Last Updated : 09 Aug, 2021 03:16 AM

 

Published : 09 Aug 2021 03:16 AM
Last Updated : 09 Aug 2021 03:16 AM

இந்திய நாயகர்கள்

ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய அணி அதிகப் பதக்கங்கள் (7) பெற்ற போட்டி இது. இதற்கு முன்பு 2012 லண்டன் ஒலிம்பிக்கில் 6 பதக்கங்கள் பெற்றதே முந்தைய உச்சம். ஒலிம்பிக்கின் இறுதிக் கட்டத்தில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று நீரஜ் சோப்ரா ஒட்டுமொத்த நாட்டையும் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளார். ஒலிம்பிக்கில் இந்திய வெற்றியாளர்களின் வெற்றிப் பயணத்தைப் பற்றிய தொகுப்பு இது.

நீரஜ் சோப்ரா (பிறப்பு - 1997)

ஹரியாணாவின் கண்ட்ரா கிராமத்தில் பிறந்தவர் நீரஜ் சோப்ரா. இளம் வயதில் உடல் பருமன் அதிகமுள்ள நீரஜை அவருடைய அப்பா 24 கிமீ சைக்கிள் மிதிக்கச் செய்வார். அதன் பிறகு, பானிபட்டில் உள்ள உடற்பயிற்சி நிலையத்துக்குச் சென்றபோது அருகில் உள்ள விளையாட்டு மையத்துக்கும் செல்வார். அங்கே, ஈட்டி எறிதல் வீரர் ஜெய்வீர் சிங்கின் அறிமுகம் நீரஜுக்குக் கிடைத்தது. அவர் நீரஜ் சோப்ராவுக்கு ஈட்டி எறிதலில் பயிற்சியளித்தார். 19 வயதில் நீரஜ் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். 2016-ல் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் ஆனது மட்டுமல்லாமல், 86.48 மீட்டர் எறிந்து 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாதனை புரிந்தார். தற்போது 87.58 மீட்டர் தூரம் எறிந்திருக்கிறார். தனிநபர் போட்டிகளில் தங்கம் வென்ற இரண்டு இந்தியர்களில் ஒருவர் என்ற சாதனையோடு, நீரஜ் இந்தியாவின் பெருமையையும் வெகு தூரம் சென்றுசேரும்படி எறிந்திருக்கிறார்.

மீராபாய் சானு: (பிறப்பு - 1994)

மணிப்பூரின் நாங்போக் கக்சிங் கிராமத்தில் வறிய குடும்பம் ஒன்றில் பிறந்தவர் மீராபாய் சானு. மீராபாய் சிறுமியாக இருக்கும்போது, அவரது அண்ணனால் தூக்க முடியாத கனமான விறகுக் கட்டுகளை அவர் சர்வசாதாரணமாகத் தூக்குவதைக் குடும்பத்தினர் அறிந்து, அவரது திறமையைக் கண்டுகொண்டனர். அதன் பிறகு, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள விளையாட்டுப் பயிற்சி நிறுவனம் ஒன்றுக்குச் சென்று, பளுதூக்குதலில் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். இந்த ஒலிம்பிக்கில் அவர் மொத்தம் 202 கிலோ எடை தூக்கி வெள்ளி வென்றிருக்கிறார். முன்னதாக, 2014 காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளி, 2017 உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம், 2018 காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் ஆகியவற்றை வென்றிருக்கிறார். இந்திய அரசு இவருக்கு 2018-ல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் பத்மஸ்ரீ விருதையும் வழங்கியிருக்கிறது.

ரவிகுமார் தாஹியா: (பிறப்பு - 1997)

ஹரியாணாவின் நஹ்ரி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ரவிகுமார். 10 வயதிலேயே மல்யுத்தத்தில் ரவிகுமாருக்கு இருந்த ஆர்வத்தைக் கண்டுகொண்ட அவரது தந்தை ராகேஷ் தாஹியா, முன்னாள் மல்யுத்த வீரர் சத்பால் சிங்கிடம் பயிற்சிக்குச் சேர்த்துவிட்டார். விளையாட்டரங்கத்தில் பயிற்சி எடுத்துக்கொள்ளும் ரவிகுமாருக்கு, பாலும் பழங்களும் தருவதற்காகத் தனது கிராமத்திலிருந்து 10 கிமீ பயணித்து வந்து அவரது அப்பா அவற்றைத் தருவது வழக்கம். 2015-ல் உலக ஜூனியர் மல்யுத்தப் போட்டியில் ரவிகுமார் வெள்ளி வென்றார். அதன் பிறகு, 2018-ல் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி, 2019 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் முதலான பதக்கங்களை வென்றிருக்கிறார். தற்போதைய ஒலிம்பிக்கில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார்.

