Last Updated : 28 Jul, 2021 03:15 AM

 

Published : 28 Jul 2021 03:15 AM
Last Updated : 28 Jul 2021 03:15 AM

சீனப் பெருமழையின் துயரங்களும் பாடங்களும்

ஜூலை 17 அன்று தொடங்கியது அந்தப் பெருமழை. ஜூலை 20 அன்று உக்கிரமடைந்தது. நாளதுவரை வடியவில்லை. இன்னும் ஜெங்ஜோ நகரம் வெள்ளக் காடாகத்தான் இருக்கிறது. சீனாவின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் ஹெனான் மாநிலத்தின் தலைநகர் இது. மஞ்சள் நதிக்கரை நகரம்.

ஜூலை 20 அன்று மாலை 4 மணிக்கும் 5 மணிக்கும் இடைப்பட்ட ஒரு மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு 202 மில்லிமீட்டர் (8 அங்குலம்). ஜூலை 17-க்கும் 20-க்கும் இடைப்பட்ட மூன்று நாட்களில் பெய்த மழை 640மிமீ. ஜெங்ஜோ நகரில் ஓராண்டில் பெய்யக்கூடிய சராசரி மழையளவு 640மிமீ. அதாவது, ஆண்டு முழுதும் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்தது. அதில் மூன்றில் ஒரு பங்கு ஒரு மணி நேரத்திற்குள் கொட்டித்தீர்த்தது.

சாலைகளில் வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் பொம்மைகளைப் போல் மிதந்தன. கட்டிடங்கள் பலவற்றுள் வெள்ளம் புகுந்தது. மின்சாரமும் தண்ணீரும் இணையமும் தடைப்பட்டன. ஜெங்ஜோ நகரைச் சுற்றியுள்ள 12 நகரங்களும் பல்வேறு கிராமங்களும் பாதிக்கப்பட்டன. 5 லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் பாழாகிவிட்டன. அணைக்கட்டுகள் நிரம்பி வழிகின்றன. லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியாக இருக்கலாம். இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர்.

அரசு சொல்லும் காரணங்கள்

இப்போது இரண்டு கேள்விகள் எழுகின்றன. முதலாவதாக இப்படியொரு பெருமழையை நிர்வாகம் எதிர்பார்க்கவில்லையா? ஹெனான் மாநிலத்துக்குக் கோடையில் பெருமழை என்பது புதியதல்ல. பொதுவாக, அது சூறாவளியுடன் சேர்ந்து வரும். இந்த முறை இன்-ஃபா என்று பெயரிடப்பட்ட சூறாவளி, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் மையம் கொண்டிருந்தபோதே இந்தப் பெருமழை நகரைத் தாக்கிவிட்டது. இது எதிர்பாராதது. வானிலை மையத்தால் முன்னதாகக் கணிக்க முடியவில்லை.

இரண்டாவது கேள்வி, நகரின் மழைநீர் வடிகால்கள் என்னவாயின? அவை போதுமானவையாக இல்லையா? இதற்கு நகராட்சி பதிலளித்திருக்கிறது. ‘சீனாவின் பல நகரங்களும் இருநூறாண்டு வெள்ளத்தைக் கடத்திவிடக்கூடிய வடிகால்களைக் கொண்டவை. ஆனால், இந்த மழை ஆயிரம் ஆண்டுகளில் பெய்திராத பேய் மழை’ என்பது அந்தப் பதில். ஜெங்ஜோ நகரத்தின் மழைமானிகள் 1951-ல் நிறுவப்பட்டவை. அதாவது, கடந்த 70 ஆண்டுகளில் பெய்த மழைக்குத்தான் கணக்கு இருக்கிறது. அப்படியானால் அதை வைத்துக்கொண்டு, எப்படி இருநூறாண்டு வெள்ளம், ஆயிரமாண்டு மழை என்றெல்லாம் சொல்கிறார்கள்?

குறைவான ஆண்டுகளுக்கு மட்டுமே தரவுகள் இருந்தாலும் வானியலர்களும் பொறியாளர்களும் ஐம்பது ஆண்டுகளில், நூறாண்டுகளில் பெய்வதற்குச் சாத்தியமுள்ள அதிகபட்ச மழையைக் கணக்கிடுவார்கள். இவை முறையே ஐம்பதாண்டு மழை, நூறாண்டு மழை எனப்படும். இந்த அடிப்படையில்தான் ‘இருநூறாண்டு மழைக்கான வடிகால்களை அமைத்திருந்தோம், ஆனால் இது ஆயிரமாண்டு மழை’ என்கிறது நிர்வாகம். விரைவில், இந்தப் பேரிடர் குறித்துக் கூடுதல் தரவுகளோடு ஆய்விதழ்களில் கட்டுரைகள் வெளியாகும். அப்போது, ‘ஆயிரமாண்டு மழை’ என்கிற நகராட்சியின் கூற்று சரிதானா என்பதில் தெளிவு ஏற்படலாம்.

