Published : 13 Jul 2021 03:13 am

Updated : 13 Jul 2021 06:08 am

 

Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 06:08 AM

மேகேதாட்டு விவகாரத்தில் தமிழ்நாடு உரிமையை விட்டுக்கொடுக்காது!- அ.வீரப்பன் பேட்டி

mekedatu

தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் சிறப்புத் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் அ.வீரப்பன். காவிரிப் பாதுகாப்பு, மீத்தேன் எதிர்ப்பு என்று தொடர்ந்து செயல்பட்டுவருபவர். நீர் மேலாண்மை, மேகேதாட்டு விவகாரம் போன்றவை குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து…

சென்னைக்குக் காவிரி நீரைக் கொண்டுவர அறிவிக்கப்பட்டிருக்கும் சிறப்புத் திட்டம் வீண் என்று நீங்கள் சொல்லிவருவது ஏன்?


சென்னைக்குக் கூடுதலாகத் தண்ணீர் வழங்கிட காவிரியிலிருந்து ரூ.5,000 – ரூ.6,000 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் சிறப்புத் திட்டம் தேவையற்ற செலவு. அதுவும் தமிழ்நாடு அரசு நிறைய கடனில் மூழ்கியிருக்கும்போது, அமைச்சர் தெரிவித்த சிறப்புக் காவிரிநீர்த் திட்டத்தை ஆடம்பரத்தின் அடையாளமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. சென்னைக்குக் குடிநீர் வழங்குவதற்கு இன்று பல்வேறு வசதி வாய்ப்புகள் உள்ளன. பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளிலிருந்து கிடைக்கும் 11.257 டிஎம்சி, வீராணம் ஏரியிலிருந்து கிடைக்கும் காவிரி நீர் (180 எம்எல்டி), கிருஷ்ணா கால்வாய் மூலமாக ஆந்திரத்திலிருந்து வரும் நீர் (5 டிஎம்சி), கடல் நீரைக் குடிநீராக்கும் மூன்று திட்டங்கள் (300 எம்எல்டி) போன்ற வழிவகைகள் இருக்கின்றன. இவற்றைத் தவிர, சென்னைப் புறநகர்ப் பகுதிகளிலுள்ள விவசாயக் கிணறுகளிலிருந்து இறைத்து லாரிகள் மூலம் நீர் (90 எம்எல்டி) வழங்கப்படுவதைக் குறிப்பிடலாம். நல்ல மழை பெய்யும் காலங்களில் நாள்தோறும் 860 எம்எல்டி அளவில் சென்னைக் குடிநீர் வாரியம் தண்ணீர் வழங்கிவருகிறது. இது இன்றைக்குப் போதுமானதாக உள்ளது. வருங்காலத்தில் பெருகவிருக்கும் மக்கள்தொகைக்கென சென்னையைச் சுற்றியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய ஏரிகளையும் கண்மாய்களையும் தூர்வாருவதோடு, ஒரு மீட்டர் அளவுக்கு ஆழப்படுத்தினால் கூடுதலாக 5 டிஎம்சி அளவுக்கு நீரை ரூ.1,000 கோடி மதிப்பீட்டுச் செலவில் பெற முடியும். இந்தத் திட்டத்தை ஓராண்டில் நிறைவேற்ற முடியும். ரூ.5,000 கோடி செலவில் காவிரி நீர் கொண்டுவருவதற்கோ 3 முதல் 5 ஆண்டுகள் ஆகலாம்.

தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க என்ன செய்ய வேண்டும்?

சென்னை மாநகரமே எல்லாக் காலங்களிலும் தமிழ்நாடு அரசின், முதன்மை அதிகாரிகளின் செல்லப்பிள்ளையாக இருந்துவருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் சென்னையில் ஏற்படுத்தப்பட்ட வசதி வாய்ப்புகளை மிகச் சரியாகக் கணக்கிட்டால் இது தெளிவாகத் தெரியும். அதே அக்கறை, ஆர்வம், செயல்பாடுகள் சிற்றூர், ஊரகப் பகுதிகள் தொடர்பாகவும் இருக்க வேண்டும். இவர்களை இரண்டாம்தரக் குடிமக்களாகக் கருதும் பெரிய அரசு அதிகாரிகளின் மனப்பான்மையும் அணுகுமுறையும் மாற வேண்டும். ஊடகங்களுமேகூட சென்னை மக்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் அளிக்கும் முக்கியத்துவத்தை மற்ற பகுதிகளுக்கு அளிக்கின்றனவா என்பது சந்தேகமே. நாட்டின் செல்வம், நிதி, வளர்ச்சி வசதிகள் ஊரகப் பகுதிகளுக்கும் நகரப் பகுதிகளுக்கும் சமமாகப் பிரித்து வழங்கித் திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கிட – அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் ஆற்று நீர், ஊற்று நீர், ஏரிகளின் மழை நீர் போன்றவற்றைச் சேமித்துக் குறைந்த செலவில் காங்கிரீட் குழாய்கள் மூலமாகப் பிற பகுதிகளுக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

