Published : 08 Jul 2021 03:12 AM
Last Updated : 08 Jul 2021 03:12 AM

ஸ்டான் சுவாமி: நியாயம் யார் பக்கம்?

அ.இருதயராஜ்

“அரசும் நீதிமன்றமும் ஒரு முதிய மனித உரிமைப் போராளியைக் கொன்றுவிட்டன. ஸ்டேன் சுவாமி போன்ற அன்பான, மனிதநேய மிக்க நபரை இனிமேல் சந்திக்க முடியாது” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார், சர்ச்சைக்குரிய வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன். 84 வயதான ஸ்டேன் சுவாமி, ‘‘கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழங் குடியினரின் சுயநிர்வாகம், நிலம், நீர், காடு சார்ந்த உரிமைகளுக்காகவும், அவர்களுடைய ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும் உழைத்ததைவிட நான் வேறு என்ன தவறு செய்துவிட்டேன்?” என்று கேள்வி எழுப்பினார். அடுத்தடுத்து வலுவான வழக்குகள் போடப்பட்டு, தேசியப் புலனாய்வு அமைப்பின் கீழ் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணைக் கைதியாக மும்பை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

முதிர்ந்த வயது, பார்கின்சன் நோயால் ஏற்பட்ட கைநடுக்கம் மற்றும் பிற நோய்கள் காரணமாக மருத்துவரீதியிலான பிணை கேட்டபோது, நீதிமன்றம் கடைசி வரை மறுத்துவிட்டது. மீண்டும் மீண்டும் உடல்நலம் மோசமான நிலையிலும் அவரை மருத்துவமனை சிகிச்சைக்கு அனுப்பினார்களே தவிர, ஜாமீனில் வெளியே அனுப்பவில்லை. கைநடுக்கம் காரணமாக, உறிஞ்சிக் குடிப்பதற்குச் சிறையில் தனக்கு உறிஞ்சுகுழல் வேண்டும் என்ற அவரது வேண்டுகோள் ஏற்கப்படாதது கண்டு, அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். மெல்ல மனநலமும் உடல்நலமும் பாதிக்கப்பட்டு, கரோனா பாதிப்புக்கும் ஆளான ஸ்டேன் சுவாமி, ஜூலை 5-ம் தேதி மரணமடைந்தார்.

ஸ்டேன் சுவாமி என்கிற ஸ்தனிஸ்லாஸ் லூர்துசாமி, தமிழகத்தில் அரியலுார் மாவட்டத்தில் விரகனூர் கிராமத்தில் பிறந்தவா். இயேசு சபையென்னும் சர்வதேச அமைப்பில் சேர்ந்து, வடமாநிலங்களில் பணிபுரிய முன்வந்தவா். இளம் வயதிலிருந்தே சமூகப் பிரச்சினைகளை அறிந்துகொள்வது, ஆய்வுசெய்வது, தீர்வுகளைத் தேடுவது என்று ஆர்வம் காட்டினார். இந்திய ஜனநாயகம், அரசியல் சாசனம், மனித உரிமைகள், தலைமைத்துவம் ஆகிய தலைப்புகளில் ஆழமான பயிற்சி பெற்றார். அதன் பிறகு, பல குழுக்களுக்கு அவரே பயிற்சி வகுப்புகள் நடத்தினார். ஆழமான சிந்தனையும் பயிற்சியும் ஆய்வும்தான் அவரை ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் பணியாற்ற உந்தித் தள்ளின.

கிராமிய சுயநிர்வாகம்

பின்தங்கிய மாநிலமான ஜார்க்கண்டில் உள்ள பழங்குடியினரின் வாழ்வோடு கலந்து, அவர்களுடைய அன்றாட வாழ்க்கைமுறை, இயற்கையோடு கொண்டுள்ள உறவு, பண்பாடு, நம்பிக்கை, சடங்குகள் அனைத்தையும் ஆழமாக ஸ்டேன் சுவாமி அறிந்தார். அவர்களின் மண் சார்ந்த உரிமைகளைப் பெற அவா்களோடு சேர்ந்து பல திட்டங்களைத் தீட்டினார். கிராமிய சுயநிர்வாகம் அவா்கள் மத்தியில் சிறப்பாகவும் வலுவாகவும் இருப்பதைக் கண்டுகொண்டார்.

