Published : 30 Jul 2021 11:24 AM
Last Updated : 30 Jul 2021 11:24 AM

ஆட்கடத்தல் (தடுப்பு, பராமரிப்பு மற்றும் புனர் வாழ்வு) மசோதா 2021: தேவையும், சிறப்பம்சங்களும்

ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம் – ஜூலை 30

ஆட்கடத்தல் என்பது தினசரி நடைபெறும் நிகழ்வாக இருந்தாலும் இதுவரை இதைத் தடுக்க ஒரு விரிவான சட்டம் இல்லாதது மிகப் பெரிய குறையாகவே இருந்து வருகிறது. தற்போதுள்ள சட்டங்களில் பல்வேறு இடைவெளிகள் உள்ளதால், இவை பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை முழுமையாகப் பாதுகாப்பது இல்லை; அவர்களுக்கான புனர்வாழ்வு உத்தரவாதம் செய்யப்படவில்லை. தற்போதுள்ள புள்ளி விவரங்களும் ஆட்கடத்தலுக்கு எதிரான விரிவான சட்டம் தேவை என்பதை வலியுறுத்துகின்றன. முதலாவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தரவுகளின்படி, 2016 இல் பதியப்பட்ட ஆட்கடத்தல் வழக்குகளின் எண்ணிக்கை 8132. இது ஒவ்வொரு ஆண்டும் குறைந்து, 2019-இல் வெறும் 2260 வழக்குகள் மட்டுமே பதியப்பட்டுள்ளன.

கள நிலவரங்கள் மனிதக் கடத்தல் அதிகரித்திருப்பதைக் கண்கூடாக காட்டினாலும், பல்வேறு காரணங்களால், வழக்குகள் பதியப்படுவது மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 72 சதவீதம் குறைந்துள்ளது. இரண்டாவதாக, 2016 ஆம் ஆண்டு 27.8 ஆக இருந்த தண்டனை விகிதம் (Conviction Rate), 2019-இல் 22 ஆக (கிட்டத்தட்ட 25 சதவீதம்) குறைந்துள்ளது. குற்றப் பத்திரிக்கைத் தாக்கல் செய்வது, வழக்குகளை விசாரணை செய்வது, சாட்சிகள் விசாரணைகள் போன்றவற்றில் உள்ள இடைவெளியை இது காட்டுகிறது. மூன்றாவதாக, இந்திய தண்டனை சட்டப் பிரிவு 370-இன் கீழ் பதியப்படும் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை மட்டுமே பெற்றுத் தர முடியும்; பாதிக்கப்பட்டவருக்கு எந்த இழப்பீடோ அல்லது மறுவாழ்வுக்கான வாய்ப்போ இந்த சட்டப் பிரிவில் கிடையாது.

தேசிய சட்ட உதவிகள் ஆணைக்குழு மூலம், சி.ஆர்.பி.சி 357-A கீழ் (Criminal Procedure Code ) நிறுவப்பட்ட பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டுத் திட்டம் (Victim Compensation Scheme) ஆட்கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடையவில்லை. கடந்த 7 ஆண்டுகளில், 2012-2019- க்கு இடையில், இந்தியா முழுவதும், மனிதக் கடத்தலில் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு கூட இழப்பீடு வழங்கப்படவில்லை. மொத்தம் 100 விண்ணப்பங்களில், 30 பேருக்கு மட்டுமே இழப்பீட்டுத் தொகை கிடைத்துள்ளது. 19 மாநிலங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ஒதுக்கீடான ரூபாய் 544.53 கோடியில், ரூபாய் 128.27 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது, 75% நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. (ஆதாரம்: சஞ்சோக், கொல்கத்தா - தாக்கல் செய்த ஆர்டிஐ).

