Published : 06 Aug 2021 03:19 AM
Last Updated : 06 Aug 2021 03:19 AM

கோதாவரி - காவிரி இணைப்பு சாத்தியமா?

வெ.சுகுமாரன்

கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் 86 லட்சம் கோடி செலவில் செயல்படுத்தப்பட இருப்பதான அறிவிப்புகள் புருவத்தை உயர்த்தச் செய்துள்ளன. தென்இந்தியாவில் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். 2050-ல் தமிழ்நாட்டின் நீர்த் தேவை 57,725 மி.க.மீ. ஆக இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. மாநிலத்தின் சராசரி மழை அளவு 925 மி.மீ. காவிரி, பாலாறு, பெரியாறு பிரச்சினைகள் தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினைகளாக உள்ளன. தமிழ்நாட்டில் 3-ல் 2 பங்கு மாவட்டங்கள் இந்த மூன்று ஆறுகளை நம்பித்தான் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆறுகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் தமிழ்நாடு வறட்சிப் பிரதேசமாக மாறிவிடும்.

உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்ட அடிப்படையில், தேசிய நதிநீர் திட்ட வளர்ச்சி அமைப்பு, கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்துக்கு வரைபடம் தயாரித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பியது. அதன்படி, கோதாவரியில் மிகையாக உள்ள நீரை ஜூன் முதல் அக்டோபர் வரை 143 நாட்களில் 247 டி.எம்.சி. வழங்கலாம் என்றும், இதில் வீணாகும் நீர்போக மீதமுள்ள 230 டி.எம்.சி.யில் தெலங்கானாவுக்கு - 65.8 டி.எம்.சி., ஆந்திரத்துக்கு - 79.92 டி.எம்.சி., தமிழ்நாட்டுக்கு - 84.28 டி.எம்.சி. நீர் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டைத் தவிர, மற்ற மாநிலங்கள் இதனை ஏற்கவில்லை. இந்தியாவின் நீளமான நதிகளில் ஒன்றான கோதாவரி, மஹாராஷ்டிரத்தின் நாசிக் அருகில் திரியம்பகேஷ்வரில் தோன்றி மஹாராஷ்டிரம், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ஒடிசா, ஆந்திரம் வழியாக 1,465 கிமீ பயணித்து, வங்கக் கடலில் சேர்கிறது. கோதாவரி தெலங்கானாவின் நாகார்ஜுன சாகர், சோமசீலா அணைகள் வழியாக காவிரியுடன் குழாய்கள் மூலம் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இது ஏதோ ஒரு வாய்க்கால் மடையை மாற்றிவிடுவதுபோன்ற விஷயமல்ல. கோதாவரி-காவிரி இணைப்பைப் பொறுத்தவரை, மஹாராஷ்டிரம்-சத்தீஷ்கர் எல்லையில் கோதாவரியின் துணை நதியான இந்திராவதியில் ஒரு அணை கட்ட வேண்டும். அதில் தேங்கும் நீர் தெலங்கானாவின் கண்ணேஷ்வர் அணை, ஆந்திரத்தின் போலாவரம் அணை, நாகார்ஜுன சாகர் அணை வழியாக கிருஷ்ணா நதிக்குக் கொண்டுசென்று, அங்கிருந்து நீரை சோமசீலா அணை மூலம் பெண்ணாறு வழியாகக் காவிரிக்குக் கொண்டுசெல்வதே கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம். இவற்றை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள், பயன்-இழப்பு மதிப்பீடு, அமைவிடம் போன்றவை குறித்து அறிவியல்பூர்வமான ஆய்வுகள் நடைபெற்றுள்ளதாகத் தெரியவில்லை.

நதி என்பது நீர் மட்டும் சம்பந்தப்பட்ட ஒன்றல்ல. மாறாக, அது ஒரு உயிர்ச் சூழல் மண்டலம். ஒவ்வொரு நதிக்கும் ஒரு தன்மை உண்டு. ஆனால், அதை மற்றொரு நதியோடு இணைப்பதால் இயற்கையின் போக்கே மாறிவிடும். கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தில், கோதாவரி நீர் காவிரிக்கு வர வேண்டும் என்றால், பல குறுக்காறுகளை, அணைக்கட்டுகளை, மலைகளை, காடுகளை, குடியிருப்புப் பகுதிகளைக் கடந்து வர வேண்டும். சில இடங்களில் புவிஈர்ப்பு விசையுடன் இயைந்தும், பல இடங்களில் நீர் மேலேற்றம் செய்யப்பட்டும் கொண்டுவரப்பட வேண்டும். அதற்கான செலவு அதிகம் என்பதைவிட, அதை யார் ஏற்பது என்பதும் பிரச்சினைக்குரியதாகும்.