பி.வி.சிந்து: (பிறப்பு - 1995)

ஹைதராபாதில் விளையாட்டுப் பின்புலத்தைக் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தவர் பி.வி.சிந்து. 8 வயதிலிருந்தே பேட்மிண்டன் விளையாடிவருகிறார். தினமும் தனது வீட்டிலிருந்து 56 கிமீ பயணம் செய்து, பயிற்சி மையத்துக்கு நேரம் தவறாமல் அவர் வருவது பேட்மிண்டனில் அவர் செலுத்தும் ஈடுபாட்டைக் காட்டுகிறது என்று அவரது 13-வது வயதிலேயே ‘தி இந்து’ ஆங்கில இதழ் பாராட்டி எழுதியிருந்தது. பேட்மிண்டனில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற ஒரே இந்தியர், அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற ஒரே இந்தியப் பெண் போன்ற பல சாதனைகளை பி.வி.சிந்து படைத்திருக்கிறார். இந்திய அரசு அவருக்கு அர்ஜுனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருதுகள் ஆகியவற்றை வழங்கியிருக்கிறது.

லவ்லீனா போர்கோஹெய்ன்: (பிறப்பு - 1997)

அசாமைச் சேர்ந்த லவ்லீனா போர்கோஹெய்ன் சிறு வயதில் கிக்பாக்ஸிங்கில் ஆர்வம் காட்டினார். பிறகு, கிக்பாக்ஸிங்கிலிருந்து லவ்லீனா குத்துச்சண்டைக்கு மாறினார். அவர் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே பாதும் சந்திர போடோ என்ற பயிற்சியாளரால் அடையாளம் காணப்பட்டு, தொடர்ந்து பயிற்சியளிக்கப்பட்டார். 2018 காமன்வெல்த் போட்டிகளுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற ஏ.ஐ.பி.ஏ. உலகக் குத்துச்சண்டைப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றார். சர்வதேச அளவில் மிகப் பெரிய கவனத்தை ஈர்க்கும் வெற்றியை லவ்லீனா தற்போதுதான் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதன் மூலம் பெற்றிருக்கிறார்.

பஜ்ரங் பூனியா (பிறப்பு 1994)

ஹரியாணாவின் குடான் கிராமத்தில் பிறந்த பஜ்ரங் பூனியாவின் தந்தையும் மல்யுத்த வீரரே. 7 வயதிலிருந்தே பஜ்ரங் பூனியா மல்யுத்தத்தில் ஆர்வம் காட்டிவந்தார். சோனிப்பட்டில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் பஜ்ரங் பயிற்சி பெற்றார். 2013 ஆசிய மல்யுத்தப் போட்டியில் வெண்கலம், 2013 உலக மல்யுத்தப் போட்டியில் வெண்கலம், 2014 காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளி, 2014 ஆசியப் போட்டிகளில் வெள்ளி, 2018 காமன்வெல்த் போட்டிகளில் தங்கம், 2018 ஆசியப் போட்டிகளில் தங்கம், 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலக மல்யுத்தப் போட்டிகளில் முறையே வெள்ளி, வெண்கலம் போன்ற பதக்கங்களைப் பெற்றிருக்கிறார். தற்போதைய ஒலிம்பிக்கில் அவர் பெற்றிருக்கும் வெண்கலம்தான் பஜ்ரங்கின் பெயரை நாடு முழுவதும் கொண்டுசேர்த்திருக்கிறது.

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி:

வெண்கலப் பதக்கம் வென்றதை அடுத்து 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஹாக்கி அணியின் பதக்க வறட்சிக்கு முடிவு வந்திருக்கிறது. தற்போதைய ஒலிம்பிக்கில் அதிகபட்சமாக ஹர்மன்பிரீத் சிங் 6 கோல்கள் அடித்திருக்கிறார். ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் இது: மண்பிரீத் சிங் (அணித் தலைவர்), பி.ஆர்.ஸ்ரீஜேஷ் (கோல் கீப்பர்), ஹர்மன்பிரீத் சிங், ருபீந்தர் பால் சிங், சுரேந்தர் குமார், தில்பிரீத் சிங், ஹர்திக் சிங், குர்ஜாந்த் சிங், மண்தீப் சிங், சிம்ரன்ஜீத் சிங், மண்தீப் சிங், லலித் குமார் உபாத்யாய், சுமித் குமார், நீலகண்ட ஷர்மா, ஷாம்ஷேர் சிங், வருண் குமார், வீரேந்திர லக்ரா, அமித் ரோஹிதாஸ், விவேக் சாகர் பிரசாத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x