ஆய்வாளர்கள் சொல்லும் காரணங்கள்

எனில், சர்வதேச ஆய்வாளர்கள் வேறு இரண்டு காரணங்களைச் சுட்டுகிறார்கள். முதலாவதாக, சீனாவில் அதிகமான எண்ணிக்கையில் கட்டப்பட்டிருக்கும் அணைகள். இவை ஆறு குளங்களை இணைக்கும் நீர்வழிப் பாதைகளின் இயல்பான போக்கை மாற்றிவிட்டன, அவற்றின் திறனை வெகுவாகக் குறைத்துவிட்டன.

இரண்டாவதாக, பருவநிலை மாற்றமும் புவிவெப்பமாதலும், உலகின் பல இடங்களில் பெய்யும் மாமழைக்குக் காரணமாக அமைகின்றன என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். உலகம் முழுமையிலிருந்தும் வெளியேறும் பசுங்குடில் வாயுக்களில் 27% சீனாவைச் சேர்ந்தவை. இதில் சீனாதான் முதலிடம் வகிக்கிறது (அமெரிக்கா இரண்டாவது இடம் 11%, இந்தியா மூன்றாவது இடம் 6.6%). தான் ஒரு வளரும் நாடு, தனக்குப் பசுங்குடில் வாயுக்களைக் குறைப்பதில் கூடுதல் காலஅவகாசம் தர வேண்டும் என்று சீனா சர்வதேச அரங்கில் கோரிவருகிறது. ஆனால் இயற்கை, கால அவகாசம் வழங்கத் தயாராக இல்லை. இனியும் காலம்தாழ்த்தாமல் சீனா இந்தப் பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டும். மேலும், நூறாண்டு, இருநூறாண்டு மழையைக் கணக்கிடும் வரைமுறைகளையும் பருவநிலை மாற்றத்துக்கு இணங்க மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

நமக்கான பாடங்கள்

இந்தப் பெருமழையில் நமக்கான பாடங்களும் இருக்கின்றன. முதலாவதாக, கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில்தான் வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாக இருக்கும். ஏனெனில், நகரங்களில்தான் மக்கள் செறிந்து வாழ்கிறார்கள்; மேலும், அங்கு வெள்ளத்தை உறிஞ்சக்கூடிய மண் தளங்கள் குறைவாக இருக்கும். ஆகவேதான், உலகின் பல நகரங்களிலும் நூறாண்டு, இருநூறாண்டு வெள்ளத்தைக் கடத்தும் வடிகால்கள் அமைக்கப்படுகின்றன. சரி, சென்னையின் மழைநீர் வடிகால்கள், எத்தனையாண்டு வெள்ளத்தைக் கடத்த வல்லவை? இந்தக் கேள்விக்கான விடை ‘தெரியாது’ என்பதாகும்.

தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு நகரின் மழையளவு குறித்தும் விரிவாக ஆராய வேண்டும். இப்போதைய சாலையோர வடிகால்களின் கொள்ளளவைப் பரிசோதித்து அவற்றை மேம்படுத்த வேண்டும். சாலையோர வடிகால்கள் பிரதான வடிகால்களோடு முறையாக இணைக்கப்பட வேண்டும். இந்தப் பிரதான வடிகால்கள்தான் நீரைக் கடலிலோ ஆற்றிலோ சேர்ப்பிக்கும். இவை நூறாண்டு அல்லது இருநூறாண்டு வெள்ளத்தைக் கடத்தத் தக்கதாக வடிவமைக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, புவிவெப்பமாதல் என்பது இனியும் சூழலியலாளர்களின் பிரச்சினை மட்டும் அன்று. இந்தியா இதில் முன்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடும் கவனம் செலுத்த வேண்டும்.

‘இது மிக மோசமான வெள்ளம்’ என்று சொல்லியிருக்கிறார் சீன அதிபர் ஷி ஜின்பிங். சீன அரசும் ஆய்வாளர்களும் புதிய திட்டங்களுடன் வரக்கூடும். இந்த வெள்ளத்திலிருந்து சீனா மட்டுமல்ல, உலக நாடுகளும் இந்தியாவும் தமிழ்நாடும் தங்களுக்கான படிப்பினைகளைப் பெற வேண்டும்.

- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர்,

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x