Last Updated : 08 Jul, 2021 07:01 AM

 

Published : 08 Jul 2021 07:01 AM
Last Updated : 08 Jul 2021 07:01 AM

அதிகரிக்கும் அரசுப் பள்ளி சேர்க்கையைத் தக்கவைக்கவும்!

மேல்நடுத்தட்டைக் கீழ்நடுத்தட்டு வர்க்கமாகவும், கீழ்நடுத்தட்டை வறுமைக்கோட்டுக்குள்ளும், வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களை இன்னும் இழிந்த நிலைக்கும் அழுத்தித் தள்ளியிருக்கிறது கரோனா பேரிடர்க் காலம். விளைவாக, தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. பெற்றோரின் எதிர்பார்ப்பு என்ன? ஆசிரியர்கள் எப்படிச் சமாளிக்கப்போகிறார்கள், அரசு என்ன செய்யப்போகிறது? கல்வியாளர்களின் கருத்து என்ன? உரையாடலாம்...

பிரபா கல்விமணி, கல்விச் செயல்பாட்டாளர்:

முதல் தேவை கூடுதல் ஆசிரியர்கள். கரோனா காலத்தில் செவிலியர்களைப் பணிக்கு எடுத்ததுபோல, ஒவ்வொரு பள்ளியிலும் எவ்வளவு மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்களோ, அதற்கேற்பத் தற்காலிக ஆசிரியர்களையாவது உடனடியாகப் பணியமர்த்த வேண்டும். அவர்களுக்குக் குறைந்தபட்சம் 15 ஆயிரமாவது சம்பளம் வழங்க வேண்டும். இந்தக் கல்வியாண்டைப் பொறுத்தவரை வகுப்பறைக்குக்கூட தற்காலிகமாக கூரை போட்டுக்கொள்ளலாம். பிறகு, நல்ல கட்டிடம் கட்ட வேண்டும். நீட் தேர்வு தொடர்பாகக் கடந்த ஆட்சி அமைத்த கலையரசன் குழு தாக்கல் செய்த அறிக்கையில், முக்கியமான பல தகவல்கள் இருக்கின்றன. வருமானத்தைப் பொறுத்துதான் பெற்றோர்கள் பள்ளிகளைத் தேர்வு செய்கிறார்கள்.

ரூ. 3,500-க்குக் குறைவாக மாத வருமானம் இருப்பவர்களின் பிள்ளைகள்தான் பெரும்பாலும் அரசுப் பள்ளியில் படிக்கிறார்கள். மாத வருமானம் 10 ஆயிரம் இருப்பவர்கள்கூடத் தங்கள் பிள்ளைகளைச் சுயநிதிப் பள்ளிகளில்தான் சேர்க்கிறார்கள். தமிழ் வழியில் படிக்கிற பிள்ளைகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20% ஒதுக்கீடு உண்டு என்று கருணாநிதி முதல்வராக இருந்தபோது அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதை 50%-ஆக உயர்த்த வேண்டும். நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்கும் வகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு கொடுப்பது நல்ல விஷயம் என்றாலும் அது போதாது. தமிழ்நாட்டில் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதுபவர்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் 40%, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 24%, மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 30.66%, சிபிஎஸ்சி மாணவர்கள் 4.52% என்று நீதியரசர் கலையரசன் குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், நீட் தேர்வு சிபிஎஸ்சி பள்ளிகளில் படிக்கும் வசதியான மாணவர்களுக்கே அதிகம் பயன் தருகிறது. எனவே, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 40% ஒதுக்கீடு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 24%, மெட்ரிக் பள்ளிகளுக்கு 30.66%, சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு 4.52% என்று ஒதுக்கீடு தர வேண்டும். அப்போதுதான் அரசுப் பள்ளியில் சேர்ந்தால் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்ற நம்பிக்கை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வரும்.

