Last Updated : 18 Feb, 2016 09:14 AM

 

Published : 18 Feb 2016 09:14 AM
Last Updated : 18 Feb 2016 09:14 AM

ஐந்தாண்டு கனவு திட்டம் முடிஞ்சிருச்சி, அடுத்து?

‘யப்பா, கொஞ்சம் சென்னைக்கு வா’ன்னு ஆபீஸ்ல கூப்டாங்க. வழக்கம்போல டிரெயின்ல டிக்கெட் கிடைக்கல. மதுரை மாட்டுத்தாவணில பஸ் ஏறுனா, என் எதிர்பார்ப்புக்கு ‘ஆப்பு’ வெக்கிற மாதிரி பூராம் வயசான ஆட்க. நாட்ல இருக்கிற மூத்த குடிமக்களுக்கு எல்லாம் அம்மா, இலவச பஸ் பாஸ் குடுத்ததால வந்த வெனை.

“எளவட்டப்பய, படகுல போனாத்தான் என்ன?”ன்னு கண்டக்டர் திட்டுனதால, மாட்டுத்தாவணியில இருந்து ‘மோனோ ரயில்’ல ஏறி வைகைக் கரைக்குப் போனேன். வானத்தைத் தொடுற மாதிரி வளர்த்தியா நின்ன தமிழன்னை சிலை பக்கத்துல, வரிசைக்காகப் படகு நின்னுச்சி. அதுல ஒண்ணுல ஏறி ‘மாநில நீர்வழிச் சாலை’ வழியா 8 மணி நேரத்துல மெட்ராஸ்க்குப் போயிட்டேன்.

இது தமிழ்நாடா, அமேசான் காடா?

வழியெல்லாம் கொசகொசன்னு மரம். இது தமிழ்நாடா அமேசான் காடான்னு சந்தேகமே வந்திருச்சி. நான் திகைச்சிப் பாக்கிறதப் புரிஞ்சிக்கிட்டு, பக்கத்து சீட்டுக்காரரு வௌக்கம் சொன்னாரு. “ஏற்கெனவே அழகிரி பொறந்த நாளைக்கு 1 லட்சம் மரம் நட்ருந்தாய்ங்க. அப்புறம் இந்தம்மா பொறந்த நாளைக்கு 2012ல 64 லட்சம், 2013ல 65 லட்சம், 2014ல 66 லட்சம், 2015ல 67 லட்சம்னு 2 கோடியே 62 லட்சம் மரத்தை நட்டுக் காடாக்கிப்புட்டாய்ங்க. இந்த வருஷம் மேற்கொண்டு 68 லட்சம் மரக்கண்டு நடப்போறாங்களாம். இடம்தாம் இல்ல”ன்னாரு.

ஒருவழியா மெட்ராஸ் வந்து சேந்தேன். ‘ஆத்துத் துறை’யில இறங்குனதும் 10 ரூவாய நீட்டி, டீ கேட்டேன். 3 ரூவான்னாரு கடைக்காரரு. “என்ன அண்ணாச்சி, நெதமும் துட்டை ஏத்திக்கிட்டே போறிய?”ன்னேன். “இவ்வளவு நாளு ‘உள்ள’ இருந்திட்டு வந்தீயாப்பா? தமிழ்நாட்ல ரெண்டாவது ‘வெண்மைப் புரட்சி’ நடந்து, பால், டீ வெலை கொறஞ்சது தெரியாதா?”ன்னு கேட்டாரு.

ஆபீஸ் வாசல்ல உள்ள நுழைய முடியாத அளவுக்கு வரிசையா காரு. ‘தனிநபர் வருமானம் ரெண்டு மடங்கா’னதால, பூராப் பேரும் கார் வாங்கிட்டாங்கன்னு செக்யூரிட்டி அண்ணாச்சி சொன்னாரு.

இன்னும் சில பேரு, ‘திருமழிசை துணை நகர’த்துல வீடே வாங்கிட்டாங்கன்னும் சொன்னாரு. “ஆஹா, மாதரசி அம்மா போன தேர்தல்ல குடுத்த வாக்குறுதியப் பூராம் நிறைவேத்திட்டாங்கய்யா. நாம பொறந்த சோலைசேரி எப்பிடியிருக்குன்னு ஒரு எட்டுப்போய்ப் பாத்துருவோம்”னு ஆசை ஆசையா வந்துச்சி.

