Published : 03 Aug 2021 03:14 am

Updated : 03 Aug 2021 05:56 am

 

Published : 03 Aug 2021 03:14 AM
Last Updated : 03 Aug 2021 05:56 AM

ஒலிம்பிக் ஏமாற்றம்: என்னதான் காரணம்?

olympics-2021

‘வாரத்துக்கு ஒரு பி.டி. வகுப்பு. அந்த வகுப்பையும் பாடத்தை நடத்தி முடிக்காத மற்ற பாட ஆசிரியர்கள் எடுத்துக்கொள்வார்கள். பிறகு எப்படி ஒலிம்பிக்கில் பதக்கம் கிடைக்கும்?’ என்கிற மீம் சமூக ஊடகங்களில் கடந்த வாரம் வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது. ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கம் வெல்லாததற்கான காரணத்தை இந்த மீமைவிட சுருக்கமாக, சிறப்பாக வெளிப்படுத்திவிட முடியாது.

ஆண்டு முழுவதும் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஐ.பி.எல். கிரிக்கெட் போன்றவையே பெரும்பான்மை இந்திய ரசிகர்களின் மனங்களை ஆக்கிரமித்திருக்கின்றன. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை திடீரென்று விழிப்பு ஏற்பட்டதுபோல் ஒலிம்பிக்கில் அதிகப் பதக்கம் வெல்லாமல் போவது ஏன் என்கிற கேள்வியை அரசோ ரசிகர்களோ யார் கேட்டாலுமே, அது நியாயமான கேள்விதானா?


டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு 127 பேர் கொண்ட மிகப் பெரிய அணியை இந்தியா நம்பிக்கையுடன் அனுப்பியது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் வெளிநாட்டுப் பயிற்சி மையங்களிலும் வெளிநாட்டுப் பயிற்சியாளர்களிடமும் பயிற்சி பெற்றார்கள். ஒலிம்பிக்கில் அதிகப் பதக்கம் வெல்லும் நோக்கத்துடன் டாப்ஸ் (Target Olympic Podium Scheme) என்கிற பெயரில் மத்திய விளையாட்டு அமைச்சகம் முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, நிதியும் ஒதுக்கியிருந்தது. போட்டிகள் தொடங்கி 2-வது நாளிலேயே சாய்கோம் மீராபாய் சானு வெள்ளி வென்றது இந்திய விளையாட்டு ரசிகர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரித்தது. பி.வி. சிந்துவின் வெண்கலப் பதக்கத்துடன், மகளிர் குத்துச்சண்டையில் லவ்லினா ஒரு பதக்கத்தை உறுதிபடுத்தியிருக்கிறார். மற்ற முன்னணி வீரர்கள் பலரும் பதக்கம் வெல்லத் தவறினார்கள்.

இந்த முறை நிச்சயம் பதக்கம் வெல்வார்கள் என்கிற பெருநம்பிக்கையோடு சென்றிருந்த பலரும் ஏமாற்றத்துடன் திரும்பியிருப்பதற்கு விளையாட்டு அமைப்புகள்- விளையாட்டுத் துறை அதிகாரிகள்- பயிற்சியாளர்கள்-விளையாட்டு வீரர்கள் இடையிலான இணக்கமான புரிதல், இணைந்து செயல்படும் தன்மை, நெருக்கடியான சூழ்நிலைகளைச் சமாளித்தல் போன்றவற்றில் ஏற்பட்ட மிகப் பெரிய இடைவெளிகளே முக்கியக் காரணம்.

