Published : 20 Jul 2021 03:13 AM
Last Updated : 20 Jul 2021 03:13 AM

நீர்ப்பாசன வளர்ச்சிக்கு முன்னுரிமை வேண்டும்

புதிதாகப் பதவியேற்றுள்ள திமுக அரசு, விவசாயத் துறையில் வளா்ச்சியை ஏற்படுத்துவதற்காகத் தனி நிதிநிலை அறிக்கை மற்றும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தீட்டிவருகிறது. விவசாய வளா்ச்சிக்கு முக்கியக் காரணியாக உள்ள நீா்ப்பாசனத்தின் வளா்ச்சி, தமிழ்நாட்டில் கவலை அளிக்கும் நிலையில் உள்ளதால், அதற்கு வளா்ச்சித் திட்டங்கள் மூலம் அதிமுக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.

தற்போதைய நிலை

தமிழ்நாடு நீா்ப்பாசனப் பரப்பளவில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக அறுபது, எழுபதுகளில் விளங்கியது. 1960-63களின் சராசரிப் புள்ளிவிவரப்படி, இந்தியாவின் மொத்த நீா்ப்பாசனப் பரப்பளவில் ஏறக்குறைய 11% தமிழ்நாடு பெற்றிருந்தது. ஆனால், நீா்ப்பாசன வளா்ச்சிக்கு முறையான முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தால், தமிழ்நாட்டின் பங்கு தொடா்ந்து குறைந்து, தற்போது (2014-17) வெறும் 3.40% உள்ளது.

மொத்த நீா்ப்பாசனப் பரப்பளவிலும் வளா்ச்சி பெறாத மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. உதாரணமாக, 1960-63களில் சராசரியாக 32.46 லட்சம் ஹெக்டேராக இருந்த தமிழ்நாட்டின் நீா்ப்பாசனப் பரப்பளவு, தற்போது (2014-17) ஏறக்குறைய அதே அளவில் (32.71 லட்சம் ஹெக்டேர்) உள்ளது. இதே காலகட்டத்தில், நமது அண்டை மாநிலமான கா்நாடகத்தில் நீா்ப்பாசனப் பரப்பளவு வெறும் 9.96 லட்சம் ஹெக்டேரிலிருந்து 38.25 லட்சம் ஹெக்டேராகவும், ஆந்திரத்தில் 36.66 லட்சம் ஹெக்டேரிலிருந்து 61.93 லட்சம் ஹெக்டேராகவும் அதிகரித்துள்ளது. 1960-61 முதல் 2016-17 வரையிலான காலகட்டத்தில், மொத்த நீா்ப்பாசனப் பரப்பளவின் வளா்ச்சி விகிதத்தில் தொய்வு ஏற்பட்டுள்ள ஒரே மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பது அதிர்ச்சியளிக்கிறது.

வடமாநிலங்கள் பெரும்பாலும், கால்வாய், நிலத்தடி நீர்ப்பாசனத்தை முற்றிலுமாக நம்பியுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் குளம், கால்வாய், நிலத்தடி நீர் ஆகிய மூன்று ஆதாரங்கள் மூலமாகப் பல காலமாக நீர்ப்பாசனம் நடைபெற்றுவருகிறது. இதில் குளம், கால்வாய் மூலமாகச் செய்யப்படும் பாசனப் பரப்பளவு கடுமையாகக் குறைந்துள்ளது. அறுபதுகளில் 9.03 லட்சம் ஹெக்டேராக இருந்த கால்வாய்ப் பாசனப் பரப்பளவு, 6.22 லட்சம் ஹெக்டேராகத் தற்போது (2014-17) குறைந்துள்ளது. இதே போன்று, குளப் பாசனப் பரப்பளவு 9.41 லட்சம் ஹெக்டேரிலிருந்து 3.69 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீா்ப்பாசனத்துக்கு உயிர்நாடியாக உள்ள நிலத்தடி நீர்ப்பாசனப் பரப்பளவு 6.02 லட்சம் ஹெக்டேரிலிருந்து 16.53 லட்சம் ஹெக்டேராக இதே காலகட்டத்தில் பெரிய வளர்ச்சியைப் பெற்றபோதிலும், குளம், கால்வாய் நீர்ப்பாசனத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை அதனால் ஈடுசெய்ய முடியவில்லை. தற்போது நிலத்தடி நீா் மூலம் கிடைக்கும் பாசனப் பரப்பளவின் வளர்ச்சி எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் குறைய வாய்ப்புள்ளது. ஏனெனில், ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் நிலத்தடி நீர் வாரியத்தின் புள்ளிவிவரப்படி, தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 1,139 வட்டங்களில் பெரும்பாலான வட்டங்களில் நிலத்தடி நீர், அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுவதாக எச்சரித்துள்ளது.