வேலை முடிஞ்சதும் ஒரு வாரம் லீவு சொல்லிட்டு, வண்டலூர் புறநகர் பேருந்து நிலையத்துக்குப் போய் திருநெல்வேலிக்கு டிக்கெட் போட்டேன். அடேய்ங்கப்பா, மதுரையைத் தாண்டித் திருநெல்வேலி வரைக்கும் ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் கம்பெனிகளா இருந்துச்சி. ஐடி பார்க், ஏரோ பார்க் அதுஇதுன்னு என்னென்னமோ தொழிற்சாலைங்க. “இதென்ன பிரமாதம், மதுரை & தூத்துக்குடி ரோட்டைப் பாத்தீங்கன்னா மெரண்டுருவீங்க. அத இன்டஸ்ட்ரியல் காரிடாரா மாத்திட்டாங்க தெரியுமா?”ன்னாரு ஒருத்தரு.

எங்க ஊரு அடியோட மாறிப்போயிருந்துச்சி. ‘இது சோலைசேரியா… இல்ல சோலார்சேரியா?’ன்னு கேட்கிற மாதிரி அம்புட்டு தெரு லைட்டையும் ‘சோலா’ராக்கிருந்தாங்க. எங்க கடை பூட்டிக்கெடந்துச்சி. சொந்தக்காரன் செத்தாக்கூட, அப்பா கடைக்கு லீவு விட மாட்டாரேன்னு யோசிச்சிக்கிட்டே வீட்டுக்குப் போனா, “ஏல, அப்பா இறவைக்குப் போயிருக்காவ”ன்னு சொன்னாவ எங்கம்மை. “ஏம்மெ? என்னாச்சி அவருக்கு?”ன்னேன். “காலையில 5 மணியில இருந்து ராத்திரி 10 மணி வரைக்கும் கடைல இருந்து என்ன பிரயோஜனம்? தூங்கித் தூங்கி விழுந்ததுதான் மிச்சம். வெவசாயத்துல தனிநபர் வருமானத்த அம்மா 3 மடங்காக்குனதால, அப்பா மட்டுமில்லாம பூராப்பேரும் வெவசாயத்துக்குத் திரும்பிட்டாங்க”ன்னாவ.

இலங்கைக்கு பஸ்ஸு!

ஒரு படத்துல வடிவேலு ‘சும்மா’ இருப்பாரே, அவர மாதிரி ஒரே பேப்பர ஓராயிரம் தடவை படிக்கிற நடராசன் சித்தப்பாவையும், கன்னத்துல கை வெச்சி கனவு கண்டமேனிக்கே இருக்குற மாரியம்ம பாட்டியையும்கூட ஊர்ல பாக்க முடியல. “70 லட்சம் புது வேலைவாய்ப்புகள உருவாக்கிட்டாங்க அம்மா. தென்தமிழ்நாட்ல தடுக்கி விழுந்தா ஒரு தொழிற்சாலைங்கிற அளவுக்கு நிலைமை மாறிப்போச்சு. சர்க்கார் பள்ளிக்கூடத்துக்குப் பிள்ளைகளை பிடிக்கிற மாதிரி, முதலாளிமாருங்க எல்லாம் வேலைக்கு ஆள் பிடிக்காங்க. நடராசனுக்கு 30 ஆயிரம் சம்பளம், மாரியம்ம பாட்டிக்குத் தினம் ஆயிரம் ரூவா சம்பளம், பெறவு எப்பிடி சும்மா இருப்பாங்க?”ன்னு ஊர்க்காரங்க வெவரம் சொன்னாங்க.

இறவைக்குப் போய் அப்பாவப் பாத்தேன். “ஏடே, அம்ம சொன்னாளாடே? நாம இலங்கைக்கு டூர் போறோம்”ன்னாரு அவரு. அதிர்ச்சியோட வீட்டுக்கு வந்தா, பெரிய துணி மூட்டையோட அம்மை ரெடியா இருந்தாவ. ஏம்மா, இவ்வளவு லக்கேஜெல்லாம் ஏரோப்பிளேன்ல ஏத்த மாட்டாங்கம்மான்னேன். “லூசுப் பயலே நாம பஸ்லதான போவப்போறோம்”னு அவிய சொல்ல, கடுப்பாயிட்டேன்.

“கடலுக்குள்ள பஸ்ஸா..?”ன்னு முறைச்சிக்கிட்டே கேட்டேன். “ராமர் கெட்ன பாலத்தை இடிக்க கருணாநிதி போட்ட சதித் (சேதுசமுத்திர) திட்டத்தை ஜெயலலிதாம்மா நிப்பாட்டிட்டாங்க. அப்புறம் ஏற்கெனவே இருந்த ராமர் பாலத்த, மோடி உதவியோட மராமத்து வேலை பாத்து ராமேஸ்வரத்துக்கும் இலங்கைக்கும் நடுவுல பஸ் போக்குவரத்தைத் தொடங்கிட்டாங்க. இது தெரியல. நீ எல்லாம் பத்திரிகையில எப்பிடித்தான் வேலை பாக்கியோ?”ன்னு தலையில அடிச்சிக்கிட்டாவ.

