Published : 20 Jul 2021 03:13 AM
Last Updated : 20 Jul 2021 03:13 AM

ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவிட இந்தியா துணைநிற்க வேண்டும்

தெற்காசியப் பிராந்தியத்தில் கடந்த காலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவின் வெளியுறவு வியூகங்களுக்கான தேவை எழுந்திருக்கிறது. கடந்த வாரம் கூடிய ஷாங்காய் கூட்டுறவு அமைப்பில் (எஸ்சிஓ) இணைந்துள்ள நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் ஆப்கானிஸ்தானில் நடந்துவரும் வன்முறைகளுக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் உடனடியாக முடிவுகட்டப்பட வேண்டும் என்று கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். பயங்கரவாதத் தாக்குதல்கள், போர் அபாயம், போதைப் பொருட்களின் ஆதிக்கத்திலிருந்து ஆப்கானிஸ்தானை விடுவிக்க வேண்டும் என்று அந்தக் கூட்டறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது.

பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் அக்கறையை இந்தக் கூட்டறிக்கை பிரதிபலிக்கிறது. இக்கூட்டத்தில் முன்னதாகக் கலந்துகொண்டு பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பயங்கரவாதத்தாலும் பிரிவினைவாதங்களாலும் அண்டை நாடுகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகாமல் அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். குடிமக்கள், அரசு அதிகாரிகள் மீது நடத்தப்படும் வன்முறைகளுக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், அனைத்து விதமான கருத்துமோதல்களும் பேச்சுவார்த்தைகளின் மூலமே தீர்வுகாணப்பட வேண்டும், அனைத்து இனக் குழுக்களின் நலன்களுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் கவலையானது, ஆப்கானிஸ்தானின் எல்லைகளையும் கடந்தது. பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டுவரும் ஐஎஸ்ஐ தீவிரவாதிகளுடனும் இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட்டுவரும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முஹம்மது அமைப்புகளுடனும் தாலிபான்களுக்கு உள்ள தொடர்புகளை இந்தியா தொடர்ந்து சுட்டிக்காட்டிவருகிறது.

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் படையினர், ஏறக்குறைய முழுமையாகத் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், அங்கு அமைதியும் நிலையான அரசும் தொடர்வதற்கான முயற்சிகளில் அருகமை நாடுகளின் கூட்டமைப்பான ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வமைப்பில் அங்கம் வகிக்கும் சீனாவின் எல்லை விரிவாக்க வேட்கையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக, ஆப்கானிஸ்தான் தொடர்புக் குழுக்களுடன் கடந்த வாரம் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு நடத்திய உரையாடலில் அமைப்பின் உறுப்பினர் என்றபோதும் இந்தியா பங்கெடுக்கவில்லை. அந்த அமைப்பின் மற்ற உறுப்பினர் நாடுகளான சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகியவை பங்கேற்றுள்ளன. ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்களின் பின்னணியில் இயங்கும் பயங்கரவாதக் குழுக்களுக்கு உதவுவதை நிறுத்திக்கொள்ளுமாறு சீனா கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது.

ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை இதுவரையில் தேசிய அரசுக்கு ஆதரவாகவும் அந்த அரசு தாலிபான்களுடன் பேசி சில புரிந்துணர்வுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுமே இந்தியாவின் நிலைப்பாடாக இருந்துவந்தது. தற்போது, இந்தியா மேலும் சில முன்முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன. குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் நிலவும் அமைதியின்மைக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் இந்தியாவின் பங்கும் முதன்மையானதாக இருக்க வேண்டும்; வெவ்வேறு வழிகளில் ஈரான், பாகிஸ்தான் நாடுகளுடன் கைகோத்துச் செயல்படவும் தயாராக இருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x