நான்காவதாக, கொத்தடிமைத் தொழில்முறை ஒழிப்புச் சட்டத்தின்படி முதலாளிகள் மட்டுமே தண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. கடத்தலில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தண்டிக்க சட்டத்தில் இடமில்லை. மேலும் இதில் இழப்பீட்டுத் தொகை என்பது குற்றவாளிக்குத் தண்டனை கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் என்ற வகையில் உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை முழுமையாகக் கிடைக்க வாய்ப்பில்லை.

ஐந்தாவதாக, பரத்தமை கடத்தல் தடுப்புச் சட்டம் (Immoral Trafficking Prevention Act) பாலியல் கடத்தலில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. கட்டாய உழைப்பு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, பிச்சை எடுத்தல், வாடகைத்தாய் போன்ற அனைத்து வகையான ஆட்கடத்தல்களுக்கும் பொருந்தாது. இந்தச் சட்டத்தின் கீழ், மறுவாழ்வு என்பது 'பாதுகாப்புக் காவலில்' கவனம் செலுத்துவதால், மீட்கப்பட்டவர்களை சிறையில் அடைக்க வழிவகுக்கிறது. ஆதலால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கிற்கு எதிராகத் திரும்பும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மறுவாழ்வு என்ற சொல் வரையறுக்கப்படவில்லை. இதன் விளைவாக, மீட்கப்படாதது மற்றும் மீட்கப்பட்டவர்களை மீண்டும் ஒருங்கிணைப்பது, சமூகத்துடன் இணைந்து வாழ நடவடிக்கை எடுப்பது போன்றவற்றைச் செய்ய இயலாமல் மீண்டும் அவர்களைக் கடத்தும் சூழலுக்குத் தள்ளுகிறது.

ஆறாவதாக, தற்போதுள்ள சட்டங்கள் ஆட்கடத்தல் நடந்த பிறகு, மீட்பது போன்ற செயல்பாடுகளில் கவனம் செலுத்துகின்றன; ஆட்கடத்தல் நடைபெறாமல் தடுப்பதற்கு அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு முறையான செயல்பாடுகள் எதுவும் அதில் இல்லை மேலும் ஆட்கடத்தலைத் தடுக்க பல்வேறு நிலையான இயக்க செயல்முறைகள் (Standard Operating Procedure) உருவாக்கப்பட்டிருந்தாலும், சட்டமாக இல்லாததால் செயல்படுத்தப்படவில்லை.

இறுதியாக, ஆட்கடத்தலைத் தடுக்க உருவாக்கப்பட்ட அமைப்புகளுக்கு (Anti Human Trafficking Units) பயிற்சிகளும் உட்கட்டமைப்பு வசதிகளும் இல்லாததால் அவர்களால் செயல்பட முடியவில்லை. மேலும், மாநிலங்களுக்கிடையே / நாடுகளுக்கிடையே நடைபெறும் ஆட்கடத்தலைக் கையாள சட்டரீதியான ஒரு அமைப்பு இல்லை. மேற்சொன்ன காரணங்கள் ஆட்கடத்தலைத் தடுக்க, பாதிக்கப்பட்டோரை மீட்க, மறுவாழ்வு உறுதி செய்ய, தண்டனை பெற்றுத்தர ஒரு விரிவான சட்டம் தேவை என்பதை உணர்த்துகின்றன.

ஆட்கடத்தல் மசோதா 2021: சிறப்பம்சங்கள்

கடந்த ஜூலை 2018இல் ஆட்கடத்தலுக்கு எதிரான மசோதா, சட்டமாக மக்களவையில் நிறைவேற்றப்பட்டது; இருந்த போதிலும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. மீண்டும் தற்போதுள்ள அரசு இரண்டாம் முறையாக பதவியேற்ற உடன் ஏற்கெனவே இருந்த சட்டத்தில் பல புதிய மாற்றங்களைக் கொண்டு வந்து முன்பு இருந்ததைவிட வலுவான மசோதாவாக உருவாக்கியிருக்கிறார்கள். இந்த மசோதா, 59 பிரிவுகளை உள்ளடக்கிய 11 அத்தியாயங்கள் மற்றும் ஒரு அட்டவணையைக் கொண்டுள்ளது.

