Published : 04 Aug 2021 03:19 am

Updated : 04 Aug 2021 08:13 am

 

Published : 04 Aug 2021 03:19 AM
Last Updated : 04 Aug 2021 08:13 AM

தாய்ப்பாலின் உன்னதம் அறிவோம்!

world-breastfeeding-week

சூ.ம.ஜெயசீலன்

குழந்தைகளுக்குத் தாய்மார்கள் கொடுக்கும் உன்னதப் பரிசு தாய்ப்பால். குழந்தை பிறந்த முதல் மூன்று நாட்களில் கிடைக்கும் சீம்பால் விலைமதிப்பற்றது. தாய்ப்பாலில் எல்லா வகையான ஊட்டச்சத்து, உயிர்ச்சத்து, புரதச்சத்து ஆகியவை அதிகமாக இருப்பதால் குழந்தைகளின் முழுமையான உடல், மன வளர்ச்சிக்கு அது காரணமாகிறது.

இரைப்பை சார்ந்த சிக்கல்கள், நிமோனியா, நீரிழிவு, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதுடன் சுவாசத் தொற்றிலிருந்தும் ஒவ்வாமையிலிருந்தும் தாய்ப்பால் காக்கிறது. ஞாபக சக்தி, சிந்தனைத் திறன், அறிவுக் கூர்மை அதிகரிக்கிறது. பிறருடன் பழகுவதற்கும், தங்கள் உணர்வுகளைக் குழந்தைகள் ஒழுங்குபடுத்திக்கொள்வதற்கும் உதவுகிறது. மூளை வளர்ச்சிக்கும் தாய்ப்பால் குடிப்பதற்குமான தொடர்பை நிறைய ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.


தாய்ப்பால் கொடுப்பது மார்பகப் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய், நீரிழிவு, குழந்தை பெற்றெடுத்த பிறகான மனச்சோர்வுகள் போன்றவற்றிலிருந்து தாய்மார்களைப் பாதுகாக்கிறது. குழந்தைப் பேற்றுக்குப் பிறகு மாதவிடாய் ஏற்படுவதை, கருப்பையில் கருமுட்டை உருவாவதைத் தாமதப்படுத்துகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் ஆக்ஸிடோசின் ஹார்மோன் சுரக்கிறது. அதனால், தாயின் கர்ப்பப்பை எளிதாகச் சுருங்கி ரத்தப்போக்கைக் குறைப்பதுடன், கர்ப்பப்பை மீண்டும் அதன் பழைய நிலையை அடைய உதவுகிறது. பதற்றம், மன அழுத்தம், எதிர்மறை மனநிலை, ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பது தொடர்பாக 123 நாடுகளில் ஆய்வுசெய்த யுனிசெஃபின் ஊட்டச்சத்துப் பிரிவு, 95% குழந்தைகளுக்குத் தாய்ப்பால் எப்போதும் கிடைப்பதாகச் சொல்கிறது. குறைந்த வருமானம், நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் 4% குழந்தைகளுக்கும், அதிக வருமானம் உள்ள நாடுகளில் 21% குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்கவேயில்லை. ஒவ்வொரு நாட்டிலும் தனித்தனியாக மேற்கொண்ட ஆய்வில், பணக்கார நாடுகளில் ஏழை மக்களும், ஏழை அல்லது நடுத்தர நாடுகளில் வருமானம் உள்ளவர்களும் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்ப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இந்தியாவில், பிறந்த ஒருமணி நேரத்தில் 42% குழந்தைகளுக்குத்தான் தாய்ப்பால் கிடைக்கிறது. 55% குழந்தைகளே 0-6 மாதம் வரை தாய்ப்பால் மட்டும் குடிக்கிறார்கள். தாய்ப்பால் கிடைத்தால் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகளை, குறிப்பாக வயிற்றுப்போக்கினாலும் நிமோனியாவினாலும் பலியாகாமல் காப்பாற்ற முடியும்.