நகரியமாதலுக்கும் தண்ணீர்ப் பிரச்சினைக்கும் இடையே உள்ள தொடர்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஒரு நகரம் மிகப் பெரிய அளவில் நகரியமாவதனால் முதலில் மக்கள்தொகை கூடுகிறது. இதனால் தண்ணீர்த் தேவையும் (குடிநீரும் சேர்த்து) அதிகமாகிறது. இதன் தொடர்ச்சியாகக் கழிவுநீர் அகற்றும் வசதிகளும் கூடுதலாகத் தேவைப்படுகின்றன. இத்துடன் வாகனங்களின் எண்ணிக்கை, வேண்டிய வீடுகள், சாலை வசதிகள், கூடுதல் மக்களுக்கு வேலை வழங்கத் தேவையான தொழிற்சாலைகள், கூடுதலான மின்சாரத் தேவை எனத் தொடர் சங்கிலியாக நிகழ்கிறது. முன்பே இருக்கும் தண்ணீரின் அளவு போதாதபோது வெளியிலிருந்தும் தொலைதூரத்திலிருந்தும் தண்ணீர் கொண்டுவர வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. எனவேதான், சென்னை போன்ற மாநகரப் பகுதிகளுக்குள் புதிதாகக் கட்டிடங்கள் கட்ட அனுமதிக்கக் கூடாது. சீரிய சுற்றுச்சூழலை உருவாக்கிப் பேணிப் பாதுகாத்திட இத்தகைய கட்டுப்பாடுகள் தேவை.

தமிழ்நாட்டின் நீர்நிலைகள் உயிரை விட்டுக்கொண்டிருக் கின்றன. அவற்றை மீட்பதற்கு என்ன வழி?

தமிழ்நாட்டு நீர்நிலைகளை மீட்பதற்கும் வறட்சியைப் போக்குவதற்கும் ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைப் போல ஏரி, குளங்களை ஆழப்படுத்தி மழைநீரைக் கூடுதலாகச் சேமித்து, நிலத்தடி நீரைச் செறிவூட்ட வேண்டும். பெரிய, சிறிய ஆறுகளின் குறுக்கே 50 கிமீ தொலைவுக்கு ஒன்றாகத் தடுப்பணைகள் கட்டப்பட்டு, நீரைச் சேமிக்க வேண்டும். இதற்கு கொள்ளிடம் கம்பரசம்பேட்டை, பாலாறு வாயலூர் தடுப்பணைகள் சிறந்த எடுத்துக்காட்டுகள். ஒருங்கிணைந்த தஞ்சைப் பாசனப் பகுதிகளில் 0.5 டிஎம்சி/ 1 டிஎம்சி கொள்ளளவு கொண்ட தரைகீழ் சுரங்க நீர்த் தேக்கங்களை நிறுவி வெள்ள நீரைச் சேமிப்பதோடு, வெள்ளச் சேதங்களையும் தடுத்திட வேண்டும்.

சோழர்கள், ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களில் சிறப்பாக இருந்த நீர் மேலாண்மை சுதந்திரத்துக்குப் பிறகு மோசமானதற்கு என்ன காரணம்?

இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து கடந்த 75 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான அணைகளைக் கட்டித் தண்ணீரைச் சேமித்துவைத்திருக்கிறோம்; புதிதாகப் பாசனப் பரப்புகளை ஏற்படுத்தியிருக்கிறோம்; பலதரப்பட்ட மக்களுக்கும் குடிநீர் வழங்கியிருக்கிறோம். இதெல்லாம் அந்தக் காலத்தில் இல்லை. அந்தக் காலத்தில் மக்கள்தொகையும், அவர்களின் தேவையும் மிகக் குறைவு. தற்போது மிகமிக அதிகம். இதுவே தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் நீர் மேலாண்மை சிறப்பாக இல்லை என்பதைப் பொறியாளர் ஆர்தர் காட்டனின் வாழ்க்கை வரலாற்று நூலைப் படித்தால் தெரிந்துகொள்ளலாம்.