இந்த மசோதா ஆட்கடத்தலைத் தடுப்பது, கடத்தப்பட்டவர்களை மீட்பது மற்றும் பாதுகாப்பது, பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மற்றும் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய விரிவான மசோதாவாக இருப்பது இதன் சிறப்பம்சமாகும். வெளி நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும் இது பொருந்தும். மட்டுமல்லாமல் இந்திய குடிமகன்களுக்கு எதிராக அல்லது அவர்களின் நலன் பாதிக்கும் வண்ணம் குற்றச் செயல்பாடுகளில் ஈடுபடும் எந்த ஒரு நபருக்கும் பொருந்தும். மற்ற நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும், இந்தியர்களைக் கடத்தினால் இச்சட்டத்தின் கீழ் தண்டனை பெற வழிவகை செய்திருப்பது பாராட்டுதற்குரியதாகும். இந்தியாவிற்குள் மட்டும் அல்லாமல், இந்திய எல்லையைத் தாண்டி நடக்கும் எந்த ஒரு மனிதக்கடத்தல் செயல்பாடுகளும் இந்தச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது.

மாநிலங்களுக்கிடையில் மற்றும் நாடுகளுக்கிடையில் நடைபெறும் மனிதக் கடத்தல் குற்றங்களைத் தடுக்கவும், செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும் தேசிய புலனாய்வு முகமைக்கு (National Investigation Agency) பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆட்கடத்தல் உட்பட இந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள குற்றங்களைத் தடுக்க, தேசிய அளவில், தேசிய ஆட்கடத்தல் தடுப்புக் குழு ( National Anti Human Trafficking Committee), மாநில அளவில், மாநில ஆட்கடத்தல் தடுப்புக் குழு ( State Anti Human Trafficking Committee) மற்றும் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்கடத்தல் தடுப்புக் குழுவும் ( District Anti Human Trafficking Committee) அமைக்கப்படும். இந்த அமைப்புகளின் பணிகளும் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்துக் குழுக்களிலும் தொண்டு நிறுவனங்களுக்குப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்டவர்கள் தாங்களாகவே முன்வந்து நீதிபதி அல்லது குழந்தைகள் நலக்குழு (Child Welfare Committee) குழு அல்லது உரிய அலுவலரைச் சந்தித்தாலும், அவர்களை மீட்கப்பட்டவர்களாகக் கருதி, அவர்களுக்கு காவல் துறையினர் மீட்கும் பொழுது கொடுக்கப்பட வேண்டிய அனைத்து மருத்துவ வசதிகளும் கொடுக்கப்பட வேண்டும்.

காவல் அலுவலர், மீட்கப்பட்டவர்களை எந்தவித தாமதமும் இன்றி 24 மணி நேரத்திற்குள் நீதிபதி அல்லது குழந்தைகள் நலக் குழு முன்பு ஆஜர்படுத்த வேண்டும் . காவல் அலுவலர் குற்றவாளியைக் கைது செய்த 90 நாட்களுக்குள் விசாரணையை நிறைவுசெய்து அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக வங்கிக் கணக்குகளை முடக்கவும், சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது. இந்த மசோதாவின் மிகச் சிறந்த அம்சங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லங்கள், மறுவாழ்வு இல்லங்களில் பெண் பணியாளர்கள் பணியமர்த்தப்பட வேண்டும்; மீட்கப்பட்டு வீடு திரும்பியவர்களைப் பாதுகாக்க, உள்ளூர் தன்னார்வலர்கள் உதவியுடன் மீட்புக்குப் பிந்தைய பராமரிப்புத் திட்டம் உருவாக்குவதுடன், 2 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து கண்காணிக்கவும், தேவையான உதவிகளைச் செய்யவும் ஏற்பாடு செய்ய வேண்டும்; மீட்கப்பட்டவர்கள் அதே மாநிலத்திற்குள் வசிப்பவராக இருந்தால், 6 வாரங்களுக்குள்ளும், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தால் மூன்று மாதங்களுக்குள்ளும் மற்றும் வேறு நாடாக இருந்தால் 6 மாதத்திற்குள்ளும் திருப்பி அனுப்பப்பட வேண்டும். இது நீண்ட காலம் அவர்கள் இல்லங்களில் தங்க வைக்கப்படுவதைத் தவிர்க்க உதவும்.

