Published : 28 Jul 2021 03:15 am

Updated : 28 Jul 2021 06:36 am

 

Published : 28 Jul 2021 03:15 AM
Last Updated : 28 Jul 2021 06:36 AM

விளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா?

sports-country

கௌதம் பட்டாச்சார்யா

“ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் அது ஒலிம்பிக்கில் பெறப்போகும் பதக்கங்களின் எண்ணிக்கைக்கும் தொடர்பு இருக்கிறது” என்கிறார்கள் பெர்னாட் ஏ.பி., பூஸே எம்.ஆர். ஆகிய இரு பொருளியல் ஆய்வாளர்களும். “போட்டி நடத்தும் நாடுகள், அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டு கணிக்கும் அளவைவிடக் கூடுதலாக 1.8% பதக்கங்களை வெல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது” என்றும் அவர்கள் கூறினார்கள். அப்போதிலிருந்து, ஒரு நாடு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்லக்கூடிய திறன் மீது தாக்கம் செலுத்தும் காரணிகளைப் புரிந்துகொள்ளப் பல்வேறு ஆய்வுகள் நடத்தியிருக்கிறார்கள். சில ஆய்வுகள் அந்தக் கருதுகோளை மறுத்திருக்கின்றன.

செயல்படு திறனுக்கான காரணிகள்


ஒரு நாட்டின் சராசரி வாழ்க்கைத் தரமும் அந்த நாட்டின் மக்கள்தொகையும்கூட ஒலிம்பிக் போட்டிகளின் செயல்பாட்டைத் தீர்மானிக்கலாம். இந்தியா போன்ற நாடுகளில் கணிசமான மக்கள் பசி பட்டினியுடன் போராடிக்கொண்டிருக்கும்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு இங்கே முக்கியமில்லை. மோசமான உடல்நிலையைக் கொண்ட ஒரு மனிதர், ஒருபோதும் நல்ல விளையாட்டு வீரராக இருக்க முடியாது. குன்றிய வளர்ச்சி, ஊட்டச்சத்துக் குறைபாடு, ரத்த சோகை போன்றவை அதிக அளவில் இருக்கும் நாடுகளிலிருந்து நல்ல தடகள வீரர்களை நாம் எதிர்பார்க்க முடியாது.

மரபியல் காரணிகளும் முக்கியமானவை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து ஆகிய நாடுகள் நீச்சல் போட்டியில் பெரும் சக்திகளாக இருக்கின்றன. ஆனால், சீனா அப்படி இல்லை. ஒருவேளை, நீச்சலிலும் கூடைப்பந்திலும் உயரமானவர்களுக்கு அனுகூலம் இருக்கலாம். ஆனால், துப்பாக்கிச் சுடுதலிலும் ஜிம்னாஸ்டிக்கிலும் உயரத்துக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லை. அமெரிக்கா, ஜெர்மனியுடன் சீனாவும் துப்பாக்கிச் சுடுதலில் சிறந்த நிலையை அடைந்திருக்கின்றன. மேற்கத்திய நாடுகளைவிட கிழக்காசிய நாடுகள் டேபிள் டென்னிஸில் நன்றாக விளையாடுகின்றன. ரஷ்யா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மத்திய ஆசிய நாடுகள் போன்றவை தொழில்முறை அல்லாத குத்துச்சண்டைப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுகின்றன; சீனாவும் மத்திய ஆசிய நாடுகளும் பளு தூக்குதலிலும் மல்யுத்தத்திலும் சிறந்து விளங்குகின்றன.

உலகத் தரமான பயிற்சிக்கான வசதிவாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்வதென்பது, விளையாட்டு வீரர்களுக்கு கூடுதல் அனுகூலத்தைத் தருகிறது. அப்படிப்பட்ட கட்டமைப்புகள் அமெரிக்காவைத் தடகளப் போட்டிகள், ஜிம்னாஸ்டிக் ஆகியவற்றிலும், ஜெர்மனியைக் குதிரைப் பந்தயத்திலும், பிரிட்டனை டைவிங், படகுப் பந்தயம், சைக்கிள் பந்தயம் போன்றவற்றிலும் வல்லரசுகளாக ஆக்குகின்றன. ஏழை நாடுகளுக்கோ இது போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்குவது சொகுசான ஒரு விஷயம் போன்றது.