இப்படியும் ஒரு பயிற்சியாளர்

திறமையான விளையாட்டு வீரர்களுக்கு உதவுகிறார்களோ இல்லையோ, நிறைய பிரச்சினைகள் ஏற்பட அமைப்புகளும் பயிற்சியாளர்களும் காரணமாக இருந்திருக்கிறார்கள். துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாகர்-பயிற்சியாளர் ஜஸ்பால் ராணா இடையிலான மோதல், மூன்றாவது சுற்றுவரை முன்னேறி ஆச்சரியப்படுத்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ராவின் பயிற்சியாளர் சன்மய் பராஞ்ச்பே போட்டி நடக்கும் உள்ளரங்கங்களுக்கு அனுமதிக்கப்படாதது, வினய் போகத் உள்ளிட்ட நான்கு பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பிசியோதெரபிஸ்ட் அனுப்பப்படாதது, ஒலிம்பிக் ஆடவர் இரட்டையர் பிரிவில் விளையாடப் போகும் இணை எது என்பது குறித்து ரோஹன் போபண்ணா-அகில இந்திய டென்னிஸ் சங்கம் இடையிலான மோதல் போன்றவை கவனத்துக்கு வந்துள்ளன. இதுபோன்ற மோதல்கள் சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியாவின் மதிப்பைக் குலைக்கக்கூடியவை.

எடுத்துக்காட்டுக்கு, ஒரு பிரச்சினையை விரிவாகப் பார்க்கலாம். மனு பாகரின் பயிற்சியாளராக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டுவந்தவர் ஜஸ்பால். ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயாராகிக்கொண்டிருந்த நிலையில், மனு பாகருக்கும் அவருக்கும் இடையிலான மோதல் வலுத்தது. ஒலிம்பிக் போட்டிகளின் மூன்று பிரிவுகளில் மனு பாகர் பங்கேற்க முடியாது என்று வெளிப்படையாகவே ஜஸ்பால் பேசிவந்தார். வழக்கமாக 3 பிரிவுகளில் பங்கேற்றுவரும் மனு 2018 காமன்வெல்த் போட்டியில் தங்கம், 2018-லிருந்து உலகக் கோப்பைப் போட்டிகளில் 9 தங்கப் பதக்கங்களை வென்றவர். ஒரு நிலையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கி என்கிற வீராங்கனையை மனு பாகருக்குப் போட்டியாக ஜஸ்பால் முன்னிறுத்தத் தொடங்கினார்.

இந்திய தேசிய துப்பாக்கிசுடும் சங்கமோ, தகுதியின் அடிப்படையில் மனு பாகரை ஒலிம்பிக்குக்குத் தேர்ந்தெடுத்தது. ஒலிம்பிக்குக்கு முந்தைய பயிற்சிக்காக இந்திய துப்பாக்கிசுடும் அணி குரோஷியாவுக்கு மே மாதம் புறப்பட்டபோது, மனு பாகர்-ஜஸ்பால் இடையிலான பிரச்சினைக்குத் தீர்வு காண முயலப்பட்டது. ஆனால், தீர்வு கிடைக்காத நிலையில், மனுவின் பயிற்சியாளராக ரோனக் நியமிக்கப்பட்டார்.

களத்தில் வீரர்/ வீராங்கனைகள்தான் திறமையை வெளிப்படுத்தப் போகிறார்கள் என்றாலும், விளையாட்டின் போக்கு-எதிராளியை எப்படிக் கையாள்வது என்பது குறித்த மேம்பட்ட பார்வையைப் பயிற்சியாளர்கள் வழங்க முடியும். விளையாட்டில் நவீனத் தொழில்நுட்ப வசதிகள், திட்டவட்டமான கண்காணிப்பு/ விதிமுறைகள் அதிகரித்துவிட்ட நிலையில், உடல் வலுவால் மட்டுமில்லாமல், மனரீதியிலும் வியூகரீதியிலும் விளையாடப்படுவதாக நவீன விளையாட்டுகள் மாறிவிட்டன. இந்நிலையில் சில பயிற்சியாளர்கள், விளையாட்டு அலுவலர்களே இந்தியாவின் வெற்றிக்குத் தடைக்கல்லாக மாறியிருக்கிறார்கள்.

