Published : 20 Jul 2021 03:13 am

Updated : 20 Jul 2021 05:11 am

 

Published : 20 Jul 2021 03:13 AM
Last Updated : 20 Jul 2021 05:11 AM

அழகுசாதனத் தயாரிப்பில் கடல் பாக்டீரியா

sea-bacteria-beauty-products

உலகளாவிய அழகுசாதனங்களில் 90% முகம் மற்றும் தலைமுடித் தோற்றத்தை மெருகூட்டவும் சருமத்தைப் பொலிவூட்டவும்தான் பயன்படுத்தப்படுகின்றன. அழகு சாதனங் களைத் தயாரிக்க இயற்கை மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதும் உண்டு; செயற்கை வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படும் வாய்ப்பும் உண்டு. பொதுவாக, செயற்கை வேதிப்பொருட்களால் ஆரோக்கியத்துக்குக் கெடுதல் ஏற்படலாம் என்பதால், அவ்வகை அழகுசாதனங்களுக்கு வணிகச் சந்தையில் வரவேற்பு குறைந்துவருகிறது. இயற்கை மூலப்பொருட்களால் தயாரிக்கப்படும் அழகுசாதனங்களின் விற்பனையே கூடுதல்.

அழகுசாதனங்களின் தயாரிப்புக்கு இயற்கை வழியில் கிடைக்கும் மூலப்பொருட்களில் முக்கியமானது, ‘எக்டாய்ன்’ (Ectoine). வேதிப்பண்பில் இது ஈரம் ஊட்டும் ஒரு பொருள் (Moisturizer). செயல்முறையில் இது நம் சருமத்தில் ஈரத்தன்மையைத் தக்கவைப்பதால், சருமம் வறட்சி அடைவதில்லை. மேலும், இது சருமத்தில் சுருக்கங்கள் விழாமல் பார்த்துக்கொள்கிறது. அதனால், வயதான தோற்றத்தைத் தவிர்க்கும் ஆடம்பரமான அழகுசாதனங்களைத் தயாரிக்கவும் இது பயன்படுகிறது. புறஊதாக் கதிர்கள் சருமத்துக்குள் நுழைவதைத் தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. ஆகவே, ‘ஒளி ஒவ்வாமை’ உள்ளவர்களுக்கு உதவும் சூரியஒளி காப்புக் களிம்புகளின் தயாரிப்புக்கு இதன் தேவை அதிகம்.


சாக்கடல் உப்பைவிட ஐந்து மடங்கு அதிக உப்புத்தன்மையுள்ள கடல்களில் வாழும் ‘ஹாலோபைல்’ (Halophile) பாக்டீரியாக்களில் ‘எக்டாய்ன்’ உற்பத்தியாகிறது. இன்றுவரை அயல்நாடுகளிலிருந்துதான் இந்தியாவுக்கு இது இறக்குமதி செய்யப்படுகிறது. அதுவும் நம் தேவைக்குக் கிடைப்பதில்லை. அதனால், ஆடம்பர அழகுசாதனங்கள் தவிர்த்து, சாதாரண அழகுசாதனங்கள் பெரும்பாலானவற்றில் செயற்கை வேதிப்பொருளில் தயாரிக்கப்பட்ட மாற்றுப்பொருள்தான் பயன்படுத்தப்படுகிறது. இதைத் தவிர்க்கச் சொல்கிறது உலக சுகாதார நிறுவனம். காரணம், சரும ஒவ்வாமையில் தொடங்கி புற்றுநோய் வரை இதன் ஆபத்துப் பட்டியல் நீள்கிறது.

இந்தப் பின்னணியில், சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்று, ‘இந்தியாவிலேயே ‘எக்டாய்’னை இயற்கை வழியில் தயாரிக்க முடியும்’ எனும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. இந்த முறைமையில் தயாரிப்புச் செலவும் குறைவு.

சென்னையில் சாதனை

சென்னையைச் சேர்ந்த ‘தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன’த்தின் (National Institute of Ocean Technology - NIOT) கடல்சார் உயிரித் தொழில்நுட்பத் துறை அறிவியலாளர்கள் அந்தமான் கடல் வண்டலிலிருந்து ‘பாசில்லஸ் க்ளோசி’ (Bacillus clausii) எனும் பாக்டீரியா தனி இனத்தைக் கண்டறிந்துள்ளனர். அழகுசாதனங்களுக்குத் தேவைப்படும் ‘எக்டாய்ன்’ இதில் இருப்பதையும், ‘இ.கோலி’ (E.coli) எனும் பாக்டீரியாவின் மரபணுவை வெட்டி மாற்றியமைப்பதன் மூலம் ‘எக்டாய்’னைப் பல மடங்கு உற்பத்தி செய்ய முடியும் என்பதையும் உறுதிசெய்துள்ளனர். இதன் பலனால், இந்தியா இனி ‘எக்டாய்’னுக்காக அயல்நாடுகளை நம்பியிருக்க வேண்டியதில்லை.