காடுகள், மலைகள் அழிக்கப்படுவதால், உயிர்ப்பன்மை மட்டுமல்லாமல் இயற்கைச் சூழல், பருவநிலை எனப் பலவும் பாதிப்புக்கு உள்ளாகும். புதிதாக ஏற்படுத்தப்படும் நீர்த்தடம் அதன் வழியிலுள்ள நீர்த் தேவையையும் பூர்த்திசெய்ய வேண்டும். இவ்வளவையும் கடந்து கோதாவரி நீர் கொண்டுவரப்பட்டால், அதைச் சேமிக்கும் ஏற்பாடும் வேண்டும்.

தமிழ்நாட்டில் 1,076 கிமீ நீளமுள்ள கடற்கரையில், எண்ணற்ற துறைமுகங்கள், அனல் மின்நிலையங்கள் உள்ளிட்ட வளர்ச்சி நடவடிக்கைகளால், கடலின் அலை உருவாகும் மறையில் மாற்றம் ஏற்பட்டு காவிரி டெல்டா பாதிப்புக்குள்ளாகிறது.

மகாநதி, கோதாவரியில் கடலில் கலப்பதாகச் சொல்லப்படும் மிகை நீரானது, பருவநிலை மாற்றப் பின்னணியில் அடுத்த 10-20 ஆண்டுகளுக்குப் பிறகு, இருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. எப்படிப் பனிப்பாறைகள் உருகி இமயமலையின் கங்கோத்ரி சுருங்கியுள்ளதோ, அதே போல இந்த நதிகளின் ஆதாரங்களும் சுருங்கும் வாய்ப்பே உள்ளது.

உபரி நீரைப் பயன்படுத்துவது குறித்துத் திட்டமிடும்போது எதிர்காலத் தேவையையும், அந்தந்த ஆறுகள் பாயும் மாநிலங்களில் உள்ள வறட்சிப் பகுதிகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஆண்டு முழுவதும் நீர்வரத்து உறுதி செய்யப்பட வேண்டும். ஆறுகளை இணைக்கத் திட்டமிடும்போதே நீர்வளம், மேலாண்மை, சாத்தியக்கூறுகள் குறித்த அனைத்து அம்சங்களையும் ஆய்ந்தறிய வேண்டும்.

ஆறுகள் இணைக்கப்படுகிறபோது, அணைகள் கட்டப்படுகிறபோது அவற்றைப் பராமரிப்பதற்கான செலவினங்களும் திட்டமிடப்பட வேண்டும். கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தில், அது குறிப்பிடப்படவே இல்லை. ஆறுகள் இணைக்கப்படுகிறபோது நாட்டின் அமைவிடமே மாறும் என்பதோடு, ஆற்றின் வழித்தடமும் பறிபோய், உயிர்ப்பன்மை பாதிக்கப்பட்டு, இயற்கைச் சூழலே மாற்றத்திற்கு உள்ளாகும்.

கோதாவரி-காவிரி இணைப்பின் சாத்தியக்கூறுகள் அரிதாக இருக்கும் வேளையில், இருக்கும் நீர் வளங்களைப் பாதுகாப்பது நம்முன் உள்ள கடமையாகும். தமிழ்நாட்டில் போதிய மழைப் பொழிவு இருந்தும் அண்டை மாநிலங்களைச் சார்ந்து இருக்க வேண்டியிருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய சட்டப்படியான தண்ணீரை வழங்காமல், ஒப்பந்தங்களை அண்டை மாநிலங்கள் மீறுகின்றன. கோதாவரி, கிருஷ்ணா வெள்ள மிகை நீரைத் தமிழ்நாட்டுக்குத் தருவோம் என ஆந்திரமோ, தெலங்கானாவோ இதுவரை கூறவில்லை. அப்படியே அவர்கள் தருவதாக இருந்தாலும் வெள்ளக் காலத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெள்ள நீரையே வழங்க முடியும். அது வெறும் 50 டி.எம்.சி நீரே ஆகும். அதனால், நமக்குப் பயன் ஏதும் இருக்கப்போவதில்லை. தேசிய நதிநீர் இணைப்பால் தமிழ்நாட்டுக்குப் பெரும் பயன் இருப்பதாக எந்தப் புள்ளிவிவரமும் இல்லை.

- வெ.சுகுமாரன், பேராசிரியர், மாநிலத் துணைத் தலைவர்,

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

தொடர்புக்கு: drvsukumar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x