அதன் பின்னணியில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணையில் சொல்லப்பட்டுள்ளதுபோல் பழங்குடியினரை உறுப்பினர்களாகக் கொண்ட `பழங்குடியினர் ஆலோசனைக் குழு’ அமைக்க வேண்டும் என்று ஸ்டேன் சுவாமி குரல்கொடுத்தார். மேலும், 1996-ல் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட `பழங்குடியினர் கிராமப் பஞ்சாயத்து விரிவாக்கச் சட்டம் (பெசா)’ ஏன் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

நில உரிமைக்குக் குரல்

1997-ல் ‘சமத்தா’ வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, பழங்குடியினரின் நிலங்களில் உள்ள கனிம வளங்களை யாரும் அபகரிக்க முடியாத அளவுக்குப் பாதுகாப்பு அளித்தது. இந்தத் தீர்ப்பை முழுமையாக அமல்படுத்தினால் பழங்குடியினர் பொருளாதாரரீதியாகத் தங்களைப் பலப்படுத்திக்கொள்ள முடியும். ஏனென்றால், ‘நில உரிமையாளருக்கே அந்த நிலத்தில் உள்ள கனிம வளங்களும் சொந்தம்’ என்ற சிந்தனையை மக்கள் வலுவாகப் பெற்றிருந்தனர்.

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் ஜார்க்கண்ட் மாநில அரசு 2013-ல் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, நல்ல விளைச்சலைத் தரும் பழங்குடியினரின் வளமான நிலங்களை, கனிம வளங்களைத் தோண்டி எடுக்க அரசே தனியார் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்தது. இதை எதிர்த்து, மக்களின் பிரதிநிதியாக நின்று கேள்வி எழுப்பினார் ஸ்டேன் சுவாமி. உரிமை உணர்வோடு தலைவர்களாக எழுந்துவரும் பல பழங்குடியின இளைஞர்களுக்கு நக்சல்பாரிகளோடு தொடர்பு இருப்பதாக வழக்குகள் போடப்பட்டு, அவர்களை விசாரணைக் கைதிகளாகப் பல ஆண்டுகள் சிறையில் வைத்திருந்தது உள்நோக்கம் கொண்ட செயல் என்று குரல் எழுப்பினார்.

வன உரிமைப் பாதுகாப்பு

அதேபோல, 2006-ல் இந்திய அரசு கொண்டுவந்த வன உரிமைச் சட்டத்தின்படி பழங்குடியினருக்குப் பல உரிமைகளை வழங்கியிருக்க வேண்டும்; அது ஏன் நடக்கவில்லையென்று ஸ்டேன் சுவாமி கேள்வி எழுப்பினார். அந்தச் சட்டத்தின்படி, மக்கள் தினந்தோறும் காட்டுக்குள் சென்று உணவு சேகரித்தல், சிறுதானியங்கள் சேகரித்தல், விறகு பொறுக்குதல் போன்றவற்றைச் செய்ய அவர்களுக்கு உரிமை உள்ளது.

அங்குள்ள மரங்களுக்கோ விலங்குகளுக்கோ இவா்கள் யாரும் தீங்கு விளைவிப்பதில்லை. பழங்குடியினர் காட்டுக்குள் சென்று வந்தால்தான் அவா்களின் வாழ்வு அர்த்தம் பெறுகிறது. ஏனென்றால், அவா்களுடைய மூதாதையர்களும் குலதெய்வங்களும் அங்குதான் குடியிருப்பதாக அம்மக்கள் நம்புகிறார்கள்.

தொடர்ந்த கைது

ஸ்டேன் சுவாமிக்கு நக்சல்பாரிகளோடும், பயங்கரவாதிகளோடும் தொடர்பிருக்கிறது என்று சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி வழக்கு போடப்பட்டபோது, அவை பொய்ச் சான்றுகள் என்றனர் அவரது ஆதரவாளர்கள். மஹாராஷ்டிரத்தின் பீமா கோரேகான் கலவர நிகழ்வுக்குப் பின்னால் இருந்த அறிவுஜீவிப் போராளிகளுடன் ஸ்டேன் சுவாமி தொடர்புகொண்டிருந்ததாகவும் நீதிமன்றத்தில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அவையும் உண்மைக்குப் புறம்பானவை என்றும் சட்ட விரோதமானவை என்றும் இவரது ஆதரவாளர்கள் போர்க் குரல் எழுப்பினர்.

வரவர ராவ் உள்ளிட்ட மேலும் பல அறிவுஜீவிப் போராளிகள், நக்சல்பாரிகளின் நகர்புறத் தொடர்பாளர்களாகச் செயல்பட்டு, நாட்டுக்குள் போர்ச் சூழலை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள் என்று என்.ஐ.ஏ. அமைப்பு தொடர்ந்து வழக்குகளை இறுக்கியபடியே இருக்க, கார்ப்பரேட்டுகளுக்கு லாபம் சேர்ப்பதற்காக அப்பாவி மக்களின் உரிமைகளை அரசாங்கம் பலி கொடுப்பதாகச் சொல்லி அறிவுஜீவிப் போராளிகள் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

அரசின் சட்டக் கரங்களுக்கும், அறிவுஜீவிகளின் போர்க் குரலுக்குமான பலப்பரீட்சை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நியாயம் யார் பக்கம் என்ற விவாதமும்தான்!

- அ.இருதயராஜ், தலைவா், காட்சித் தகவலியல் துறை, இலயோலா கல்லுாரி. தொடர்புக்கு: iruraj2020@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x