Published : 01 Feb 2016 08:28 AM
Last Updated : 01 Feb 2016 08:28 AM

அமித் ஷாவின் தேர்வு சொல்வதென்ன?

பாஜகவின் தேசியத் தலைவராக மீண்டும் அமித் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்குரிய அமித் ஷா, உத்தரப் பிரதேசத்தின் 81 மக்களவைத் தொகுதிகளில் 71-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறவும், மக்களவையில் அறுதிப் பெரும்பான்மை பலம் பெறவும் மிகப் பெரிய அளவில் உழைத்தவர். எனவே, தேர்தல் நடந்த சில மாதங்களிலேயே கட்சியின் தலைமைப் பொறுப்பு ராஜ்நாத் சிங்கிடமிருந்து அமித் ஷாவுக்குக் கைமாறியதில் ஆச்சரியமில்லை.

ஹரியானா, மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதில் மோடியைப் போலவே அமித் ஷாவுக்கும் முக்கியப் பங்கு உண்டு. எனினும், டெல்லி, பிஹார் தேர்தல்களில் பாஜகவுக்குக் கிடைத்த பின்னடைவு அமித் ஷாவின் திறமை குறித்த கேள்விகளை எழுப்பியது. கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்படலாம் என்றும், அதற்குப் பதிலாக குஜராத் முதல்வர் பதவி அவருக்கு வழங்கப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த ஊகங்களைப் பொய்யாக்கும் விதத்தில் அவருக்கு பாஜகவின் தலைமைப் பதவி மீண்டும் கிடைத்திருக்கிறது. கட்சியில் அவரது செல்வாக்கு குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது.

இந்த ஆண்டு மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்களை பாஜக சந்திக்க இருக்கிறது. இன்னும் ஓராண்டில் உத்தரப் பிரதேசத்திலும் தேர்தல் நடக்கவிருக்கிறது. தொடர் தோல்விகள் தொடர்பாக எழுந்திருக்கும் விமர்சனங்களுக்கு மத்தியில், இந்த ஆண்டின் தேர்தல்களில் அமித் ஷா முழு மூச்சுடன் பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2019-ல் வரப்போகும் மக்களவைத் தேர்தலுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் முன்னோட்டமாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.

முதல்வர் வேட்பாளர் யாரென்று சொல்லாமல் மோடியை மட்டுமே முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்தாலும் டெல்லி, பிஹார் தேர்தல்களில் பாஜக தோற்றது. எனவே, பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு முன்பே முதல்வர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பதை என்று அறிவிப்பது பற்றி பாஜக பரிசீலிக்கத் தொடங்கியிருக்கிறது. அஸ்ஸாமில் பாஜக கூட்டணி வென்றால், சர்வானந்த சோனோவால்தான் முதல்வர் என்று அக்கட்சி அறிவித்திருக்கிறது.

மக்களவைத் தேர்தலின்போது வளர்ச்சியை மையமாக வைத்து மோடி பிரச்சாரம் செய்தபோது, மென்மையான வகையில் மதரீதியிலான அணி சேர்ப்பு வேலையை பாஜக மேற்கொண்டது. அதையே சற்று அழுத்தமாக பிஹாரில் மேற்கொண்டதால் கட்சி படுதோல்வி கண்டது. ஒருபுறம், வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் மோடி அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், மறுபுறம் இந்துத்துவக் கொள்கைகளின்படி பெரும்பான்மையினவாதத்துக்கு வலு சேர்க்கும் முயற்சிகளில் அமித் ஷா ஈடுபடுவது தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

சங்கப் பரிவாரங்களைச் சேர்ந்த தலைவர்கள் மட்டுமல்ல, மத்திய அமைச்சர்கள்கூட மேடைகளில் அனல் தெறிக்கப் பேசினர். தாத்ரியில் நடந்த படுகொலை உட்பட பல்வேறு சம்பவங்கள் குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் கள்ள மவுனம் சாதித்தனர். பாஜக தலைவர்கள் என்ன பேசினார்கள், அரசியல் சட்டம் வகுத்தளித்த கொள்கைகளுக்கு அவை எப்படி முரணாக இருந்தன என்றும் அதன் காரணமாகத் தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தன என்றும் அமித் ஷா பரிசீலித்திருப்பார் என்று நம்பலாம். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மத அடிப்படைவாதம் இனியும் உதவாது என்று அமித் ஷா உணர்ந்திருப்பார் என்றும் நம்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x