Published : 02 Aug 2021 03:15 am

Updated : 02 Aug 2021 06:56 am

 

Published : 02 Aug 2021 03:15 AM
Last Updated : 02 Aug 2021 06:56 AM

சட்டமன்ற ஜனநாயகத்தின் நூற்றாண்டு

tn-assembly-100

சட்டமன்றம் சார்ந்து விழாக்களைக் கொண்டாடுவதில் திமுகவுக்கு எப்போதுமே தனியார்வம் உண்டு. 1937-ஐ முதலாகக் கொண்டு 1989-ல் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொன்விழாவைக் கொண்டாடினார் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி. அதை உறுதிப்படுத்தும் வகையில் பத்தாண்டுகள் கழித்து சட்டமன்றத்தின் (Legislative council) பவள விழாவையும் சட்டமன்றப் பேரவையின் (Legisaltive assembly) வைர விழாவையும் ஒருசேர 1997-ல் கொண்டாடினார். இப்போது நடத்தப்படும் விழா, நீதிக் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற 1921-ம் ஆண்டை தமிழ்நாடு சட்டமன்றத்தின் தொடக்கமாகக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தின் தொடக்கத்தை எந்த ஆண்டிலிருந்து கணக்கிடுவது என்று விவாதங்களும் தற்போது எழுந்துள்ளன. 1937-ஐச் சட்டமன்றப் பேரவையின் தொடக்கமாகக் கொள்வதற்கான காரணங்களைப் போலவே 1921-ஐ சட்டமன்றத்தின் தொடக்கமாகக் கொள்வதற்கான காரணங்களும் முக்கியமானவையே.

சுதந்திரம் பெறுவதற்கு முன்பான பிரிட்டிஷ் காலனிய ஆட்சி வரலாற்றிலேயே இன்றைய இந்திய ஜனநாயகத்தின் தொடக்கப் புள்ளிகளைக் காணலாம். 1861-லேயே மத்திய அரசாங்கத்திலும் மாகாணங்களிலும் ஆலோசனை மன்றங்கள் அமைக்கப்பட்டன. 1892, 1909 ஆண்டுகளில் அவையே விரிவுபடுத்தப்பட்டன. என்றாலும் இவற்றில் இடம்பெற்ற மக்கள் பிரதிநிதிகள் நேரடித் தேர்தலின் வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்படாமல் பட்டதாரிகள், வணிகர்கள், உள்ளாட்சி அங்கத்தினர்கள் ஆகிய அமைப்புகளின் வழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிகாரிகள் இல்லாத உறுப்பினர்கள் என்பதுதான் அதன் உண்மையான அர்த்தம். அதுவும்கூட மொத்த எண்ணிக்கையில் பாதியளவுக்கு மட்டும்தான். 1919 சீர்திருத்தங்கள்தான் சட்டமியற்றும் சபை என்ற அடிப்படையில், இந்தியர்களுக்கு ஆட்சி நிர்வாகத்தில் பகுதிப் பொறுப்பாட்சியை வழங்கியது. அதன் அடிப்படையில்தான் 1921-ல் ஒன்பது மாகாணங்களில் புதிய சட்டமன்றங்கள் உருவாக்கப்பட்டன.