மேகேதாட்டு விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு முதல்வருக்கு எடியூரப்பா எழுதிய கடிதத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கர்நாடக முதல்வர் எடியூரப்பா எழுதிய கடிதம் சூழ்ச்சிகள் கொண்டதாக, உண்மைகளை மறைத்து எழுதப்பட்டுள்ளது. 1970-1986 காலகட்டத்தில், காவிரி நீர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்த சூழலில், தமிழ்நாட்டின் இசைவின்றி, 1924-ம் ஆண்டு செய்துகொண்ட காவிரி நதிநீர் உடன்படிக்கைக்கு எதிராக, ஒன்றிய அரசின் திட்ட அனுமதி நிதித்தொகை ஒதுக்கீடு எதுவுமின்றி கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, யாகாச்சி, சுவர்ணவதி ஆகிய ஆறுகளின் குறுக்கே 5 அணைகளைக் கட்டி, நம்முடைய காவிரி நீரில் 70 டிஎம்சியை கர்நாடகம் நியாயத்துக்குப் புறம்பாகத் தேக்கியது. கர்நாடகம் தனது பாசனப் பரப்பை 11.20 லட்சம் ஏக்கரிலிருந்து 21.71 லட்சம் ஏக்கராகக் கூட்டியிருக்கிறது. மேகேதாட்டு அணையை (67.3 டிஎம்சி, ரூ.9,000 கோடி செலவில்) கட்டுகிறோம் என்று எழுதுவது எவ்வளவு பெரிய அநீதி! தமிழ்நாட்டுக்கு உரிமையான நீரை 1974 ஆண்டுக்குப் பிறகு கர்நாடகம் வழங்கியதாக வரலாறே இல்லை. இந்தச் சமயத்தில் மேகேதாட்டு அணை கட்டிய பிறகும், தமிழ்நாட்டுக்கு உரிமையான காவிரி நீரைத் தருவோம் என்பது அரசியல் அதிகாரத்தின் முழுப் பொய். இதையெல்லாம் நம்பித் தமிழ்நாடு தன்னுடைய உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.

இயற்கைச் சூழலில் ஆறுகள், குளங்கள், ஏரிகள் போன்றவை வகிக்கும் பங்கைப் பற்றி அரசுகளுக்கும் பொதுப்பணித் துறைக்கும் சரியான புரிதல் இருப்பதாகத் தெரியவில்லையே?

இன்றைய தமிழ்நாடு அரசுக்குச் சரியான புரிதல் இருப்பதால்தான் நீர்வளத் துறை என்ற தனித் துறையை உருவாக்கி, இந்தத் துறையில் நீண்ட கால அனுபவம் கொண்ட, மூத்த அமைச்சரைப் பொறுப்பாக முதல்வர் நியமித்திருக்கிறார். தமிழ்நாட்டில் காமராசர் முதல்வராக இருந்த காலத்தில் 20-க்கும் மேற்பட்ட அணைகள் கட்டப்பட்டன. அடுத்து வந்த கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் 40-க்கும் மேற்பட்ட நடுத்தர, சிறிய நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்பட்டன. திட்ட முன்னுரிமையில் சிறிது மாற்றம் இருக்கலாம். திட்ட நிறைவேற்றத்திலும் குறைபாடுகள் உள்ளன. அதனாலேயே, தமிழ்நாடு அரசுக்கோ, பொதுப்பணித் துறைக்கோ சரியான புரிதல் இல்லை என்று சொல்வது சரியன்று. இந்தியாவிலேயே மிகச் சிறந்த பொறியாளர்கள் தமிழ்நாட்டுப் பொதுப்பணித் துறைப் பொறியாளர்களே. மிகப் பெரிய திட்டங்களைக் குறுகிய காலத்தில், குறைந்த செலவில் செயல்படுத்தி, இன்றும் நீர் மேலாண்மை செய்பவர்கள் தமிழ்நாடு பொதுப்பணித் துறைப் பொறியாளர்களே.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in


மேகேதாட்டுதமிழ்நாடுஅ.வீரப்பன் பேட்டிஅ.வீரப்பன்Mekedatuதமிழ்நாடு பொதுப்பணித் துறைகாவிரிப் பாதுகாப்பு மீத்தேன் எதிர்ப்புநீர் மேலாண்மை மேகேதாட்டு விவகாரம்குடிநீர்ப் பிரச்சினை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

bharathiyar-memorial-day

பாரதீ! எம் கவிஞன் நீ!

கருத்துப் பேழை
x