தாய்ப்பால் கொடுக்க இயலாமை

குழந்தை பெற்ற அனைவராலும் தாய்ப்பால் கொடுக்க இயலாது என்கிற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பாதியில் நிறுத்துதல்: மார்புக் காம்பில் புண், வெடிப்பு, ரத்தம் வருதல், தாங்க முடியாத வலி, மார்பில் தொற்று ஏற்படுதல், சீழ் உருவாதல், போதுமான பால் இல்லாமை, தொடர்ச்சியாகப் பால் வருவதில் சிக்கல், பல மணி நேரம் குழந்தையைப் பிரிந்திருக்க வேண்டிய பணிச்சூழல் உள்ளிட்ட காரணங்களால் குறுகிய காலத்திலேயே தாய்ப்பால் கொடுப்பதைச் சிலர் நிறுத்துகிறார்கள்.

கொடுக்கக் கூடாது: கதிர்வீச்சு சிகிச்சை பெறுகிறவர்கள், தீவிரத் தொற்று, காசநோய் உள்ளவர்கள், குறிப்பிட்ட சில உடல், மன நோய்களுக்காக மருந்து சாப்பிடுகிறவர்கள், கீமோதெரபி எடுக்கிறவர்கள், போதைப்பொருள், மதுவுக்கு அடிமையானவர்கள் தாய்ப்பால் கொடுக்கக் கூடாது. கொடுக்க முடியாது: பால் கொடுக்கும் ஆவல் இருந்தாலும் பால் சுரக்கத் தூண்டுகின்ற சுரப்பி (prolactin) குறைவாக இருப்பவர்கள், பால் சுரக்கும் திசுக்கள் (Glandular tissue) போதுமான அளவு வளர்ச்சி பெறாதவர்கள், அறுவைச் சிகிச்சை மூலமாக மார்பளவு குறைக்கப்பட்டிருப்பவர்கள் பால் கொடுக்க முடியாது. பால் கொடுப்பதால் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட முந்தைய கொடூரங்கள் நினைவூட்டப்படும் என்றால் அவர்களாலும் முடியாது.

இயலாமையின் உளவியல் தாக்கம்

தாய்ப்பால் கொடுக்க முன்கூட்டியே முடிவெடுத்து, அதை வெற்றிகரமாக நிறைவேற்றியவர்களுக்கு, குழந்தை பிறந்த பிறகான மனச்சோர்வு குறைவாக இருப்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. தாய்ப்பால் கொடுக்கும் ஆசை தடைபடும்போது தீவிரமான உளவியல் தாக்கம் ஏற்படுகிறது. தாய்ப்பால் சுரப்பதிலும், குழந்தை பால் குடிப்பதிலும் சிரமம் ஏற்பட்டு, மருத்துவர்களும் பெரியவர்களும் சொன்ன பல்வேறு வழிமுறைகளையும் செய்துபார்த்த பிறகும் தீர்வு கிடைக்காதபோது, தாய் முற்றிலும் சோர்ந்துபோகிறார். பால் கிடைக்காமல் தன் குழந்தை அழும்போதும், குழந்தைக்குத் தேவையான அளவு பால் சுரக்காதபோதும் கவலையும் விரக்தியும் மனச்சோர்வை அதிகரிக்கின்றன.

அரசாங்கமும் தொண்டு நிறுவனங்களும் மருத்துவர்களும் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை அறிவுறுத்துகிற அதே வேளையில், தாய்ப்பால் கொடுப்பதில் உள்ள சிக்கல்களையும், கொடுக்க இயலாமல் துயருறுகிறவர்கள் தாங்களாக மீண்டுவருவதற்கான வழிமுறைகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும். பெண்களைச் சங்கடப்படுத்துகின்ற சமூகத்தின் மனப்பான்மையை மாற்ற, தாய்ப்பால் கொடுக்க இயலாததால் ஏற்படும் உளவியல் பிரச்சினைகளைச் சொல்லி அறிவூட்ட வேண்டும். உடல், மன, மருத்துவ மற்றும் தனிப்பட்ட காரணங்களால் தாய்ப்பால் கொடுக்க இயலாதவர்களின் முடிவை நாம் மதிப்பது, தாயின் மனநலனை மேம்படுத்தும், உடல்நலனை உறுதிப்படுத்தும், குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க உதவும்.

- சூ.ம.ஜெயசீலன், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com

ஆகஸ்ட் 1-7 ‘உலக தாய்ப்பால் வாரம்’


தாய்ப்பாலின் உன்னதம்தாய்ப்பால்Mothers milkWorld Breastfeeding Week

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x