1892-ல் பொருளாதாரத்தில் முன்னேறிய சாதிகள் மட்டுமே பயன்பெற்றன. 1909 சீர்திருத்தம் குறிப்பாக பிராமணரல்லாத உயர்சாதிகளுக்கும் மதச் சிறுபான்மையினருக்கும் அரசியல் வாய்ப்புகளை உருவாக்கியது. 1919 மாண்ட்போர்டு சீர்திருத்தங்கள் அதை இன்னும் விரிவுபடுத்தி ஆட்சிப் பொறுப்பையே அவர்களின் கையில் வழங்கியது. மாகாணங்களில் ஆட்சி நிர்வாகத்தின் தலைவராக ஆளுநரை ஏற்றுக்கொண்டு, சட்டமியற்றும் நடவடிக்கைகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிடம் வழங்கியது. அதற்குக் காரணமாக இருந்த அன்றைய இந்தியச் செயலர் மாண்டேகு நன்றியோடு இன்றைய தினம் நினைத்துப்பார்க்க வேண்டியவராக இருக்கிறார். அவர் பரிந்துரைத்த சீர்திருத்தங்களை ஆங்கிலேயே அதிகார வர்க்கத்தினர் விரும்பவில்லை. முதலாவது உலகப் போரில் இங்கிலாந்தின் வெற்றிக்காக இந்தியர்கள் சிந்திய ரத்தமும்கூட இந்த ஜனநாயக வாய்ப்பை விரைவுபடுத்தியது எனினும் 1909-லேயே அதற்கு வித்திடப்பட்டுவிட்டது என்பதும் சேர்த்தெண்ணப்பட வேண்டும்.

மாண்ட்போர்டு சீர்திருத்தங்கள் அரசியல் பரிசோதனையாகத்தான் மேற்கொள்ளப்பட்டன. ஏனெனில், அதற்கு முன்பாக அப்படியொரு பொறுப்பாட்சி முறை இங்கு நடைமுறையில் இருந்ததில்லை. மத்திய அரசாங்கத்தின் முழுக் கட்டுப்பாட்டிலிருந்து மாகாண அரசாங்கங்கள் விடுபட்டுத் தமக்குப் பொறுப்புள்ள துறைகளில் சுயமாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டன. உள்ளாட்சி அமைப்புகளில் இந்தியர்கள் பெற்றிருந்த அனுபவங்களின் அடிப்படையிலேயே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், மாகாண அரசாங்கத்தின் முழுமையான அதிகாரங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை. ஒரு பகுதி அமைச்சரவையிடமும் மற்றொரு பகுதி வழக்கம்போல ஆளுநர் தலைமையிலான நிர்வாக அவையிடமுமே இருந்தன. அமைச்சரவையின் பொறுப்பில் இருந்த துறைகள் மாற்றப்பட்ட துறைகள் எனவும் ஆளுநரின் பொறுப்பில் இருந்த துறைகள் ஒதுக்கப்பட்ட துறைகள் எனவும் வகைப்படுத்தப்பட்டன.

ஒதுக்கப்பட்ட துறைகளில் நிதி, நீதி, நீர்ப் பாசனம், தொழிற்சாலைகள் உள்ளிட்ட முக்கியத் துறைகள் இருந்தன. மாற்றப்பட்ட துறைகளில் கல்வி, நூலகம், உள்ளாட்சி, மக்கள் நல்வாழ்வு, சுகாதாரம், மத விவகாரங்கள், அறநிலையங்களைக் கட்டுப்படுத்துதல் ஆகிய துறைகள் இருந்தன. இரு வகைகளாகப் பிரிக்கப்பட்ட துறைகளுக்கு இடையே ஒருங்கிணைவு இல்லை என்பது ஒரு குறையாக இருந்தது. எனினும், இரண்டுக்கும் பொதுவாக ஒரே வரவு-செலவுத் திட்டம்தான் பின்பற்றப்பட்டுவந்தது. இந்த இரட்டையாட்சி வாய்ப்பின் வழியாக 1921-ல் சட்டமன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் அவர்களின் அமைச்சரவைகளும் ஆட்சி நிர்வாகத்தில் தங்களது திறமையை நிரூபித்து, அடுத்தடுத்த அரசியல் சீர்திருத்தங்களுக்கும் அடிகோலினர். குறிப்பாக, சென்னை மாகாணத்தில் ஆட்சிக்கு வந்த நீதிக் கட்சி கல்வி, சமய நிறுவனங்களைக் கட்டுப்படுத்துதல் இரண்டிலும் தனது கொள்கையை வலுவாக நிறுவியது.