ராமேஸ்வரம் போய் பஸ் மாறுறதா பிளான். அங்கேயும் ஒரு ஆச்சரியம் காத்துக்கிட்டு இருந்துச்சி. ஒவ்வொரு படகுலேயும் யூனிஃபார்ம் போட்ட ஒருத்தரு துப்பாக்கியோட இருந்தாரு. “யாருப்பா இது?”ன்னு விசாரிச்சா, “இலங்கை கடற்படை ஏதாவது வாலாட்டுனா சுட்டு வெரட்டுற மீனவர் பாதுகாப்புப் படை வீரர்”னு சொன்னாங்க.

“எப்பவாச்சும் அப்படித் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக் காங்களா”ன்னு கேட்டேன்.

“அட என்ன தம்பி இப்பிடிக் கேட்டுட்டீங்க. ‘இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’னு சீமான் தம்பி சொன்னார்ல, அது நடந்திருச்சி. இப்ப ஈழம் தனி நாடு. “நம்ம பயகதானே மீனைப் பிடிச்சிட்டுப் போகட்டும்னு ஈழப் பிரதமர் சொல்லிட்டாரு. இந்தப் பாதுகாப்பு எல்லாம், ஈழ எல்லையையும் தாண்டி கொழும்பு பக்கத்துல மீன்பிடிக்கப் போறவங்களுக்குத்தான்”னு சொன்னாரு.

பஸ்ல இலங்கைக்குப் போகும்போது, நடுவழியில திடீர்னு நிப்பாட்டுனாங்க. கடலுக்குள்ள என்ன ஸ்டாப்புன்னு எட்டிப்பாத்தா கச்சத்தீவு. “பஸ் அஞ்சி நிமிஷம் நிக்கும், சாப்பிடுறவங்க சாப்பிடலாம்”னு ஒருத்தர் கூவிக்கிட்டு இருந்தாரு. ‘‘அந்தோணியார் கோயில் திருவிழாவுக்கே நேவிக்காரன்கிட்ட டோக்கன் வாங்கணுமே, இவங்க எப்படி நிரந்தரமா கடை போட்டாங்க?”ன்னு அப்பாகிட்ட கேட்டேன். “ஏலே, கச்சத்தீவை நாம மீட்டு கொள்ளக்காலம் ஆச்சி, கம்முன்னு இரு... எதையாவது பேசி எங்க மானத்தை வாங்காத”ன்னு அதட்டுனாரு.

தனி ஈழத்தைச் சுத்திப் பாத்திட்டு ஊருக்குத் திரும் புனதும், இனிமே வெளிநாட்டுக்குலாம் போவப்புடாது. கோயம்புத்தூரு, கடலூரு, கிருஷ்ணகிரின்னு தமிழ் நாட்டுலயே நிறையப் பாக்க வேண்டியது இருக்குன்னு நினைச்சிக்கிட்டே படுத்துத் தூங்கிட்டேன்னு சொன்ன துமே, ‘எலே, எத்தன சினிமால பாத்துருக்கோம். இதெல் லாம் கனவு சீன்தான்னு சொல்லித்தான் தெரியணு மாக்கும்’ன்னு நீங்க வாரியலத் தூக்கிட்டு வாரது எனக்கு நல்லாத் தெரியுது. என்னதான் பண்ணச் சொல்றீக..?

அடுத்த கனவு

கிழிஞ்சிபோன ரேஷன் கார்ட கையில குடுத்து, “ஒழுங்கா பருப்பு வாங்கிட்டு வாங்க, வீட்டுப் பருப்போட ரேஷன் பருப்பைக் கலந்தாத்தான் கட்டுப்படியாகும்”னு என் பொண்டாட்டி உத்தரவு போட்டுக்கிட்டு இருந்தா. எனக்குக் கோவமா வந்துச்சி. இதைப் படிச்சிட்டு உங்களுக்கும் கோவம் கோவமா வருமே? இடைக்கால பட்ஜெட்டுங்கிற பேர்ல நாலாண்டு சாதனைகளை ஓபிஎஸ் வாசிச்சப்ப எனக்கும் அப்பிடித்தான் இருந்துச்சி.

கலைஞ்ச கனவைக் கண்டினியூ பண்ணணும். சீக்கிரம் அடுத்த தேர்தல் அறிக்கையை வெளியிடுங்கப்பா!

- கே.கே.மகேஷ்,

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x