சு.உமா மகேசுவரி, ஆசிரியர், கல்விச் செயல்பாட்டாளர்:

அரசுப் பள்ளியில் புதிதாகச் சேர்கிற பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைப் போலவே, ஏற்கெனவே இங்கே படித்துக்கொண்டிருந்த ஏழை எளிய பிள்ளைகள் பலர் படிப்பை நிறுத்திவிட்டு, வேலைக்குப் போகத் தொடங்கிவிட்டார்கள். நிறையப் பெண் பிள்ளைகளுக்குக் குழந்தைத் திருமணங்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்பது கசப்பான உண்மை. இந்தப் பிள்ளைகளை எல்லாம் மீண்டும் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்க ஆசிரியர்களுடன், சமூகப் பாதுகாப்புத் துறையினரையும் அரசு ஈடுபடுத்த வேண்டும். மழலையர் கல்விக்காகப் பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் சேர்க்கும் பெற்றோர், அங்கேயே தொடர்ந்து படிக்க வைத்துவிடுகிறார்கள் என்பதால், அரசுப் பள்ளிகளிலும் மழலையர் பள்ளிகளைத் தொடங்க ஆணையிட்டது தமிழ்நாடு அரசு. ஆனால், அது எல்லாப் பள்ளிகளிலும் நடைமுறைக்கு வரவில்லை. அப்படியே வந்தாலும் அதற்கான பிரத்யேக ஆசிரியர்களை நியமிப்பது, கட்டமைப்பு வசதிகளைச் செய்வது போன்றவை முழுமை பெறவில்லை. தனியார் பள்ளிகளிலிருந்து பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்கள், பெரும்பாலும் ஆங்கில வழி வகுப்பிலேயே தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கச் சொல்கிறார்கள். அதற்கெனத் தனி வகுப்புகளும் ஆசிரியர்களும் கூடுதலாகத் தேவை. உயர், மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியாளர்கள் நியமிக்கப்படாத நிலை தொடர்கிறது. இதனால், அந்த வேலைகள் ஆசிரியர்கள் மீது சுமத்தப்படுவதால், கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது. விளையாட்டு, தையல், ஓவியம், இசை ஆசிரியர்கள் ஓய்வுபெற்றுச் சென்றால், அதோடு அந்தப் பணியிடத்தையே ஒழித்துக்கட்டும் போக்கும் இருக்கிறது. அவற்றை எல்லாம் முறைப்படி நிரப்ப வேண்டும். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணிதம், அறிவியல், கணக்குப் பதிவியல் போன்ற படிப்புகள் மட்டுமே பொதுவாக இருக்கின்றன. செவிலியர், வேளாண்மை உள்ளிட்ட பிற படிப்புகளையும் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தொடங்க வேண்டும்.

ஷங்கர், ஆர்யாஸ் ஓட்டல் உரிமையாளர், கும்பகோணம்:

கும்பகோணத்துல பெரிய சிபிஎஸ்சி ஸ்கூல்ல பிள்ளைங்களச் சேர்த்திருந்தேன். ஊரடங்குக் காலத்துல வீட்ல இருந்ததால ஆன்லைன் கிளாஸை எல்லாம் வேகமா நடத்துனதால பிள்ளைங்க பாடங்களப் புரிஞ்சிக்க முடியாமத் திணறுனாங்க. அவங்களோட மன அழுத்தம் ரொம்ப ஜாஸ்தியாகிடுச்சி. ஆசிரியர்கள், பொறுப்ப பெற்றோர்கள் மேல தள்ளிவிட்டாங்க. “வீட்ல பேரன்ட்ஸ் என்ன பண்றீங்க?’’ என்று எங்களையே திருப்பிக் கேட்டாங்க. அப்புறம் எதுக்குப் பிள்ளைங்கள அவ்வளவு பெரிய ஸ்கூல்ல சேர்த்து, அவ்வளவு ஃபீஸ் கட்டி, நாம இவ்வளவு மெனக்கெடணும்னு தோணிச்சி. இந்த நேரத்துலதான் அரசுப் பள்ளி ஆசிரியர்களாக இருக்கும் இரு நண்பர்கள், “பிள்ளைங்கள கும்பகோணம் அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கலாமே”னு ஆலோசனை சொன்னாங்க. உடனே, பள்ளிக்கூடத்துக்கு மனைவியோட போய் சுத்திப் பார்த்தேன். பள்ளியின் சிறப்புகளை ஆசிரியர்கள் எடுத்துச் சொன்னாங்க. சயின்ஸ் லேபும், கம்ப்யூட்டர் லேபும் பக்காவா இருக்கிறதப் பார்த்ததோட, மாணவர்களும் அதை முழுமையாகப் பயன்படுத்துறாங்க என்பதை முன்னாள் மாணவர்களிடம் பேசித் தெரிஞ்சுக்கிட்டேன். அங்க இருக்கிற ஆசிரியர்களோட சிறப்பையும் தெரிஞ்சுக்கிட்டேன். எல்லாத்தையும் கூட்டிக்கழிச்சிப் பார்த்தா, அரசுப் பள்ளிதான் பெஸ்ட்டுனு தோணுச்சு. இங்கிலீஷ் மீடியமும் இருக்கிறதால ரொம்ப நம்பிக்கையோட பிள்ளைங்களச் சேர்த்திருக்கேன். அந்த நம்பிக்கையை அவங்க காப்பாத்துவாங்கன்னு நம்புறேன்.