விளைவுகள்

குளம், கால்வாய்ப் பாசனப் பரப்பளவு தொடர்ந்து குறைந்துவருவதாலும், மொத்த நீர்ப்பாசனப் பரப்பளவில் வளர்ச்சி இல்லாத காரணத்தாலும், தமிழ்நாட்டின் விவசாயத் துறையில் விரும்பத்தகாத மாற்றங்கள் நடைபெற்றுவருகின்றன. முதலாவதாக, 1970-71ல் 61.69 லட்சம் ஹெக்டேராக இருந்த நிகர சாகுபடிப் பரப்பளவானது 2018-19ல் 45.82 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துவிட்டது. அதாவது, கடந்த 48 ஆண்டுகளில், மொத்தமாக 15.87 லட்சம் நிகர சாகுபடிப் பரப்பளவை தமிழ்நாடு இழந்துள்ளது. இந்த அளவு குறைவு மற்ற பெரிய மாநிலங்களில் நடந்திருக்குமா என்பது சந்தேகமே? இரண்டாவதாக ஏற்பட்டுள்ள விளைவு, மேலே குறிப்பிட்ட காலகட்டத்தில் தமிழ்நாட்டில் தரிசுநிலப் பரப்பளவானது 15.38 லட்சம் ஹெக்டேரிலிருந்து 29.78 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தரிசுநில அதிகரிப்பானது (108.66%) மொத்த இந்தியாவில் (36.38%) ஏற்பட்டுள்ள அதிகரிப்பைவிடப் பன்மடங்கு அதிகமாக உள்ளது. மூன்றாவதாக, குறைவான செலவில் கிடைக்கக்கூடிய குளம் மற்றும் கால்வாய் நீர்ப்பாசனக் குறைவால், அதிக செலவுள்ள நிலத்தடி நீரைக் கொண்டு விவசாயம் செய்வதால், விவசாயிகளின் வருமானம் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது குறைவாக உள்ளது. 2016-17-ல் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட கள ஆய்வின்படி, தமிழ்நாட்டு விவசாயிகளின் சராசரி மாத வருமானம் வெறும் ரூ.9,975. இது பல மாநிலங்களோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவு.

