Published : 19 Feb 2016 10:23 AM
Last Updated : 19 Feb 2016 10:23 AM

என்ன செய்ய வேண்டும் எனக்கான அரசு?

இந்தியாவின் ஒட்டுமொத்தக் கடற்கரையில் 13% தமிழகத்தில் இருக்கிறது. 1,076 கி.மீ. நீளம் கொண்ட தமிழகக் கடற்கரையில், ஆயிரக்கணக்கான மீனவக் கிராமங்களும், லட்சக்கணக்கான கடலோடி மக்களும் வசிக்கிறார்கள். பிரிந்துகிடப்பதாலோ என்னவோ, இவர்களும் உதிரிகளாகவே பார்க்கப்படுகிறார்கள்.

பழவேற்காடு முதல் நீரோடி வரை எத்தனையோ பிரச்சினைகளும் அதற்கு எளிதான தீர்வுகளும் இருக்க, அவற்றைப் பற்றிச் சிந்திக்கக்கூட நேரமில்லாமல் இருக்கிறார்கள், அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும். தமிழகக் கடலோடிகள் எதிர்பார்ப்பது என்ன?

1.கு.பாரதி, தென்னிந்திய மீனவர் நலச் சங்கத் தலைவர்

மண்டல்குழு பரிந்துரைப்படி, மீனவர்களைக் கடல் பழங்குடியினராக அறிவிக்க வேண்டும். துறைமுகம், கடலோரக் காவல்படை உள்ளிட்ட கடல் சார்ந்த அரசுப் பணிகளில் மீனவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். தொகுதிதோறும் அடிப்படைத் தேவைகளுடன் கூடிய மீன் அங்காடிகள் தேவை.



2. குறும்பனை சி.பெர்லின், நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர், நாக்ர்கோவில்

வளர்ச்சித் திட்டங்கள் என்னும் பெயரில் பூர்வ குடிமக்களை அவர்களது வாழிடங்களில் இருந்து பிரிக்கக் கூடாது. 8 மீனவக் கிராமங்களில் வசிக்கும் 70 ஆயிரம் மக்களைப் பாதிக்கிற குளச்சல் வர்த்தகத் துறைமுகம் திட்டத்தைக் கைவிட வேண்டும்.



3. எம். கிருஷ்ணமூர்த்தி, ஜனநாயக மீனவர், மீன்சார்புத் தொழிலாளர் சங்க ஆலோசகர்

மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளிலும் மீனவர்களுக்கு இருந்த பாரம்பரிய உரிமைகள் மறுக்கப்படுகின்றன. தீவுகளையும், கடல்வளத்தையும் பாதுகாக்க இந்தத் தீவுகளை மீனவர்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.



4. உவரி எஸ்.வி.அந்தோணி, தமிழ்நாடு மீனவர் பாதுகாப்புப் பேரவைப் பொதுச்செயலாளர்

கனிம மணல் கொள்ளைக்கு முடிவுகட்ட வேண்டும். தமிழகக் கடற்கரையை அணுத் திட்டங்களுக்கான அடித்தளமாக்கும் முயற்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். நெல்லை, குமரி மாவட்டக் கடலோடிகளின் உடல்பாதிப்பு குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.



5.ஏ.சர்ச்சில், தெற்காசிய மீனவத் தோழமை அமைப்புப் பொதுச்செயலாளர் கன்னியாகுமரி

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஊக்கப்படுத்தும் அதே நேரத்தில், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கடலோடிகள் காணாமல் போவதும், உயிரிழப்பதும் அடிக்கடி நடக்கிறது. இலங்கை அரசு அந்நாட்டில் வழங்குவதைப் போல நமது மீனவர்களுக்கும் சக்தி வாய்ந்த தொலைதொடர்புச் சாதனங்களை வழங்க வேண்டும்.



6. ஆர். புதுப்பட்டினம் எம்.விஜயசுந்தரி, புதுக்கோட்டை மாவட்டம்

வலைகள் அடிக்கடி சேதமடைவதால் அவற்றை முழு மானியத்தில் வழங்க வேண்டும். நல வாரியத்தில் உள்ள கெடுபிடிகளைத் தளர்த்தி வீடு, உதவித்தொகை, கடன் உள்ளிட்ட அரசின் சலுகைகள் எளிதில் கிடைக்கச் செய்ய வேண்டும்.



7.சுனாமிநகர் வேலு, தேவனாம்பட்டினம், கடலூர்

கடலூர் துறைமுகத்தில் உள்ள முகத்துவாரத்தைத் தூர்வாருவதோடு, கடலரிப்பைத் தடுக்கும் வகையில் அங்கு கருங்கல் கொட்ட வேண்டும். மீன்களைக் காயவைக்கப் பெரிய அளவில் தளங்கள் தேவை.



8.காங்கேயன், புதுச்சேரி

கடல் வளத்தை நாசப்படுத்தும் அபாயகரமான தொழிற்சாலைகளை மூட வேண்டும். வீராம்பட்டினத்தில் கடலோரக் காவல்படை மையம் அமைந்தால், மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். சொந்த மண்ணிலேயே நாங்கள் அகதிகளாவதைத் தடுக்க, அந்த மையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். புதுச்சேரி துறைமுகத்தில் அடிப்படைத் தேவைகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.



9. துரை மகேந்திரன், திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கம்

பழவேற்காடு ஏரி மாசடைந்து கிடப்பதால், மீன் வளம் குன்றிவிட்டது. இந்த ஏரியை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள முகத்துவாரப் பகுதிகளைத் தூர்வாரினால் மீன் வளம் பெருகும். அதேபோல, வடசென்னையில் உள்ள அனல் மின் நிலையத்தில் இருந்து வருகிற கழிவுநீர் கடலில் கலப்பதைத் தடுக்க வேண்டும்.



10. டாக்டர். குமரவேலு, செயலாளர் மற்றும் ஆலோசகர் - வங்கக் கடல் மீன் தொழிலாளர் சங்கம்

கடலோரம் இயற்கையாக உள்ள மணல் குன்றுகள், சிறு காடுகள், சதுப்பு நிலக் காடுகள், கடலோர நிலங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்க கடந்த 10 ஆண்டுகளாக எந்தச் செயல்திட்டமும் இல்லை. இவற்றைப் பாதுகாத்தாலே, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்பதால், புதிய அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்.



11. ஜஸ்டின் ஆண்டனி, சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளைத் தலைவர்

மீனவர் பிரச்சினைகளுக்குத் வேகமான தீர்வு கிடைக்க மத்தியில் மீனவர்களுக்குத் தனி அமைச்சகம் வேண்டும். ஆழ்கடலில் கடற்கொள்ளையர்களால் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதைத் தடுக்க சிறப்புப் படை உருவாக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x