Published : 26 Feb 2016 11:08 AM
Last Updated : 26 Feb 2016 11:08 AM

பொருளாதார அளவுகோல் சரியல்ல!

‘இடஒதுக்கீடு கேட்பதற்கான தார்மிக உரிமை!’ என்ற தலையங்கம் (24.02.2016) படித்தேன். அதில் ‘சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறைக்க வேண்டும் என்பதுதான் இடஒதுக்கீட்டின் நோக்கம்’ என்றும், ‘உயர் வருவாய்ப் பிரிவினர் (கிரீமிலேயர்) என்பதற்குச் சரியான விளக்கம் அளிப்பதும் அவசியம்’ என்றும் குறிப்பிட்டிருந்தது. ஒரு விஷயத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 1951-ல் நிறைவேறிய முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் 15(4) என்ற புதுப் பிரிவு இணைக்கப்பட்டது. அதில் பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காட்டும் வகையில் ‘சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்’ (Socially and Educationally) என்ற சொற்றொடர்களைப் போட்டுத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

அன்று சிலர் பொருளாதார ரீதியாக (Economically) என்ற சொற்றொடரும் இடம்பெறுவது அவசியம் என்று சில திருத்தங்களைத் தந்தனர். அதைச் சட்ட அமைச்சர் டாக்டர். அம்பேத்கரோ, பிரதமர் நேருவோ ஏற்கவில்லை. இறுதியில் நடந்த வாக்கெடுப்பில் பொருளாதார அளவுகோல் கூடாது என 243 பேரும் பொருளாதார அளவுகோல் வேண்டும் என 3 பேரும் வாக்களித்ததால் சட்டத் திருத்தத்தில் ‘சமூக, கல்வி ரீதியாக’ என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. பொருளாதார ரீதியான அளவுகோல் கூடாது என்பதற்கு அன்றைய பிரதமர் நேரு நாடாளுமன்றத்தில் அளித்த பதில் ‘நாடாளுமன்ற விவாதம் 1951-மூன்றாம் அமர்வு பாகம் - தொகுதி 12 - பத்திகள் 9814, 9820, 9822’ ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டிருகிறது.

இதை நாம் மறந்துவிடக் கூடாது. இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைப் புகுத்த முற்படுவது தவறு. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே கிரிமீலேயர் பார்க்க வேண்டும் என்கிற நியாயம், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உயர் சாதியினருக்கும் பொருந்தும்தானே என்ற கேள்விக்கு இதுவரை யாரிடமிருந்தும் எந்தப் பதிலும் இல்லை என்பதை நாம் உணர்வதும் நல்லது.

- பொ. நடராசன், நீதிபதி (பணி நிறைவு), உலகனேரி, மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x