Last Updated : 29 Jul, 2021 03:12 AM

 

Published : 29 Jul 2021 03:12 AM
Last Updated : 29 Jul 2021 03:12 AM

காப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்

அரசின் தனியார்மயமாக்கல் செயல்திட்டம் கரோனா காலத்திலும் சுணங்கவில்லை. சென்னையைத் தலைமையகமாகக் கொண்ட ‘யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்’ நிறுவனம், தனியார்வசம் ஒப்படைக்கப்படலாம் என்பதை நிதி ஆயோக் பரிந்துரைகளிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

நிதித் துறை சார்ந்து எடுக்கப்படுகிற நடவடிக்கைகளின் வளர்ச்சியை இந்த இடத்தில் பார்க்க வேண்டியுள்ளது. 1971-ல் தேசியமயம், 1999-ல் மீண்டும் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி, 2017-ல் நியூ இந்தியா என்கிற அரசுக் காப்பீட்டு நிறுவனத்தின் பங்கு விற்பனை என்று நகர்ந்த கடிகார முள், 2021-ல் அரசு நிறுவனமொன்று தனியார் கைகளில் ஒப்படைக்கப்படும் இடத்துக்கு வந்து நிற்கிறது. இதன் விளைவுகள் என்ன என்பதை வரலாற்றுப் பின்புலத்தோடு பேச வேண்டியிருக்கிறது.

வரலாற்றுச் சக்கரம்

அரசுக் காப்பீட்டு நிறுவனங்கள் பொன் விழாவைக் கொண்டாடுகிற நேரமிது. 1950-களில் ஆயுள் காப்பீட்டு தேசியமய விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போதே, அன்றைய நிதியமைச்சர் சி.டி.தேஷ்முக், தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் முறையற்ற செயல்பாடுகள் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தார். 1971-ல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, காப்பீட்டு நிறுவனங்களை தேசியமயமாக்கும் முடிவை எடுத்தார். 107 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டு நேஷனல் இன்சூரன்ஸ், நியூ இந்தியா அஷுரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய நான்கு அரசு நிறுவனங்கள் பிறந்தன.

பொதுத் துறைக் காப்பீட்டு நிறுவனங்கள் நெடிய வரலாற்றைக் கொண்டவை. 1972-ல் காப்பீட்டு நிறுவனங்கள் வணிக தேசியமயச் சட்டத்தின் அடிப்படையில் நான்கு நிறுவனங்கள் உருவானபோது, அரசு இட்ட முதலீடு ரூ.19.5 கோடி மட்டுமே. இன்று அந்த நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பு இரண்டு லட்சம் கோடி ரூபாயாக வளர்ந்துள்ளது. 1971-ல் காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த அலுவலகங்களின் எண்ணிக்கை 784, இன்று 8,000 அலுவலகங்கள் என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்த நிறுவனங்களின் பங்களிப்பு ரூ. 1,78,977 கோடி.

மீண்டும் தனியார்மயம்

1991-ல் பொருளாதாரத் தாராளமயமாக்கலை நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு அனுமதித்தது. தொடர்ச்சியாக 1999-ல் வாஜ்பாய் அரசு தனியார், அந்நியக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது. இன்று 21 தனியார் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களும், ஆறு தனியார் சிறப்பு மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களும் வணிகப் போட்டியில் உள்ளன. இந்த நிறுவனங்கள் சாதாரண மக்களுக்கான காப்பீட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. முதல் நிலை, இரண்டாம் நிலை நகரங்களில் மட்டுமே இந்த நிறுவனங்களின் அலுவலகங்கள் செயல்படுகின்றன.

மூன்றாம், நான்காம், ஐந்தாம் நிலை நகரங்கள், சிற்றூர்கள், கிராமங்களில் அரசுக் காப்பீட்டு நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. அத்துடன் பயிர்க் காப்பீடு உள்ளிட்டவற்றிலும் அரசுக் காப்பீட்டு நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்திவருகின்றன. காப்பீட்டுத் துறை பரவலாக்கல், அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் போன்ற சமூகநலச் சுமைகளை அரசுக் காப்பீட்டு நிறுவனங்களே செயல்படுத்திவருகின்றன.

