்களின் ஆதிக்கத்தை இது முடிவுக்குக் கொண்டுவந்து, சுதேசி இயக்கத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. பாரதியார், சுப்பிரமணிய சிவா போன்ற தலைவர்களும் சுதேசி இயக்கத்தைத் தீவிரமாக முன்னெடுத்தனர். தான் நடத்திய இதழ்கள் மூலம் சுதேசி சிந்தனைகளை ஜி.சுப்பிரமணியம் பரப்பினார். வ.உ.சி, சிவா போன்றோரைக் கைதுசெய்து சுதேசி இயக்கத்தை முடக்க ஆங்கிலேய அரசு முயன்றது. அன்றைய திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ், மணியாச்சியில் வாஞ்சிநாதனால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு சுதேசி இயக்கத்தின் மீதான ஒடுக்குமுறையும் ஒரு காரணம்.

தன்னாட்சி முழக்கமிட்ட இயக்கம்: அயர்லாந்தைச் சேர்ந்த அன்னி பெசன்ட் பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த அயர்லாந்துக்கும் இந்தியாவுக்கும் தன்னாட்சி அதிகாரம் வேண்டும் என்று குரலெழுப்பினார். 1893-ல் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த அவர், 1916 செப்டம்பரில் சென்னை அடையாறில் ‘இந்தியத் தன்னாட்சி இயக்க’த்தைத் தொடங்கினார். 200 கிளைகளுடன் தன்னாட்சி இயக்கத்தில் 40,000 உறுப்பினர்கள் இருந்தனர். இந்தியர்களின் தன்னாட்சி அதிகாரத்துக்கான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. கற்றவர்களையும் கல்லூரி மாணவர்களையும் இந்த இயக்கம் ஈர்த்தது. 1917 ஜூனில் அன்னிபெசன்ட் கைதுசெய்யப்பட்டார். இந்தியாவின் தன்னாட்சிக் கோரிக்கை தேசவிரோதச் செயலாகக் கருதப்படாத வகையில் பிரிட்டிஷ் அரசு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்ததில் தன்னாட்சி இயக்கத்துக்கு முக்கியப் பங்கு உண்டு.

சிலையை அகற்ற ஒரு போராட்டம்: 1857-ல் சிப்பாய்கள் நடத்திய முதல் விடுதலைப் போரை ஒடுக்கியதில் சென்னையைச் சேர்ந்த பிரிட்டிஷ் படைப் பிரிவு அதிகாரி கர்னல் நீலும் ஒருவர். லக்னோ முற்றுகையின்போது கொல்லப்பட்ட அவரை நினைவுகூரும் வகையில் சென்னையின் அன்றைய மவுண்ட் சாலையில் (அண்ணா சாலை) அவருடைய சிலை 1927-ல் வைக்கப்பட்டிருந்தது. விடுதலைப் போரை ஒடுக்கிய பிரிட்டிஷ் அதிகாரிக்கு சென்னையில் சிலையா என்று தமிழகத் தலைவர்கள் கொதித்தெழுந்தார்கள். சென்னை சட்டமன்றத்தில் சிலையை அகற்றக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காந்தியும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். கடைசியில், 1937-ல் காங்கிரஸ் ஆட்சியின்போது சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, எழும்பூர் அருங்காட்சியகத்துக்கு அந்தச் சிலை அனுப்பப்பட்டது.

வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்: பிரிட்டிஷ் அரசு இந்தியர்களுக்கு எதிராக விதித்த உப்பு வரியை எதிர்த்து, குஜராத்தில் தண்டியை நோக்கிப் பயணம் தொடங்கினார் காந்தி. அதே போராட்டத்தைத் தமிழ்நாட்டில் திருச்சியிலிருந்து வேதாரண்யம் நோக்கி தலைமை வகித்து நடத்தினார் ராஜாஜி. சர்தார் வேதரத்தினம் பிள்ளை இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்தார். ஏ.என்.சிவராமன், கல்கி போன்ற முன்னணிப் பத்திரிகையாளர்களும் இதில் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. காவிரிக் கரையின் ஓரமாய் வழிநெடுக விடுதலை உணர்வை விதைத்தது உப்புச் சத்தியாகிரகம்.

ராட்டை என்றோர் ஆயுதம்: கைப்பிடி உப்பிலிருந்து சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்தியதுபோலவே, சுய சார்புப் பொருளாதாரத்துக்கு ராட்டையை ஓர் ஆயுதமாகவும் அடையாளமாகவுமே மாற்றினார் காந்தியடிகள். அந்நியத் துணிகளைப் புறக்கணித்து கதராடை அணிவது ஒரு மக்கள் இயக்கமாகவே மாறியது. காந்தியின் அழைப்பை ஏற்று ஈரோட்டில் பெரியாரும் கோவையில் அய்யாமுத்துவும் கதர்த் துணிகளைத் தோளில் சுமந்து, கிராமம் கிராமமாய் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். நூற்புப் பயிற்சி அளிப்பது ஒரு போர்ப் பயிற்சியாக மாறியது. ராட்டையில் நூற்கும்பொழுதும் உள்ளுக்குள் தியானமாகவும் வெளியில் அரசியல் கிளர்ச்சியாகவும் ஒருசேர விளங்கியது.

தீண்டாமை ஒழிப்பும் சுதந்திரப் போராட்டமே: தமிழ்நாட்டுக்கு காந்தி 20 முறை வந்திருக்கிறார். காந்தியின் 15-வது பயணம் ஏறக்குறைய ஒரு மாத காலம் நீடித்தது. 1934, பிப்ரவரி 23 முதல் மார்ச் 22 வரை தமிழ்நாட்டில் ஒருமாத காலத்துக்கு 120 மேடைகளில் தீண்டாமைக்கு எதிராகப் பிரச்சாரம் நடத்தினார் காந்தி. இந்தப் பயணத்தின்போது திருநெல்வேலிக்கு காந்தி போயிருந்தபோது, அவர் குற்றால அருவிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், தலித்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட அந்த அருவியில், தான் நீராட விரும்பவில்லை என்று அவர் மறுத்துவிட்டார். தொடர்ச்சியாக, தமிழகக் காங்கிரஸின் முக்கிய வேலைத்திட்டங்களில் தீண்டாமை ஒழிப்பையும் ஒன்றாக மாற்றியது.

தேசிய ராணுவத்தில் தமிழர்கள்: இந்திய தேசிய ராணுவத்துக்கு சிங்கப்பூர்தான் களம் என்றாலும், அதில் பங்கேற்றவர்களில் பெரும்பான்மையினர் தமிழ்நாட்டிலிருந்து சென்று, அங்கு தோட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்த தமிழர்கள்தான். சிங்கப்பூரில் நேதாஜி கலந்துகொண்ட கூட்டங்களில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கூடினார்கள். தென்கிழக்காசியாவில் தோட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்த தமிழர்கள், சிறுசிறு நன்கொடைகளை அளித்து நேதாஜிக்கு ஆதரவளித்தனர். பெண்கள் தங்களது நகைகளை வழங்கினர். பிழைப்புக்காக தேசத்தை விட்டுப் பிரிந்தாலும் தமிழர்களின் தேசிய உணர்வு மங்கவில்லை என்பதற்கு இந்திய தேசிய ராணுவம் ஒரு வரலாற்று உதாரணம்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x