முதல் தகவல் அறிக்கை (First Information Report) பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் (District Legal Services Authority) உடனடி நிவாரணத்தை (Immediate Relief) பாதிக்கப்பட்டவர்களுக்கு அவருடைய மருத்துவச் செலவு புனர்வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக விண்ணப்பிக்கப்பட்ட 30 நாட்களுக்குள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் இடைக்கால நிவாரணம் (Interim Relief) பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும். மாவட்ட ஆட்கடத்தல் தடுப்பு குழு, முதல் தகவல் அறிக்கை பதியப்பட்ட 30 நாட்களுக்குள் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

சம்பளம் அல்லது வேறு ஏதேனும் நிலுவைத் தொகைகள் பாதிக்கப்பட்டவருக்கு வர வேண்டியது இருந்தால் அதை வழங்க சம்பந்தப்பட்ட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இச்சட்டம் அமலுக்கு வந்த ஒரு மாதத்திற்குள் மாநில அரசுகள் நிவாரணம் வழங்குவதற்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும். வழக்குகளை விரைவாக நடத்த சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும், சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமிக்கவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது. ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் இல்லாமல் பாதிக்கப்பட்டவருடன் தனியாக விசாரணை (in camera proceeding) நடத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவில் 17 வகையான குற்றங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 11 குற்றங்கள் பிடியாணை இன்றி கைது செய்வதற்கு வழிவகை செய்கின்றன. குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுபோல பல்வேறு நல்ல அம்சங்கள் இந்த மசோதாவில் இருக்கின்றன.

இந்த வரைவு மசோதா பொது மக்களின் பார்வைக்காக அனுப்பப்பட்டு, பின்னூட்டம் / ஆலோசனைகள் அரசால் பெறப்பட்டு உள்ளது. குறிப்பாக பாலியல் சுரண்டல் (Sexual exploitation) மற்றும் கடன் கொத்தடிமை (debt bondage) வரையறுப்பது, மறுவாழ்வு நிதி ஒதுக்குவது மாநில அரசுகளுக்கு சுமையாக இருக்கும் என்பதால் மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது, குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டப் பிரிவு 24 (8)- இன் படி பாதிக்கப்பட்டவர் கூடுதலாக ஒரு வழக்கறிஞர் வைத்துக்கொள்ள கொள்ளும் வகையில் திருத்தம் மேற்கொள்வது போன்ற பல ஆலோசனைகள் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், இயக்கங்கள், கூட்டமைப்பு சார்பாக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

விமர்சனங்கள்

பல்வேறு நல்ல அம்சங்களை இந்த மசோதா கொண்டிருந்தாலும், சில விமர்சனங்களும் இதன்மீது வைக்கப்படுகின்றன. குறிப்பாக பாலியல் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எதிராகப் பல்வேறு அம்சங்கள் இந்த சட்ட மசோதாவில் இருப்பதாக அவர்கள் எதிர்த்து வருகிறார்கள். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின், கடந்த நான்கு ஆண்டு (2016-2019) மீட்கப்பட்டவர்கள் சராசரியைப் பார்க்கும் பொழுது, 31% பேர் பாலியல் தொழில் பாலியல் தொழிலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை, நிறுவனப் பராமரிப்பு (Institutional Care) என்பது ஒரு தோல்வியடைந்த முறையாகவே பார்க்கப்படுகிறது.

