Published : 10 Feb 2016 08:59 AM
Last Updated : 10 Feb 2016 08:59 AM

தவறிழைத்தவர்கள் தப்பவே கூடாது!

முன்னாள் முதலமைச்சருக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதிக்க முடியாது என்று ஒரு ஆளுநர் மறுக்கிறார், அவருக்கு அடுத்து பதவிக்கு வந்த இன்னொரு ஆளுநரோ, வழக்குத் தொடரலாம் என்று அனுமதிக்கிறார். இது சட்டம் தொடர்பாகச் சில கேள்விகளை எழுப்புகிறது. மும்பை மாநகரில் நடந்த ‘ஆதர்ஷ் கூட்டுறவு வீட்டுவசதி சங்க’ முறைகேடு வழக்கில் ஏகப்பட்ட திருப்பங்களும் முடிச்சுகளும் ஏற்பட்டுள்ளன. இருந்தாலும், மகாராஷ்டிரத்தின் முன்னாள் முதலமைச்சர் அசோக் சவாணுக்கு எதிராக வழக்குத் தொடர இந்நாளைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுமதி தந்திருப்பதை வரவேற்றாக வேண்டும். பொதுவாழ்வில் இருப் பவர்கள் தாங்கள் செய்யும் செயல்களுக்குப் பதில் சொல்லக் கடமைப் பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு இது வழிவகுக்கிறது.

மும்பை மாநகரின் கொலாபா என்ற பகுதியில், போரில் இறந்த ராணுவ வீரர்களின் மனைவியர்களுக்கும் பணியில் இருக்கும் ராணுவ அதிகாரிகளுக்கும் குடியிருப்புகளை வழங்க, கூட்டுறவு வீட்டுவசதிச் சங்கம் சார்பில் 31 அடுக்கு மாடி வீடுகளைக் கட்டித்தர மகாராஷ்டிர முதல்வர் அனுமதி தந்தார். மூத்த அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றோரின் உறவினர்களும் நண்பர்களும் விதிகளை வளைத்து வீடுகளைப் பெற்றுக்கொண்டனர். இதில் சவாணின் பங்களிப்பு எப்படிப்பட்டது என்று வழக்குக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்த விவகாரம் பெரிதானபோது மகாராஷ்டிர ஆளுநராக இருந்த கே. சங்கரநாராயணன், அசோக் சவாண் மீது வழக்குத் தொடர அனுமதி மறுத்தார். இதையடுத்து சவாணுடைய பெயரை விசாரணைப் பட்டியலிலிருந்து நீக்க மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) முற்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் அதற்கு அனுமதி தர மறுத்தது.

இப்போது பாஜக தலைமையிலான கூட்டணி அரசு பதவியில் இருக்கிறது. ஆளுநரும் மாறிவிட்டார். புதிதாகக் கிடைத்த தகவல் களின் அடிப்படையில் சவாண் மீது வழக்குத் தொடர ஆளுநர் அணுகப் பட்டார். அவரும் அனுமதித்துவிட்டார். இந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி ஜே.ஏ. பாட்டீல் தலைமையிலான குழு, அசோக் சவாணின் செயலுக்கும் அவருடைய உறவினர்கள் வீடு பெற்றதற்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டியிருந்தது.

சதி செய்தது, ஏமாற்றியது, போலியாக ஆவணங்களைத் திருத்தி யது ஆகியவற்றுக்காக அரசு ஊழியர் மீது வழக்குத் தொடரப்படும் நிலை வருமானால், மேல் அதிகாரி அல்லது அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும் என்பது வெறும் நடைமுறைக்காகத்தான். ஊழல், முறைகேடு போன்றவை நடந்திருந்தால், அரசு ஊழியர் தன்னுடைய பதவிப் பொறுப்பு காரணமாகச் செய்யப்பட்ட நடவடிக்கையாக அவற்றைக் கருத வேண்டியதில்லை. எனவே, முன் அனுமதி பெறத் தேவையில்லை என்று 2006-ல் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறுதியிட்டுக் கூறியிருக்கிறது.

பொதுவாழ்வில் இருக்கும் அரசு ஊழியர்களை அற்ப காரணங் களுக்காக யாராவது ஊழல் குற்றச்சாட்டு போன்றவற்றுக்கு உள்ளாக்கி, அலைக்கழிக்கக் கூடாது என்பதற்காகத்தான் ஆளுநரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. இது சட்ட நுட்பம் வாய்ந்த நடைமுறை. ஆனால், இதையே அரசு ஊழியர் கள், குறிப்பாக அரசியல்வாதிகள் ஊழல் செய்துவிட்டு தப்பிப்பதற் கான கேடயமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். நியாயமான சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்படவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடு நிலைநாட்டப்படவும், பொது வாழ்வில் நேர்மை யை உறுதி செய்யவும் இத்தகைய சட்ட ஓட்டைகளை அடைத்தே தீர வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி விசாரணை நடத்தி அவர்களைத் தண்டனைக்கு உட்படுத்தியே தீர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x