Published : 30 Jul 2021 03:14 am

Updated : 30 Jul 2021 05:37 am

 

Published : 30 Jul 2021 03:14 AM
Last Updated : 30 Jul 2021 05:37 AM

மனிதக் கடத்தல் பெருங்குற்றம்!

world-day-against-trafficking-in-persons

சூ.ம.ஜெயசீலன்

பணத்துக்காக, குழந்தைக்காக, பழிவாங்க, பலிகொடுக்கக் குழந்தைகள் கடத்தப்படுவதைப் பற்றி அடிக்கடி படிக்கிறோம். மனிதர்களைக் கடத்துதல், உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டித்தரும் தொழிலாக இருப்பது பெருங்கொடுமை.

ஏழைகள், மொழி தெரியாதவர்கள், கல்வியறி வற்றவர்கள், பெற்றோரின் அன்பு கிடைக்காதவர்கள், மகிழ்ச்சியற்ற சூழலில் வாழ்கிறவர்கள், வீட்டை விட்டு ஓடிவந்தவர்கள், இயற்கைப் பேரிடர், போர், வன்முறை மற்றும் தொழில் சார்ந்து புலம்பெயர்கிறவர்கள், வீதியில் தங்குகிறவர்கள், உடல் நலமும் மனநலமும் குன்றியவர்களே ஆட்களைக் கடத்துகிறவர்களின் இலக்கு.


வகையும் வழிமுறையும்

ஆட்களைக் கடத்துகிறவர்கள் பலவகை. தனி ஒருவரே திட்டமிட்டுக் கடத்துவது, இருவர் மூவர் சேர்ந்து ஒருவரைக் கடத்திவிட்டுப் பிரிந்துவிடுவது, அமைப்பாகச் சேர்ந்து வலைப்பின்னலுடன் செயல்படுவது. இவர்கள் அனைவருமே அறிவியல் வளர்ச்சியின் உதவியுடன் மிக எளிதாகவும் விரைவாகவும் கடத்தலைச் செய்துமுடிக்கிறார்கள். மனிதக் கடத்தல் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை என்பதும் கடத்தல்காரர்களுக்குச் சாதகமாக இருக்கிறது.

கடத்தல் என்றாலே, குழந்தைகள் கடத்தப்படுவதை மட்டுமே பலரும் நினைக்கிறோம். தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவு 2019-ல் இந்திய அளவில் 2,260 பேரும், தமிழக அளவில் 16 பேரும் மட்டுமே கடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறது. இன்னும் கூடுதலாக, பிச்சை எடுக்க, உறுப்புகள் திருட, வன்முறைகளில் ஈடுபடுத்த, மதுக்கூடங்களில் ஆட, மற்றும் பாலியல் தொழிலுக்காக என்றெல்லாம் மனிதர்கள் கடத்தப்படுகிறார்கள். அதுமட்டுமல்ல, நல்ல ஊதியத்துடன் வேலை வாங்கித்தருவதாகச் சொல்லி, வெளியூரிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் அழைத்து வந்து விவசாயம், சமையல், சுரங்கம், தொழிற்சாலை, துணிக்கடை, கட்டிடத் தொழில், வீட்டு வேலைகள் போன்றவற்றில் குறைந்த கூலிக்குப் பல மணி நேரம் வேலைசெய்யக் கட்டாயப்படுத்துவதும், சட்டத்துக்குப் புறம்பாகக் குழந்தைகளைத் தத்தெடுப்பதும், கட்டாயத் திருமணம் செய்வதும் ஆட்கடத்தல்தான். அதனால்தான், ஆட்கடத்தலை நவீன அடிமை முறை என்கிறார்கள்.

ஆட்கடத்தலுக்கு எதிரான சட்டம்

இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் 370-ன்படி “சுரண்டும் நோக்கத்துடன் பலவந்தமாக, வற்புறுத்தி, பொய்சொல்லி, மோசடி செய்து, அதிகாரத்தைப் பயன்படுத்தி, தூண்டுதலாக இருந்து, பணம் கொடுத்தோ வாங்கியோ அல்லது வேறுவிதமான பலன்களைக் காட்டியோ பெற்றோரிடமிருந்து அல்லது பொறுப்பாளரிடமிருந்து ஆட்களைத் திரட்டுவது, அழைத்துச்செல்வது, அடைக்கலம் கொடுப்பது, இடம் மாற்றுவது, ஒரு நபர் அல்லது பல நபர்களைப் பெறுவது அனைத்தும் ஆட்கடத்தலே.” மேலும், ‘கடத்தப்படுகிறவரின் சம்மதத்தின் பேரில்தான் அழைத்துச் சென்றோம், என்பதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது’ எனவும் சட்டம் வரையறுக்கிறது. மீட்கப்பட்டவரின் மறுவாழ்வு குறித்து இச்சட்டத்தில் எதுவும் இல்லையென்றாலும், கடத்தலைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கவும், மறுவாழ்வு அளிக்கவும் வலியுறுத்திய ‘ஆட்கடத்தலுக்கு எதிரான மசோதா-2018’ மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் மாநிலங்களவையில் அம்மசோதா நிறைவேறவே இல்லை.