தேவையான நடவடிக்கைகள்

நீர்ப்பாசனம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு மட்டுமல்லாமல், கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கும் முக்கியக் காரணியாக உள்ளது என உலக வங்கியால் வெளியிடப்பட்டுள்ள ஆராய்ச்சி அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. நீர்ப்பாசனக் குறைவால் உணவு உற்பத்தி குறைவதோடு, கிராமங்களில் வேலையிழப்பு ஏற்பட்டு, கிராம மக்கள் வேலை தேடி நகரங்களுக்குச் செல்கிறார்கள். எனவே, தமிழ்நாடு அரசு அதிதீவிரக் கவனம் செலுத்தி, நீர்ப்பாசனப் பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதலில், மத்திய நீர்வாரியத்தின் மதிப்பீட்டின்படி தமிழ்நாட்டில் மொத்தமாகப் பயன்படுத்தக் கூடிய நீர்ப்பாசனப் பரப்பளவு 55.32 லட்சம் ஹெக்டேராகும், இதில் தற்போது 32.71 லட்சம் ஹெக்டேர் மட்டும் பயன்பாட்டில் உள்ளது. அதாவது, சாத்தியமுள்ள மொத்த நீர்ப்பாசனப் பரப்பளவில், ஏறக்குறைய 41% பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதற்கான காரணத்தைக் கண்டறிந்து, நீர்ப்பாசனப் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரண்டாவதாக, தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 41,127 குளங்களில் நீர்க் கொள்ளளவு 347 டிஎம்சி, இது தமிழ்நாட்டின் எல்லா அணைகளின் மொத்த நீர்க் கொள்ளளவைவிட அதிகம். ஆனால், கடந்த 54 ஆண்டுகளில் பெரும்பாலான குளப் பாசனப் பரப்பளவை இழந்துவிட்டோம். நீா்வளத்துக்கான ஒன்றிய அரசின் நிலைக்குழு தனது 16-வது அறிக்கையில், அளவு கடந்த ஆக்கிரமிப்புகளாலும், சரியான பராமரிப்பு இன்மையாலும், குளப் பாசனம் குறைந்துவருகிறது எனக் கோடிட்டுக் காட்டியுள்ளது. பொதுப்பணித் துறையிடமிருந்து குளங்களைப் பிரித்தெடுத்து, குளங்களுக்கான தனி மேலாண்மை வாரியம் அமைத்து, குளப் பாசனப் பரப்பளவை அதிகரிக்க வேண்டும்.

மூன்று, தற்போதுள்ள நிகர நீர்ப்பாசனப் பரப்பளவான 26.48 லட்சம் ஹெக்டேரில், ஏறக்குறைய 63% பரப்பளவானது நிலத்தடி நீர் மூலம் பாசனம் பெறுகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, நிலத்தடி நீரின் ஆதிக்கம் மொத்த நீர்ப்பாசனப் பரப்பளவில் அதிகம். ஆனால், மத்திய நிலத்தடி நீர் வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரப்படி, 17 மாவட்டங்களில் நிலத்தடி நீர் 80%-க்கும் மேலாக உறிஞ்சப்படுவதாகக் கணக்கிட்டுள்ளது. இது தொடர்ந்தால், நிலத்தடி நீர்ப்பாசனப் பரப்பளவு எதிர்காலத்தில் மேலும் குறையக்கூடும். எனவே, நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை வரைமுறைப்படுத்துவதோடு, இப்பகுதிகளில் தண்ணீர்த் தேவையைக் குறைக்கக்கூடிய சொட்டு நீர்ப்பாசன முறையைக் கட்டாயப்படுத்த வேண்டும். கட்டாயமாக, 10 ஹெக்டேர்களுக்கு மேல் நிலம் உள்ள பெரிய விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுப்பதை நிறுத்துவதன் மூலம், நிலத்தடி நீா்ச் சுரண்டலைக் குறைக்க முடியும்.

நான்கு, நீர்க் கணக்கீட்டு முறையை, கால்வாய்ப் பாசனத்தில் கொண்டுவருவதன் மூலம், நீர்ப் பயன்பாட்டு முறை அதிகரித்து, நீர்ப்பாசனப் பரப்பளவை அதிகரிக்க முடியும் என மஹாராஷ்டிரம் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, தமிழ்நாட்டில் அனைத்துக் கால்வாய்ப் பாசனப் பகுதிகளிலும், நீர்க் கணக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்.

ஐந்து, நீர்ப்பாசனத் துறையின் பொறுப்பேற்பை அதிகப்படுத்துவதற்கு, அரசுத் துறையைச் சாராத, நீர் மேலாண்மை நன்கு அறிந்த அறிஞர்களைக் கொண்டு நீர் ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பதன் மூலம் நீர்ப்பாசன வளர்ச்சியை அதிகரித்து, தமிழ்நாட்டின் நீா்ப்பாசனத் துறையை இந்தியாவுக்கே ஓர் எடுத்துக்காட்டாகவும் உருவாக்க முடியும்.

- அ.நாராயணமூர்த்தி, பொருளியல் பேராசிரியர், புதுடெல்லி விவசாயச் செலவு மற்றும் விலை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர், தொடர்புக்கு: narayana64@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x