Last Updated : 01 Aug, 2021 06:29 AM

 

Published : 01 Aug 2021 06:29 AM
Last Updated : 01 Aug 2021 06:29 AM

மேரி கோம்: தங்கம் போனாலும் தங்கமகள்தான்

எண்ணற்ற பதக்கங்களை வென்றுள்ள குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்பதே ஆகப் பெரும் லட்சியம். 38 வயதில் அவரைத் தீவிரமாக இயக்கிக்கொண்டிருப்பதும் அந்த வேட்கைதான். ஆனால், டோக்கியோ ஒலிம்பிக்கில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கொலம்பிய வீராங்கனை இங்க்ரிட் வேலன்சியாவிடம் தோல்வியடைந்ததால், ஒலிம்பிக் தங்கம் என்பது மேரியின் நிறைவேறாத கனவாகிவிட்டது. ஏனெனில், அடுத்த ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான அதிகபட்ச வயதை (40) அவர் கடந்திருப்பார்.

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல முடியவில்லை என்றாலும், இந்திய விளையாட்டு உலகின் தங்கமகள் என்கிற அடைமொழிக்குப் பல்வேறு வகைகளில் பொருத்தமானவர் மேரி கோம். 1990-களில் பி.டி.உஷா விளையாட்டுத் துறையில் சாதிக்கத் துடித்த பல பெண்களுக்கு உந்துசக்தியாக இருந்தார். புத்தாயிரத்தில் அந்த இடத்தைப் பெற்றவர் மேரி கோம். அதுவும் பெண்கள் அதிகமாக அனுமதிக்கப்பட்டிராத ஒரு விளையாட்டுப் பிரிவில், மலைக்கவைக்கும் சாதனைகளை நிகழ்த்தியிருப்பது மேரி கோமை இன்னும் பெரிய உயரத்தில் வைத்து கொண்டாடப்படப் பணிக்கிறது.

2012-ல் லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில்தான் பெண்களுக்கான குத்துச்சண்டைப் போட்டிகள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் பங்கேற்கத் தகுதிபெற்ற ஒரே இந்தியப் பெண்ணான மேரி கோம், தனது முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே 51 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றார். இது தவிர, எட்டு முறை உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று, ஆறு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளார். உலக சாம்பியன்ஷிப்பில் எட்டு முறை பதக்கம் வென்ற ஒரே குத்துச்சண்டைப் போட்டியாளர் மேரி கோம்தான். 2014-ல் தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியிலும், 2018-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றார். இவ்விரு சர்வதேசப் போட்டிகளில் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் அவரே.

மணிப்பூரில் உள்ள கங்காதே கிராமத்தில் 1982 நவம்பர் 24 அன்று பிறந்தார் மேரி கோம். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் சுங்க்நீஜங். அவருடைய பெற்றோர் குத்தகை விவசாயிகள். மேரி கோம் தொடக்கப் பள்ளியில் படித்தபோதே விடுமுறை நாட்களில் வயலில் வேலைபார்த்துச் சம்பாதிக்க வேண்டிய நிலையில்தான் குடும்பச் சூழல் இருந்தது. பெற்றோர் வேலைக்குப் போய்விடுவதால், வீட்டில் தம்பி தங்கையைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. இவற்றுக்கு நடுவில்தான் தடகள விளையாட்டில் பயிற்சிபெற்றார் மேரி கோம்.

இடைநிலைப் பள்ளிக் கல்வியை முடித்த பின் தலைநகர் இம்பாலில் உள்ள பள்ளியில் தொடர்ந்தார். ஆனால், பத்தாம் வகுப்புத் தேர்வில் தேற முடியவில்லை. விளையாட்டுதான் தன் வாழ்க்கை என்று மேரி கோம் தீர்மானித்தார். விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்னும் லட்சியத்தைக் காட்டிலும் குடும்பத்தை வறுமையின் பிடியிலிருந்து மீட்க வேண்டும் என்னும் யதார்த்தம் மேரியை இன்னும் தீவிரமாக உந்தித்தள்ளியது.

1998 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மணிப்பூரைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் டிங்க்கோ சிங் தங்கம் வென்றிருந்தார். இதனால், மேரி கோம் குத்துச்சண்டை மீது தன் கவனத்தைத் திருப்பினார். இம்பாலில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையத்தில் பழையதாகி நைந்துபோயிருந்த ஆடைகளை அணிந்திருந்த பதின்பருவச் சிறுமியாக, பயிற்சியாளர் கோசனா மெய்ட்டியிடம் சென்றார். மேரியின் வேகத்தையும் வலிமையையும் பார்த்த பயிற்சியாளருக்கு தான் ஒரு சாம்பியனுக்குப் பயிற்சியளித்துக்கொண்டிருக்கிறோம் என்பது புரிந்தது. அடுத்ததாக, மணிப்பூர் அரசு குத்துச்சண்டைப் பயிற்சியாளரான நர்ஜித் சிங்கிடம் பயிற்சிபெறத் தொடங்கினார்.

பழங்குடியினத்தைச் சேர்ந்த மேரி கோம், குத்துச்சண்டையில் பங்கேற்பதற்குப் பெற்றோரிடமிருந்தும் சுற்றத்தாரிடமிருந்தும் பல எதிர்ப்புகள் வந்தன. வீட்டுக்குத் தெரியாமல் குத்துச்சண்டைப் போட்டிகளில் பங்கேற்றார் மேரி. 2000-ல் மாநில அளவிலான பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறந்த பாக்ஸராக அறிவிக்கப்பட்டார். அகில இந்திய பாக்ஸிங் அசோசியேஷன் போட்டிகளில் (2002, 2005, 2006) சாம்பியன் பட்டம் வென்றார். இடையில் தனித்தேர்வராகப் பள்ளிக் கல்வியை முடித்து, கல்லூரியில் பட்டப் படிப்பையும் நிறைவுசெய்தார். திருமணத்துக்குப் பிறகு சில ஆண்டுகள் குத்துச்சண்டையிலிருந்து விலகியிருந்தவர், இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயான பிறகு 2008-ல் மீண்டும் களம் புகுந்து பல்வேறு பதக்கங்களை வென்றார். இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கான அனைத்து கெளரவங்களையும் மேரி கோமுக்கு அளித்து, இந்திய அரசு அழகுபார்த்தது. 2016-ல் அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இவரை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்தார். அவருடைய வாழ்க்கை அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்தித் திரைப்படம் ‘மேரி கோம்’ 2014-ல் வெளியானது.

‘மேரி திதி’யைப் போல் ஆக வேண்டும் என்று கனவுகண்ட பெண்களுக்காக இம்பாலில் 2007-ல் குத்துச்சண்டை பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினார். இன்று வரை எளிய பின்னணியிலிருந்து வருகிறவர்களுக்கு இலவசமாகப் பயிற்சி அளித்துவருகிறார். வரும் காலத்தில் இந்தியர்கள் குத்துச்சண்டையில் ஒலிம்பிக் தங்கங்களைக் குவிப்பதற்கான விதைகளைத் தன் விளையாட்டுக் களச் சாதனைகளின் மூலம் விதைத்திருக்கிறார் மேரி கோம். ஓய்வுபெற்ற பிறகும் பயிற்சியாளராகவும் மற்ற வகைகளிலும் ஒலிம்பிக் பதக்கங்களை வெல்ல அவர் வழிகாட்டுவார்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x