மனித மாண்பைக் காப்போம்

கடத்துகிறவர்கள் மீது வழக்குப் பதிந்து, தொடர்ச்சியாக வழக்காடி, தண்டனை வழங்குவதோடு இன்னும் சிலவற்றையும் நடைமுறைப்படுத்துவது நன்மை தரும். முதலாவதாக, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிப்பது: வெளிநாட்டுப் பயணங்களின்போது, அங்குள்ள ரயில் நிலையங்களில், “ஆட்கடத்தல் என்றால் என்ன? எவையெல்லாம் ஆட்கடத்தல் சட்டத்துக்குள் வருகின்றன? கடத்துகிறவர்களுக்கான தண்டனை என்ன? தான் கடத்தப்பட்டாலோ, வேறு யாராவது கடத்தப்படுவது தெரிந்தாலோ எந்த எண்ணுக்குத் தொடர்புகொள்வது?” என்பது போன்ற தகவல்கள் அசைபட (Animation) வடிவில் அடிக்கடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதைப் பார்த்தேன். நம் அரசாங்கமும்கூட இதேமுறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

இரண்டாவது, மீட்கப்படுகிறவர்களின் மனநலன் சார்ந்து திட்டமிடுவது: கடத்தப்பட்ட அனைவருமே, தாங்கள் தனியாகப் போனது, ஏமாந்தது, சிந்திக்காமல் சிக்கியது என மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து, தீவிரக் குற்ற உணர்வில் அவதிப்படுவார்கள். மதுரையில் தனியார் விடுதியில் தங்கி நான் கல்லூரியில் படித்தபோது, ஒரு மாணவன் திடீரென காணாமல் போய்விட்டான். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. காவலர்களும் தேடத் தொடங்கினார்கள். மறுநாள் இரவு பதினோரு மணிக்கு மிகவும் களைத்துப்போய் அவனாகவே வந்தான். முகவரி கேட்ட யாருக்கோ வழிகாட்டியதாகவும், நன்றியோடு அவர் வாங்கிக் கொடுத்த குளிர்பானத்தைக் குடித்ததாகவும் சொன்னான். அது மட்டும்தான் அவனுக்கு நினைவில் இருந்தது. மறுநாள் காலையில் ஓசூரில் சாலை ஓரம் கிடந்துள்ளான். எப்படி அங்கே சென்றான் என்பது தெரியவில்லை. அருகில் இருந்தவர்களின் உதவியுடன் திரும்பி வந்துள்ளான். “நானா இப்படி ஏமாந்தேன்?” எனக் கேட்டுக்கொண்டே பல நாட்கள் அவன் அவமானத்திலும் குற்றவுணர்விலும் தவித்தான்.

கடத்தப்பட்டவர்களுக்கு, அவர்கள் மீட்கப் படுவதற்கு முன்பாக இருந்த இடம், நடத்தப்பட்ட விதம், செய்த வேலை, தனிமை போன்றவற்றின் தீவிரத்தைப் பொறுத்து, உடல் பாதிப்பைத் தொடர்ந்த உளச் சீர்குலைவு (PTSD) இருக்கும். தனியாகச் செல்ல அச்சம், முன்பின் தெரியாதவர்களுடன் பேச பயம், நம்பிக்கையின்மை, தாழ்வுமனப்பான்மை, முற்றிலும் தோற்றுப்போன எண்ணம், அடிக்கடி களைப்பு, கோபம், தூக்கமின்மை, பசிக் கோளாறு, கொடூரச் சூழலில் இப்போதும் இருப்பது போன்ற மருட்சி, எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற எண்ணம் போன்றவற்றின் தாக்குதலில் துன்புறுவார்கள். இவர்களுக்கு நம்பிக்கையான, பாதுகாப்பான இடத்தை உறுதிப்படுத்துவதோடு, வாழ்க்கைத் திறன் பயிற்சிகளையும், இயல்பு நிலைக்குத் திரும்பும் முறைகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆற்றுப்படுத்துநர்களுடன் இணைந்து, இப்பணியைத் திட்டமிடுவது மிகவும் அவசியம்.

மூன்றாவது, பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடித் திட்டமிடுவது: இதைத்தான் மனிதக் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நாளின் மையக் கருவாக, ‘பாதிக்கப்பட்டவர்களின் குரல்களே வழிகாட்டுகின்றன’ என ஐநா சபை இந்த ஆண்டு முன்மொழிந்துள்ளது. தங்களின் அறியாமையாலும், தவறான புரிதல்களாலும் சரியான உதவியைப் பெற முடியாமல், கடத்தப்பட்டவர்கள் தவிப்பதை ஐநா கோடிட்டுக் காட்டியுள்ளது. ஆட்கடத்தலிலிருந்து தப்பித்தவர்களும் மீட்கப்பட்டவர்களும் பேசுவதைச் செவிமடுக்க நாம் முன்வர வேண்டும் எனவும், இது பாதிக்கப்பட்டவரை மையப்படுத்திய ஆக்கபூர்வமான அணுகுமுறையை முன்னெடுக்க உதவும் எனவும் ஐநா சபை குறிப்பிட்டுள்ளது. மனிதக் கடத்தலுக்கு எதிரான பரப்புரையில் விழிப்போடு செயல்படுவது அரசு, சமூகம் அனைவரின் கடமையாகும்.

- சூ.ம.ஜெயசீலன், எழுத்தாளர்/ மொழிபெயர்ப்பாளர்,

தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com

ஜூலை 30: ஆட்கடத்தலுக்கு எதிரான தினம்


Human abductionKidnappingமனிதக் கடத்தல்மனிதக் கடத்தல் பெருங்குற்றம்World Day Against Trafficking in PersonsHuman Trafficking

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x