தலைமையகம் சென்னையில் இருப்பதால் தென்னிந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் காப்பீட்டுப் பரவலுக்கு வழிவகுத்துவரும் நிறுவனம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம். தமிழக முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமே நிர்வகித்துவருகிறது. அகில இந்திய அளவில் அரசுக் காப்பீட்டு நிறுவனங்களே ‘பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா’ – தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தை எடுத்து நடத்திவருகின்றன. அதுபோன்ற திட்டங்களில் லாபம் இருப்பதால்தான் தனியார் நிறுவனங்கள் அரசு நிறுவனப் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டிவருகின்றன.

விடையில்லாக் கேள்விகள்

நான்கு பொதுத் துறைக் காப்பீட்டு நிறுவனங்களும் இணைந்து 40 கோடி இந்தியர்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் காப்பீட்டை வழங்கிவருகின்றன. உலகிலேயே இந்த அளவுக்குக் காப்பீடு வசதி பெறுபவர்களின் எண்ணிக்கை வேறு எந்த நாட்டிலும் கிடையாது. தமிழக அரசு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள நபர்களுக்கு அளிக்கும் மருத்துவக் காப்பீடு, தனிநபர் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட திட்டங்களால் பயனடைந்தோர் ஏராளம்.

இந்நிலையில் ஒரு காப்பீட்டு நிறுவனம், அதுவும் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் காப்பீட்டு நிறுவனம் தனியார்மயமானால், மேலே கூறப்பட்ட சாமானிய மக்களுக்கான காப்பீட்டுத் திட்டங்கள் தொடருமா என்பது கேள்விக்குறியே!.

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தை எடுத்துக்கொண்டால், கடந்த நிதியாண்டில் ரூ.17,000 கோடிக்குத் தவணைத் தொகையைத் திரட்டியுள்ளது. பெருந்தொற்றுக் காலத்திலும் இவ்வளவு தவணைத் தொகையைத் திரட்டியுள்ளதோடு, அரசின் கட்டமைப்புத் திட்டங்களுக்காக ரூ.27,930 கோடி வரை முதலீடு செய்துள்ளது. ஒன்றிய அரசுக்குத் தொடர்ந்து வருடா வருடம் கணிசமான அளவு ஈவுத்தொகையையும் அளித்துவருகிறது. இந்நிறுவனம் தனியார்மயமானால், இவை யெல்லாம் நீடிப்பதற்கான சாத்தியம் இல்லாமல் போகும். நிறுவனங்களின் பங்குகள் விற்கப்படுவதால் ‘அரசு நிறுவனம்’ என்ற அந்தஸ்து பறிபோகாது. ஆகவே, இடஒதுக்கீடு தொடரும் என்று இவ்வளவு காலம் கூறப்பட்டுவந்தது. இப்போது ஒரு காப்பீட்டு நிறுவனமே தனியார்மயமானால் அரசு அந்தஸ்து பறிபோய்விடும்! ஓ.பி.சி./ எஸ்.சி./ எஸ்.டி. இடஒதுக்கீடு என்னவாகும் என்ற சமூகநீதி சார்ந்த கேள்வியும் எழுகிறது.

இந்தப் பேரிடர் காலத்தில் சமூகப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் காப்பீட்டு நிறுவனங்கள், அரசின் கைகளில் இருப்பதே மக்களுக்குப் பயனளிக்கும் ஒரே வழி என்பது உலக அளவில் நிரூபணமாகியுள்ளது. அதைப் பாடமாக எடுத்துக்கொண்டு, காப்பீட்டு நிறுவனங்கள் அரசின் கைகளில் இருப்பதை ஒன்றிய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

- ஜி.ஆனந்த், தென் மண்டலப் பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர். தொடர்புக்கு: anand1704@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x