இந்த அரிய கண்டுபிடிப்பின் விவரங்களைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால், ‘இ.கோலி’ பாக்டீரியா குறித்து சிறு அறிமுகம். கெட்டுப்போன உணவிலும் அசுத்தமான தண்ணீரிலும் வளரும் பாக்டீரியா இது; நம் வயிற்றுக்குள் போனால், விஷத்தைக் கக்கி நலத்தைக் கெடுக்கும் வில்லன். அதேசமயம், இது ஆய்வகங்களுக்குப் போனால், அறிவியல் வளர்ச்சிக்கு உதவும் நண்பன். ‘எக்டாய்ன்’ தயாரிப்புக்கு எப்படி உதவுகிறது இந்த ‘இ.கோலி’? ‘மரபணு மறுஇணைப்பு’ (recombinant DNA technology) எனப்படும் நவீனத் தொழில்நுட்பத்தின் முதல் படியில் ‘பாசில்லஸ் க்ளோசி’ பாக்டீரியாவிலிருந்து ‘எக்டாய்ன்’ மரபணுச் சரடைப் பிரித்தெடுத்துக்கொள்கின்றனர். அடுத்ததாக, ‘இ.கோலி’ பாக்டீரியாவின் மரபணுவில் பாதியை வெட்டிவிடுகின்றனர். அந்த இடத்தில் ‘எக்டாய்ன்’ மரபணுச் சரடைப் பொருத்திவிடுகின்றனர்.

இப்படி மரபணு மாற்றப்பட்ட ‘இ.கோலி’ பாக்டீரியாக்களை ஆய்வகத்தின் வளர் ஊடகங்களில் வளர்க்கின்றனர். அப்போது அவை கோடிகோடியாய்ப் பெருகும்போது, ‘எக்டாய்ன்’ மூலக்கூறுகளும் சேர்ந்தே வளர்கின்றன. அப்படி வளர்ந்த பாக்டீரியாக்களிலிருந்து ‘எக்டாய்’னைப் பிரித்தெடுத்து அழகுசாதனங்களுக்கு மூலப்பொருளாக வழங்குகின்றனர். சென்னை அறிவியலாளர்கள் மேற்படி தொழில்நுட்பத்தை வணிகமுறைக்குப் பயன்படுத்த சமீபத்தில் பெங்களூரு நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி வழங்கியுள்ளனர். உலகம் மொத்தத்திலும் அழகுசாதனங்களின் வணிகத்தில் வருடத்துக்கு 12,838 கோடி அமெரிக்க டாலர் புழங்குகிறது. இதில் இந்தியாவின் பங்கு 1,320 கோடி அமெரிக்க டாலர். ‘எக்டாய்’னின் தேவை அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 15,000 டன்கள். ஒரு கிலோ ‘எக்டாய்’னின் விலை 1,000 அமெரிக்க டாலர் என்றால், இதன் வணிக மதிப்பைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள். இனி, இந்திய ‘எக்டாய்’னுக்கும் உலக வணிகத்தில் கணிசமான இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உணவுத் தயாரிப்புக்கு உதவும் பாக்டீரியா

அழகுசாதனங்களில் மட்டுமல்லாமல், மருந்துக் கலவைகள், ஐஸ்க்ரீம் போன்ற உணவுப் பொருட்கள், தரை மற்றும் கண்ணாடிப் பரப்புகளை மெருகூட்டும் மெழுகுகள், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் போன்றவை கொழகொழப்பாக இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இந்தக் கலவைகளை ‘மேற்பரப்புத் திறச்செயலிகள்’ (Surfactants) எனும் பரப்பழுத்தக் குறைப்பான்களைக் கலந்து தயாரிக்கின்றனர். அதனால்தான் அவை குழைவாக இருப்பதோடு வசீகரமாகவும் தெரிகின்றன. அவை பெரும்பாலும் செயற்கை வேதிப்பொருட்களாக இருப்பதால், அவற்றில் நச்சுத்தன்மையும் இருக்கிறது. ஒரு மாற்று ஏற்பாடாக அவற்றை இயற்கை வழியில் தயாரிக்க இதே சென்னை அறிவியலாளர்கள் புதிய முயற்சியை மேற்கொண்டனர்.

அந்தமான் கடல் வண்டலில் கிடைக்கும் ‘பிரேவிபாக்டீரியம்’ (Brevibacterium) எனும் மற்றொரு பாக்டீரியாவிலிருந்து புதிய ‘மேற்பரப்புத் திறச்செயலி’ ஒன்றைப் பிரித்தெடுத்து, அவர்கள் சாதனை புரிந்துள்ளனர். இது ‘உயிரி மேற்பரப்புத் திறச்செயலி’ (Biosurfactant) என அழைக்கப்படுகிறது. இயற்கை வழியில் இது கிடைப்பதால், இதில் நச்சுத்தன்மை சிறிதும் இல்லை. இதன் ஈரப்பதம் அதிகம். வெப்பத்தைத் தாங்கும் ஆற்றலும் இதற்குக் கூடுதல்; சீக்கிரத்தில் கெட்டுப்போவதில்லை. மேலும், இது மக்கும் பொருளாக இருப்பதால், சுற்றுச்சூழலுக்கும் உகந்தது என்கின்றனர் சூழலியலாளர்கள்.

சென்னை அறிவியலாளர்களின் இந்த இரட்டைச் சாதனைகளைப் பாராட்டி மகிழும் அதே வேளையில், அந்தமான் கடலில் கிடைத்திருக்கும் இந்த அரிய வகை இயற்கை வளங்கள் கடல் கடத்தல்காரர்கள் கையில் சிக்கிவிடக் கூடாது என்பதும் முக்கியமாகிறது.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com


கடல் பாக்டீரியாஅழகுசாதனத் தயாரிப்பில் கடல் பாக்டீரியாEctoineMoisturizerHalophileBacillus clausiiSurfactantsBeauty products

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x