Published : 23 Jul 2021 09:03 AM
Last Updated : 23 Jul 2021 09:03 AM

ஒலிம்பிக் வரலாற்றுத் தருணங்கள்

தொகுப்பு: ஆதி

உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் உச்ச விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக், எப்போதுமே ஆச்சரியத்துக்குக் குறைவு வைத்ததில்லை. நவீன ஒலிம்பிக்கின் 125 ஆண்டு வரலாற்றில் அப்படிப்பட்ட தருணங்கள் கணக்கில் அடங்காதவை. அவற்றில் சில:

பண்டைய ஒலிம்பிக்: கி.மு. ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய ஒலிம்பிக், கிரேக்கத் தலைமைக் கடவுள் ஸியூஸைக் கௌரவப்படுத்தும் வகையில் ஒலிம்பியாவில் நடத்தப்பட்டது.

முதல் சாம்பியன்கள்: 1896-ல் தொடங்கிய நவீன ஒலிம்பிக்கின் முதல் சாம்பியன் அமெரிக்காவின் ஜேம்ஸ் கானல்லி (மும்முறை தாண்டுதல்); பெண்கள் அனுமதிக்கப்பட்ட 1900 பாரிஸ் ஒலிம்பிக் படகோட்டும் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ஹெலன் தி போர்டேல்ஸ் முதல் பெண் சாம்பியன் ஆனார்.

ஓவன்ஸும் ஹிட்லரும்: 1936-ல் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை, தான் வலியுறுத்திய கொள்கைகளுக்கு ஆதரவாக முன்னிறுத்த முயன்றார் ஜெர்மன் அதிபர் அடால்ப் ஹிட்லர். அதேநேரம், ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜெஸ்ஸி ஓவன்ஸ் தடகளப் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

அரசியல் உணர்வு: 1968-ல் மெக்ஸிகோ ஒலிம்பிக்கின் 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் வென்ற அமெரிக்கர்கள் டாமி ஸ்மித்தும் ஜான் கார்லோஸும் பதக்கமளிப்பு விழாவில் ‘கறுப்பின விடுதலை இயக்க’த்தை ஆதரிக்கும் வகையில் கறுப்புக் கையுறை அணிந்து முஷ்டியை உயர்த்தி நின்றனர்.

பத்துக்குப் பத்து: 1976 மான்ட்ரீல் ஒலிம்பிக்கில் ருமானியாவின் 14 வயது ஜிம்னாசிய வீராங்கனை நாடியா கொமனேச் முதன்முறையாக 10-க்கு 10 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்தார்.

‘புதிய ஜெஸ்ஸி ஓவன்ஸ்’: 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் கார்ல் லூயிஸ் தடகளத்தில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார்.

ஒளியேற்றினார்: 1996 அட்லான்டா ஒலிம்பிக் தீபத்தை ஏற்றும் கௌரவம், புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரான முகம்மது அலிக்கு வழங்கப்பட்டது.

ஒற்றுமை உணர்வு: 2000 சிட்னி ஒலிம்பிக் போட்டியில் வடகொரிய, தென்கொரியப் பிரதிநிதிகள் ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக ஒருங்கிணைந்த கொடியை ஏந்திவந்தனர்.

மின்னல் மனிதன்: 2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத் தொலைவை 9.69 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார் ஜமைக்காவின் உசைன் போல்ட். ஒலிம்பிக்கில் 8 தங்கப் பதக்கங்களை அவர் வென்றுள்ளார்.

அதிக ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்கள்: அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் 28 பதக்கங்கள் (23 தங்கம்); சோவியத் ரஷ்யாவின் ஜிம்னாசிய வீராங்கனை லரிசா லடினினா 18 பதக்கங்கள் (9 தங்கம்).

இந்தியத் ‘தங்க’ங்கள்: இந்தியா சார்பில் தனிநபராகத் தங்கம் வென்ற ஒரே வீரர் அபிநவ் பிந்த்ரா (2008 பீஜிங் ஒலிம்பிக்), தனிநபராக வெள்ளி வென்ற ஒரே வீராங்கனை பி.வி.சிந்து (2016 ரியோ ஒலிம்பிக்).

2021 பாராலிம்பிக் போட்டியின் சின்னம் சாமியட்டி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x