Published : 13 Aug 2021 03:15 AM
Last Updated : 13 Aug 2021 03:15 AM

உண்மையான தேச துரோகிகளுக்கு என்ன தண்டனை?

சென்னை ஐசிஎப் நிறுவனத்தின் புரட்சிகரத் திட்டமான ‘ட்ரெய்ன்-18’ திட்டத்தில் குற்றம்சாட்டப்பட்ட 11 அதிகாரிகள் குற்றமற்றவர்கள் என்று கூறி சமீபத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இயங்கும் ரயில்கள் எல்லாம் சராசரியாக மணிக்கு 70 அல்லது 80 கிமீ வேகத்தில் சென்றுவரும் நிலையில், 180 கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய ரயிலை உருவாக்கியதுதான் அந்தச் சாதனை. 2018-ம் ஆண்டு உருவாக்கப்பட்டதால் ‘ட்ரெய்ன்-18’ என்று பெயரிடப்பட்டது.

இன்ஜின் இல்லாமல் அதிநவீன உந்துசக்தி (புரபல்ஷன்) முறையில் இயங்கக்கூடிய, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக ரயில் என்று பெருமையுடன் பேசப்பட்டது. ஜப்பான் கடனுதவியுடன் ரூ.98,000 கோடி செலவில் புல்லட் ரயில் அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், குறைந்த செலவிலான அதிவேக ரயிலைக் கண்டுபிடித்துப் பெரும் பாராட்டைப் பெற்றது. இந்த ரயிலின் வேகத்தை மேம்படுத்தி, புல்லட் ரயிலுக்கு இணையாகக் கொண்டுவர முடியும் என்று கருதப்பட்ட நிலையில், இந்தத் திட்டத்தின் முக்கிய அதிகாரிகள் 11 பேர் மீது விதிகளை மீறி உபகரணங்கள் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். எதிர்பார்த்ததுபோலவே ‘ட்ரெய்ன்-18’ திட்டம் முடங்கியது. மூன்றாண்டுகள் கழித்துத் துறைரீதியான விசாரணையில் அவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்தின் முக்கிய அதிகாரியான சுதான்சு மணி உள்ளிட்ட சிலர் ஓய்வுபெற்றுவிட்டனர். சிலருக்குப் பதவி உயர்வுகள் மறுக்கப்பட்டு முக்கியத்துவம் இல்லாத பணிகளில் இருந்துவருகின்றனர். இஸ்ரோ நம்பி நாராயணன் வழக்கைப் போன்றதுதான் இது என்று சுதான்சு மணி குறிப்பிட்டுள்ளார். அதிகாரிகளுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருவனந்தபுரம் இஸ்ரோவில் பணியாற்றிய நம்பி நாராயணன் மீது இதேபோன்ற குற்றச்சாட்டு சுமத்தி 50 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டார். விக்ரம் சாராபாயால் பாராட்டப்பட்ட அவரை எந்த ஆதாரமும் இன்றி, தேசதுரோகி என்று குற்றம்சாட்டிச் சிறையில் அடைத்தனர். நீண்ட போராட்டத்துக்குப் பின் அவர் நிரபராதி என்று விடுதலை பெற்றார். அப்போது அவர் உருவாக்கிக்கொண்டிருந்த உள்நாட்டுக் கண்டுபிடிப்பான விகாஸ் கிரையோஜெனிக் ராக்கெட் தொழில்நுட்பத் திட்டம் முடக்கப்பட்டது.

இப்படி உள்நாட்டில் ஒரு பெருமைக்குரிய கண்டுபிடிப்பு நிகழும்போதெல்லாம் சில சக்திகள் நுழைந்து பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி அந்த முயற்சியைத் தடுத்துவிடுகின்றன. இதன் பின்னணியில் இருப்பவர்கள்தான் உண்மையான தேசவிரோதிகள். ‘ட்ரெய்ன்-18’ திட்டம் மீண்டும் புதுப்பிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளது ஆறுதல் அளித்தாலும், அதன் முக்கியமான காலகட்டத்தை முடங்கச் செய்தவர்களை முதலில் கண்டுபிடித்து அவர்களுக்குத் தண்டனை வழங்கினால்தான் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடப்பதைத் தடுக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x