Last Updated : 26 Jul, 2021 03:12 AM

 

Published : 26 Jul 2021 03:12 AM
Last Updated : 26 Jul 2021 03:12 AM

ஒலிம்பிக் திருவிழா: இந்தியாவைத் தூக்கி நிறுத்திய சானு

1996 அட்லாண்டா ஒலிம்பிக்குக்கு முன்னர் வரை இந்தியத் தனிநபர்கள் வென்ற பதக்கங்கள் வெறும் 3 (1900-ல் நார்மன் பிரிட்சர்ட் இரண்டு வெள்ளி, 1952-ல் கஷாபா ஜாதவ் வெண்கலம்). இடைப்பட்ட 44 ஆண்டுகளுக்குப் பிறகு, அட்லாண்டா டென்னிஸில் வெண்கலப் பதக்கம் வென்று பதக்க தாகத்தைத் தீர்த்துவைத்தார் லியாண்டர் பயஸ்.

2000 சிட்னியில் ஒலிம்பிக் நிறைவடைய இருந்த தருணத்தில் பளுதூக்குதலில் வெண்கலம் வென்று, தனிநபராகப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் ஆனார் கர்ணம் மல்லேஸ்வரி. இப்போது பளுதூக்குதலில் வெள்ளி வென்று இந்தியாவின் 2021 ஒலிம்பிக் பதக்கக் கணக்கைத் தொடங்கி வைத்துள்ளார் மணிப்பூரைச் சேர்ந்த சாய்கோம் மீராபாய் சானு. அதிலும் ஒலிம்பிக் வெள்ளி வென்றுள்ள இரண்டாவது பெண் என்கிற பெருமையையும் அவர் சேர்த்துப் பெறுகிறார்.

கடந்த ஒலிம்பிக் வரை 17 தனிநபர் பதக்கங்களையே இந்தியா வென்றுள்ளது. அவற்றில் 5 பதக்கங்கள் பெண்கள் வென்றவை. கடந்த முறை வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து (பேட்மின்டன்), வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக் (மல்யுத்தம்) இருவருமே பெண்கள். 2012 ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற ஆறு பதக்கங்களில் சானியா நேவாலும் (பேட்மின்டன்), மேரி கோமும் (குத்துச்சண்டை) வெண்கலங்களை வென்றிருந்தார்கள்.

சமீபத்திய ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் இந்தியாவைத் தூக்கிநிறுத்துபவர்கள் பெண்களாக இருப்பதைக் கவனிக்கலாம். பொதுவாகப் பெண்கள், உடல்ரீதியில் வலுவற்றவர்கள் என்கிற கற்பிதம் இருக்கிறது. ஆனால், இந்தியப் பெண்கள் இதுவரை வென்றுள்ள 6 ஒலிம்பிக் பதக்கங்களில் நான்கு பதக்கங்கள் பெரும் உடல்வலு தேவைப்படும் பளுதூக்குதல், குத்துச்சண்டை, மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளில் பெற்றவை என்பது, அந்தக் கற்பிதத்துக்கு விழுந்த பெரிய அடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x