காலனிய ஆட்சிக் காலத்தில் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றைக் காட்டிலும் முன்னதாகவே இந்தியாவுக்கு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கொஞ்சம் அனுபவம் கிடைத்தது. ‘கல்கத்தா கால்பந்து லீக்’தான் ஆசியாவிலேயே பழமையான கால்பந்து லீக். ட்யூரண்டு கோப்பைதான் ஆசியாவிலேயே இன்னும் நடைபெறுவதில் பழமையான கால்பந்துப் போட்டித் தொடர். இந்த அனுபவம் 1950-களிலும், 1960-களின் தொடக்கத்திலும் பிற ‘மூன்றாம் உலக’ நாடுகளைவிட இந்தியாவுக்குக் கூடுதல் அனுகூலத்தைத் தந்தது. வசதிவாய்ப்புகள் வெவ்வேறு விளையாட்டுகளுக்கிடையே மிகக் குறைவாகவே பகிர்ந்து காணப்பட்டன. சர்வதேச விளையாட்டு அரங்குக்கு மேலும் பல நாடுகள் வர ஆரம்பித்ததும் 1970-களிலிருந்து இந்தியா விளையாட்டில் ஏற்கெனவே தான் இருந்த நிலையிலிருந்து சரிய ஆரம்பித்தது.

கஜகஸ்தான், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்க எண்ணிக்கையில் இந்தியாவுக்கும் கீழே இருக்கலாம். ஆனால், ஒலிம்பிக் போட்டிகளில் அவையெல்லாம் இந்தியாவைவிட மேலே இருக்கின்றன. இதற்குக் காரணம், இந்தியா பல விளையாட்டுகளில் ஓரளவு திறன் பெற்றிருந்தாலும் அவற்றில் எதிலும் மிகச் சிறப்பான திறனைப் பெற்றிருக்கவில்லை. அதற்கு மாறாக, ஜமைக்கா 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சிறந்து விளங்குகிறது; கென்யா நீண்ட தூர ஓட்டப் பந்தயத்தில் பதக்கங்கள் வெல்கிறது. அவையெல்லாம் விளையாட்டுகளுக்கென்று பெயர்பெற்ற நாடுகள் இல்லை என்றாலும், இந்தியாவைவிட சிறப்பாக விளையாட்டுகளில் சாதிக்கின்றன. சமீப ஆண்டுகளில், துப்பாக்கிச் சுடுதல், தொழில்முறை அல்லாத குத்துச்சண்டை, மல்யுத்தம், ஜிம்னாஸ்டிக்ஸ், பேட்மிண்டன் ஆகிய விளையாட்டுகளில் இந்தியா நம்பிக்கையூட்டுகிறது. சராசரி இந்தியரின் உடற்கட்டு ஒரு தடையாக இல்லாத விளையாட்டுகளில் நாம் மேலதிகக் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியாவின் விளையாட்டுக் கொள்கையில் மாநிலங்களைப் பெரிய அளவில் ஒன்றிணைக்க வேண்டும். வெவ்வேறு விளையாட்டுகளில் தனிச்சிறப்பு மிக்க மையங்களாக வெவ்வேறு மாநிலங்களை நம்மால் மேம்படுத்த இயலாதா? வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், வெவ்வேறு உணவுப் பழக்கங்களையும் உடல் கட்டமைப்பையும் கொண்டிருப்பார்கள். வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களின் விருப்பங்கள், அவர்களின் பழக்கவழக்கங்கள், உடல் கட்டமைப்பு போன்றவற்றுக்கு ஏற்றவாறு வெவ்வேறு விளையாட்டுகளுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்குவது ஒன்றும் கடினமல்ல. நல்ல சாத்தியங்களைக் கொண்டிருக்கும் நம் குழந்தைகளுக்கு, அவர்கள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் பயிற்சி அளிக்க நாம் தொடங்காவிடில், நம்மால் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறுவது கடினமாகிவிடும். தனிப்பட்ட திறமை மட்டும் நம்மை முன்னே கொண்டுசெல்லாது.

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் உச்சபட்ச சாதனை லண்டன் ஒலிம்பிக் போட்டிகள்தான் (2012). அப்போது இந்தியா இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் 4 வெண்கலப் பதக்கங்களையும் வென்று பதக்கப் பட்டியலில் 56-வது இடத்தைப் பிடித்தது. ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் (2016) ஒரு வெள்ளிப் பதக்கம், ஒரு வெண்கலப் பதக்கம் வென்று பட்டியலில் 67-வது இடத்துக்கு இறங்கிவிட்டது. தற்போது நடந்துகொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் இந்தியா வந்தால் நாட்டுக்கு அது பெரிய ஊக்கமாக இருக்கும்.

‘தி இந்து’, தமிழில்: ஆசை


விளையாட்டுகளின் நாடுஇந்தியாSports countryஒலிம்பிக்Tokyo olympics 2020

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x