கேட்க மறந்த கதைகள்

ஒலிம்பிக்கில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நவீன அடையாளங்களின் ஒரு பகுதியாகவே விளையாட்டுத் துறையை மாற்றிக்கொண்டுள்ளன. அந்த நாடுகளின் விளையாட்டுத் துறைக்குள் காலடி எடுத்துவைக்கப் போட்டி நிலவும் அதேநேரம், அதில் ஈடுபடுவதற்குத் திட்டவட்டமான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால், இந்தியாவோ சிறிய வளரும் நாடுகள் அடைந்துள்ள வளர்ச்சியைக்கூடப் பெறவில்லை. ஹுசைன் போல்டை உருவாக்கிய ஜமைக்காவும் மாரத்தான் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் எத்தியோப்பியாவும் கென்யாவும் வளர்ந்த நாடுகளோ, மிகப் பெரிய நாடுகளோ அல்ல. அதேநேரம், விளையாட்டை வாழ்க்கை முறையாகவும் குறிப்பிட்ட சில விளையாட்டுப் பிரிவுகளில் உலகத் தரமான பயிற்சியையும் வழங்குவதன் மூலமே அந்நாடுகள் தற்போதைய உயரத்தை எட்டியுள்ளன.

இந்திய அளவில் பஞ்சாப்-ஹரியாணா, மஹாராஷ்டிரம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்கள்தான் உலகளாவிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அதிகமானோரை அனுப்புகின்றன. ஒலிம்பிக் போட்டிகளில் தனிநபர்கள் வென்ற 3 பதக்கங்கள் ஹரியாணா மாநிலத்திலிருந்தும், 2 பதக்கங்கள் மணிப்பூரிலிருந்தும் வந்துள்ளன. விளையாட்டை ஊக்குவிப்பதற்கான செயல்திட்டமும் நடைமுறைகளும் மற்ற மாநிலங்களைவிட இந்த மாநிலங்களில் கூடுதலாக உள்ளன. தமிழக வீராங்கனைகள் சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர் ஆகியோர் ஒரு பக்கம் வறுமையுடன் போராடிக்கொண்டே ஒலிம்பிக்குக்குத் தகுதிபெற்றுள்ளனர். அவர்களுடைய ஒலிம்பிக் வெற்றிகளைக் கணக்கில்கொள்ளாமல், அரசு வேலை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருப்பது மிகவும் ஆக்கபூர்வமான நகர்வு.

மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று நாடு திரும்பிய பிறகு, அவருடைய சாதாரணமான வீட்டில் தரையில் அமர்ந்து எளிய உணவை உண்ணும் ஒளிப்படம் வெளியானது. ஒலிம்பிக்குக்குப் புறப்படுவதற்கு முன் தன்னுடைய காதணியை அழித்து, புதிய காதணியைச் செய்துகொடுத்தேன் என அவருடைய அம்மா கூறியிருந்தார். ‘காக்கா முட்டை’ படத்தில் வருவதைப் போல தன் வாழ்க்கை முழுக்க ஒரு பீட்சாவுக்காக மீராபாய் சானு ஏங்கியிருக்கிறார். அவர் ஒலிம்பிக் பதக்கம் வென்றவுடன் வாழ்நாள் முழுக்க பீட்சா அனுப்புவோம் என்று தனியார் பீட்சா நிறுவனமும் பெரும் பரிசுத் தொகைகளை மத்திய, மாநில அரசுகளும் அறிவித்திருக்கின்றன. இதற்கு முன்னர் அவர் பெற்ற எத்தனையோ வெற்றிகள் போதிய அளவில் கொண்டாடப்படவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

ஒவ்வொரு இந்திய விளையாட்டு வீரர்/ வீராங்கனைக்குப் பின்னாலும் இதுபோல் சொல்லப்படாத கதைகள் ஏராளம் உண்டு. இவ்வளவு வாழ்க்கை நெருக்கடிகள், பயிற்சிக்கான உரிய வசதியின்மை, அலுவலர்கள்-பயிற்சியாளர்களுடனான பல போராட்டங்களைத் தாண்டி ஒலிம்பிக்கில் இந்தியா அதிகப் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்று நினைப்பது நியாயமான எதிர்பார்ப்புதானா?

- ஆதி வள்ளியப்பன், தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in
ஒலிம்பிக்Olympics 2021ஒலிம்பிக்கில் பதக்கம்டோக்கியோ ஒலிம்பிக்Target Olympic Podium Schemeமத்திய விளையாட்டு அமைச்சகம்பி.வி. சிந்துலவ்லினா

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x