Published : 11 Aug 2021 03:16 AM
Last Updated : 11 Aug 2021 03:16 AM

எளிய மக்களைக் கவனத்தில் கொள்க!

வெள்ளை அறிக்கை தாக்கல்செய்ததன் மூலம் தமிழ்நாட்டின் நிதிநிலையை அனைவரும் அறியச் செய்துள்ளார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். மாநில அரசின் கடன் மற்றும் செலவுகள் அதிகரித்து, வருவாய் குறைந்துள்ளதால் வரி உயர்வு மற்றும் பயன்பாட்டுக் கட்டண உயர்வுகள் தவிர்க்க முடியாதது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெருந்தொற்று நிவாரணம் ரூ.4,000 தேவைப்படாத வசதி படைத்தோருக்கும் சென்றடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது சிந்திக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

அரசுப் பேருந்துகளை ஒரு கிமீ இயக்கும்போது, அரசுக்கு ரூ.59.15 நஷ்டம் ஏற்படுவதாகவும், மின்சார விநியோகத்தில் ஒரு யூனிட்டுக்கு ரூ.2.36 நஷ்டம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளதன் மூலம், இந்த இரண்டு கட்டணங்களும் உயரப்போகின்றன என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ளலாம். அதேபோன்று, குடிநீர் சுத்திகரிப்புக்கு ஆகும் செலவுக்கும், கிடைக்கும் வருவாய்க்கும் உள்ள இடைவெளியைக் குறிப்பிட்டுள்ளார். வாகனப் பதிவுக் கட்டணங்கள் 2008-க்குப் பின் உயர்த்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார். இதன்மூலம் இந்தக் கட்டணங்கள் அனைத்தையும் உயர்த்தினால் மட்டுமே நிதிநிலையைச் சரிசெய்ய முடியும் என்பதைத் தெளிவாக உணர்த்தியுள்ளார்.

வரிகளையும் கட்டணங்களையும் உயர்த்துவது என்று முடிவாகிவிட்ட நிலையில், ஏழை, நடுத்தர, உயர்வருவாய்ப் பிரிவினர், வசதிபடைத்தோர் எனப் பலதரப்பட்டோர் வாழும் சமூகத்தில் அனைவருக்கும் ஒரே அளவுகோலில் வரிகளை உயர்த்துவது பொருத்தமாக இருக்காது என்பதே சாதாரண பொதுமக்களின் கருத்தாக உள்ளது. ஒரே வீட்டில் குடியிருந்துகொண்டு, கடன் பெற்று மாதத் தவணை செலுத்துபவர்களுக்கும், பல வீடுகளை வாங்கிக் குவித்து வருவோருக்கும் ஒரே மாதிரியான வீட்டு வரி என்பது பொருத்தமற்றது. ஒரு வீடு வைத்திருப்பவர்களுக்குக் குறைந்த அளவு வீட்டு வரியும், இரண்டாவது வீடு, மூன்றாவது வீடு அதற்கு மேல் வைத்திருப்போருக்கு இருமடங்கு, மும்மடங்கு வரிகளையும் விதிப்பதே பொருத்தமான நடைமுறையாக அமையும்.

அதேபோன்று, அன்றாடப் பயன்பாட்டுக்கு இருசக்கர வாகனம் வைத்திருப்போருக்குக் குறைந்த வாகன வரியும், இரண்டு, மூன்று, நான்கு கார்கள், வாகனங்கள் எனத் தேவைக்கு மிஞ்சிப் பகட்டுக்காக வைத்துள்ள வசதி படைத்தோருக்குக் கூடுதல் வரியும் விதிப்பதே நியாயமானதாக இருக்கும். மின்கட்டணத்தில் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்கக் கட்டண விகிதம் எப்படி மாறுபடுகிறதோ, அதேபோன்று தேவைக்கு அதிகமாகச் சொத்து வைத்திருப்போர், வாகனம் வைத்திருப்போர், குடிநீர் உபயோகிப்போருக்கும் கட்டண, வரி விகிதங்கள் மாறும்படியாக இருக்க வேண்டும்.

மிதமிஞ்சிய அளவில் சொத்து, வாகனம் வைத்திருப்போரிடம் வரிகளைக் கூடுதலாக வசூலித்து, நிதிநிலையைச் சரிசெய்ய வேண்டும். தன் தேவைக்கு மட்டுமே சொத்து, வாகனம் வைத்திருக்கும் ஏழை, எளியோரிடமும், குறைந்த அளவில் மின்சாரம், குடிநீர் பயன்படுத்துவோரிடமும் முடிந்தவரை குறைந்த கட்டணம் மற்றும் வரி வசூலிப்பதே நல்ல நிர்வாகத்துக்கு அழகாக அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x