இந்த மசோதாவும், பாதுகாப்பு இல்லங்கள், பராமரிப்பு இல்லங்கள் குறித்து பேசுகின்றது. பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் விருப்பத்துக்கு மாறாக மீட்கப்பட்டு, இந்த இல்லங்களில் தங்க வைக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகவே, அவர்களுடைய எதிர்ப்பை முற்றிலுமாகப் புறந்தள்ள முடியாது என்பதால் இச்சட்டத்தில் உள்ள சிறிய குறைபாடுகளைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் எந்த ஒரு சட்டமும் அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வண்ணம் உருவாக்க முடியாது. தற்போதுள்ள சட்டத்தில் பல நல்ல அம்சங்கள் இருக்கின்றன. அத்துடன் இந்தச் சட்டத்தில் இரண்டு இடங்களில் நிலையான இயக்க நடைமுறைகளை உருவாக்கிக் கொள்ளலாம் எனக் கூறியிருக்கிறார்கள். ஆகவே, மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்ட பிறகு, விதிகளை (Rules) உருவாக்கும் பொழுது சில விஷயங்களை நம்மால் சேர்க்க முடியும்; நிலையான இயக்க நடைமுறைகளை உருவாக்கும் பொழுது பல விடுபட்ட இடைவெளிகளை / சிறிய குறைபாடுகளை நம்மால் சரி செய்ய முடியும்.

தற்போதுள்ள கொத்தடிமை தொழில்முறை ஒழிப்புச் சட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்புச் சட்டம், குழந்தைகளைப் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் (POCSO), சட்டம் சிறார் நீதிச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 370 போன்ற சட்டங்களே போதுமானது; புதிய சட்டம் தேவையில்லாத குழப்பத்தை உருவாக்கும் என்ற ஒரு தவறான கருத்து நிலவுகிறது. இதில் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த விரிவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முக்கியக் காரணமே தற்பொழுதுள்ள சட்டங்கள், ஆட்கடத்தலை முழுமையாகக் கையாளவில்லை என்பதால்தான். இந்தச் சட்டம் கொத்தடிமை தொழிலாளர்களை, விடுவிக்கவோ, குழந்தைத் தொழிலாளர்களை விடுவிக்கவோ, பாலியல் துன்புறுத்தலிருந்து பாதுகாக்கவோ உருவாக்கப்பட்டது அல்ல; மாறாக கொத்தடிமை தொழில் முறைக்காக, குழந்தை தொழில் முறைக்காக, பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பு , மறுவாழ்வு, நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒரு சட்டம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே, இந்தச் சட்டம் அனைத்துக் குழந்தைத் தொழிலாளர்களையும் கவனத்தில் கொள்ளாது; குழந்தைத் தொழில் முறைக்காக கடத்தப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை மட்டுமே கவனத்தில் கொள்ளும்.

தற்போதுள்ள சூழலில் / பேரிடர்க் காலங்களில், பெண்களும் குழந்தைகளும் அதிக அளவில் வேலைக்காகவும் வேறு காரணங்களுக்காகவும் கடத்தப்படுவது அதிகரிக்கும் என்பதால் இந்த மசோதாவை இந்தக் கூட்டத் தொடரிலேயே உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் விருப்பம். ஆகவே, மத்திய அரசு இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு இந்தக் கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாவை சட்டமாக நிறைவேற்றி, விதிகளை உடனடியாக உருவாக்கி அமுலுக்கு கொண்டு வர வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் பெருமளவில் கடத்தப்படுவதைத் தடுக்க தீவிர சட்ட அமலாக்கம் தேவை என்பதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும். இது அரசின் உடனடி கடமையும் கூட.

கட்டுரையாளர்: டாக்டர் பி.பாலமுருகன்,
மனித உரிமைச் செயற்பாட்டாளர்,
தொடர்புக்கு: balaviji2003@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x