மாண்ட்போர்டு சீர்திருத்தங்களின் காரணகர்த்தாக்களில் ஒருவரான செம்ஸ்போர்டு, ‘இந்திய அரசாங்கத்தில் தாங்கள் புகுத்தியுள்ள சீர்திருத்தக் கொள்கைகள், அரசியல் அடிப்படையில் மிகப் பெரும் மாற்றத்தை நாளடைவில் ஏற்படுத்துவதோடு, இந்திய சமுதாய அமைப்பிலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தும்’ என்று கூறியிருந்தார். அவரது வார்த்தைகள் உண்மையாகிவிட்டன என்பதை அன்றைய நீதிக் கட்சி தொடங்கி, இன்றைய திராவிடக் கட்சிகள் வரை தொடர்ந்து நிரூபித்துவருகின்றன.

1919 சீர்திருத்தத்தின்படி சென்னையில் அமைக்கப்பட்ட சட்டமன்றத்தில் 98 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் 25 நியமன உறுப்பினர்களும் இருந்தனர். சட்டமன்றத்தின் பதவிக்காலம் மூன்றாண்டுகள். எனினும், ஆளுநர் சட்டமன்றத்தை முன்கூட்டியே கலைக்கவோ பதவிக்காலத்தை நீட்டிக்கவோ அதிகாரம் பெற்றிருந்தார். இன்று நடைமுறையில் இருக்கும் மாநில ஆளுநர்களின் அதிகாரங்களுக்கும் இரட்டையாட்சியே வித்திட்டது என்றும் கொள்ளலாம். மாகாணச் சட்டமன்றத்தில் இயற்றப்படுகிற சட்டங்களை கவர்னர் ஜெனரலின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கும் அதிகாரமும் ஆளுநரின் வசமிருந்தது. கவர்னர் ஜெனரலின் இடத்தில் இன்று குடியரசுத் தலைவர். இத்தனை நெருக்கடிகளுக்கு நடுவிலும் ஆளுநரின் நிர்வாக அவைக்கும் அமைச்சரவைக்குமான இணைப்புக் கூட்டங்களை இணக்கத்துடன் நடத்திய மாகாணமாக சென்னை பெருமைபெற்றது.

1921-ல் சென்னை மாகாணம் மட்டுமின்றி வங்காளம், பம்பாய், ஐக்கிய மாகாணங்கள், பஞ்சாப், பிஹார், ஒரிஸா, மத்திய மாகாணங்கள், அஸ்ஸாம் ஆகிய மாகாணங்களிலும் இரட்டையாட்சி நடைமுறைக்கு வந்தது. ஏறக்குறைய 16 ஆண்டு காலம் அது நடைமுறையில் இருந்தது. பின்பு,1935 சீர்திருத்தங்களின்படி மாகாண சுயாட்சி வழங்கப்பட்டு, அது 1937-ல் நடைமுறைக்கு வந்தது. எனவே, கருணாநிதியின் ஆட்சிக் காலங்களில் மாகாண சுயாட்சி கிடைத்து, சட்டமன்றப் பேரவை கூட்டப்பட்டதன் பொன்விழா, வைரவிழாக்கள் கொண்டாடப்பட்டன. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் இன்று கொண்டாடப்படுவது அன்றைய சென்னை மாகாணத்தில் மக்களால் முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா. ஒருவகையில், இது அரசு நிர்வாகத்தில் பிராமணர் அல்லாதாரின் பெரும் பிரவேசத்துக்கு எடுக்கப்படும் நூற்றாண்டு விழா. இன்னொரு வகையில், தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தேர்தலின் வாயிலாகவும் சட்டமன்றங்களின் வாயிலாகவும் ஜனநாயகக் கோட்பாடுகள் அறிமுகமான இரட்டையாட்சியின் நூற்றாண்டு விழாவும்கூட.

- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in


சட்டமன்ற ஜனநாயகத்தின் நூற்றாண்டுTN assembly 100சட்டமன்றம்திமுகLegislative counci

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x