Published : 26 Feb 2016 09:11 AM
Last Updated : 26 Feb 2016 09:11 AM

தேர்தல்.. கொள்கை.. கூட்டணி!- சமூக ஆர்வலர்

நீதிக் கட்சி இருமுறை ஆட்சி செய்தபோது எவ்விதக் கவிழ்ப்பு அரசியலும் நடந்துவிடவில்லை. ஆனால், சுப்பராயனின் சுயேச்சை அமைச்சரவை சிறுபான்மை அரசாக இருந்ததால் சின்னச் சின்ன சிக்கல்களுக்கு உள்ளானது. முக்கியமாக, சைமன் குழுவின் வருகை ஆட்சிக்கு ஆபத்தை உருவாக்கப் பார்த்தது.

பிரிட்டிஷ் இந்தியாவில் நடைமுறையில் இருந்த இரட்டை ஆட்சி முறையில் புதிய திருத்தங்களைக் கொண்டுவர ஏதுவாக, ஜான் சைமன் தலைமையிலான குழுவை பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு அனுப்பியது. இந்தியர் எவரும் இடம்பெறாத சைமன் குழுவை காங்கிரஸும் சுயராஜ்ஜியக் கட்சியும் புறக்கணித்தன. ஆனால், சுயராஜ்ஜியக் கட்சியின் ஆதரவோடு ஆட்சியி லிருந்த முதல்வர் சுப்பராயன் சைமன் கமிஷனை வரவேற்றார். அது இருதரப்புக்கும் இடையே சிக்கலை உருவாக்கியது. ஆட்சி கவிழும் சூழல் உருவான போது, சுப்பராயனுக்கு நீதிக் கட்சி தோள்கொடுத்தது. ஆட்சிக் கவிழ்ப்பு தவிர்க்கப் பட்டது.

மீண்டும் சுப்பராயன் தலைமையில் அமைச்சரவை உருவானது. அதில் எஸ். முத்தையா முதலியாரும் சேதுரத்தினம் அய்யரும் இடம்பெற்றனர். பிராமணிய எதிர்ப்புக் கட்சியாக அறியப்பட்ட நீதிக் கட்சியின் ஆதரவுடன் உருவான அமைச்சரவையில் பிராமணர் ஒருவர் இடம்பெற்றது கேள்விக்குள்ளானது. ஆனால், “அமைந்திருப்பது சுயேச்சை அமைச்சரவைதானே தவிர, எங்கள் அமைச்சரவையல்ல” என்று விளக்கம் கொடுத்தது நீதிக் கட்சித் தலைமை.

சுப்பராயனின் அமைச்சரவையில் இடம்பெற்ற முத்தையா முதலியாரின் தீவிர முயற்சியின் பலனாக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ ஆணை (Communal G.O) வெளியானது. அரசுப் பணிகளில் அனைத்து வகுப்பினருக்கும் அவரவர் எண்ணிக்கை அடிப்படையில் பிரதிநிதித்துவம் கிடைக்க ஆவன செய்வது அந்த ஆணையின் நோக்கம். அதேபோல, ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி என எந்தக் கட்சியையும் சாராத சமூக ஆர்வலரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் முயற்சியால் தேவதாசி முறை ஒழிப்பு மசோதா நிறைவேறியது.

முற்போக்குத் திட்டங்களில் முனைப்புக் காட்டிய சுப்பராயனின் ஆட்சிக் காலம் 1930 செப்டம்பரில் முடிவுக்கு வந்தது. உடனடியாகத் தேர்தல் அறிவிக்கப் பட்டது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸோ முன்பைவிடத் தீவிர நிலைப்பாட்டை எடுத்திருந்தது. ஆம், தேர்தலிலும் போட்டியில்லை; தனிப்பட்ட காங்கிரஸார் போட்டியிட அனுமதியும் இல்லை, ஆதரவும் இல்லை. அந்த முடிவை ராஜாஜி, சத்தியமூர்த்தி போன்றோர் ஏற்கவில்லை. ஆனாலும் அதிருப்தியை அவர்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை.

கடந்த தேர்தலில் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் நம்பிக்கையுடன் களமிறங்கியது நீதிக் கட்சி. அதற்கு பெரியாரின் ஆதரவும் இருந்தது. தேர்தலின் முடிவில் நீதிக் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. நீதிக் கட்சித் தலைவராக இருந்த பி. முனிசாமி நாயுடு முதலமைச்சரானார். பி.டி. ராஜனும் குமாரசாமி ரெட்டியாரும் அமைச்சர்களானார்கள். ஆனால், அந்த ஆட்சிக்கும் இரண்டு ஆண்டுகளில் சிக்கல் வந்தது!

- ஆர். முத்துக்குமார், எழுத்தாளர். ‘மதுவிலக்கு’, ‘கச்சத்தீவு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com

(கோஷம் போடுவோம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x