ரா.தாமோதரன், அரசுப் பள்ளி ஆசிரியர்:

பெற்றோருக்குக் கட்டண நெருக்கடியும், மாணவர்களுக்கு மன அழுத்தமும் தராத பள்ளி அரசுப் பள்ளி. தரமிக்க, ஐசிடி தனித்திறன் கொண்ட ஆசிரியர்களைக் கொண்டது அரசுப் பள்ளி. ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவன் எந்தக் கட்டணமும் இல்லாமல் 12-ம் வகுப்பு வரையில் தொடர்ந்து படிக்க முடியும். பாடப் புத்தகங்கள், புத்தகப் பை, சைக்கிள், லேப்டாப் உட்பட 14 வகையான விலையில்லாப் பொருட்களை மாணவர்கள் பெற முடியும். எல்லா அரசுப் பள்ளிகளிலும் கூடுதலாக மாணவர்கள் சேர வேண்டும் என்றால், தனியார் பள்ளிகளைப் போலவே ஒவ்வொரு அரசுப் பள்ளியும் தங்களுடைய சிறப்பம்சங்கள் அடங்கிய பதாகையைப் பள்ளி முன்பு வைக்க வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறைகள் இருக்கின்றன என்றாலும், அவற்றைச் சுத்தம் செய்வதற்குத் தூய்மைப் பணியாளர்கள் இல்லை. இதுபோன்ற குறைகளையும் அரசு போக்க வேண்டும்.

முத்துசாமி, திசையன்விளை:

என் தம்பிப் பசங்கள பக்கத்துல உள்ள கிராமத்து அரசுப் பள்ளியில அரை மனசோடதான் சேர்த்துட்டு வந்திருக்கேன். அடிப்படை வசதிகள் போதுமானதா இல்ல. இன்னிக்குக் கழிப்பறையும் மின்விசிறியும் இல்லாத வீடுகளே கெடையாது. அந்த வசதிகூட பள்ளிக்கூடத்துல இல்லைன்னா, பெண் பிள்ளையைச் சேர்க்கச் சங்கடம் வரத்தானே செய்யும்? 1 முதல் 8 வகுப்பு வரை உள்ள பள்ளிக்கூடத்துல மொத்தமே 5 ஆசிரியர்கள் மட்டும் இருந்தா, எப்படி எல்லாப் பாடங்களையும் நடத்த முடியும்? ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியரை நியமிச்சாதான், பெற்றோர்கள் தயங்காமல் பிள்ளைகளைச் சேர்ப்பாங்க. இல்லாட்டி, மறுபடியும் வருமானம் வரத் தொடங்குனதும், பிள்ளைங்கள தனியார் பள்ளியிலயே சேர்த்திடுவாங்க.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x