Last Updated : 07 Jul, 2021 03:12 AM

 

Published : 07 Jul 2021 03:12 AM
Last Updated : 07 Jul 2021 03:12 AM

கலப்பு - இணைத் தடுப்பூசிகள் கரோனாவுக்கு முடிவுகட்டுமா?

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் கரோனாவின் மூன்றாம் அலையை எதிர்கொள்ளத் தயாராகிவருகின்றன. அதற்கான முன்னெடுப்பாகத் தற்போது மூன்றாம் அலை வேகமெடுத்திருக்கும் பிரிட்டனையும் ரஷ்யாவையும் அவை கூர்ந்து கவனிக்கின்றன. இந்தியாவைப் போல் தடுப்பூசித் தட்டுப்பாட்டால் தடுமாறும் ரஷ்யா, மூன்றாம் அலையில் அதிக அளவில் உயிரிழப்புகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. அதேநேரத்தில், குழந்தைகள் உட்பட பெரும்பாலானோருக்குத் தடுப்பூசி செலுத்தியுள்ள பிரிட்டன், மூன்றாம் அலையில் பெருமளவில் உயிரிழப்புகளைத் தடுத்திருக்கிறது. இந்த இரண்டு நாடுகள் உலகுக்குக் காட்டியுள்ள உண்மை ‘கரோனாவுக்கு எதிரான பேராயுதம் தடுப்பூசி’ என்பதுதான்.

‘2021 இறுதிக்குள் உலகில் 70% பேருக்குத் தடுப்பூசி செலுத்திவிட்டால், சமூக எதிர்ப்பாற்றல் கிடைத்துவிடும்; அப்போது கரோனாவும் விடை கொடுத்துவிடும்’ என்பது அறிவியலாளர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், வளர்ந்த நாடுகள் பலவும் தடுப்பூசிகளைப் பதுக்கிக்கொண்டதும், பன்னிரண்டுக்கும் மேற்பட்ட ஏழை நாடுகளுக்கு ஒரு தவணை தடுப்பூசிகூட இன்னும் கிடைக்கவில்லை என்பதும், இந்தியா உட்பட அநேக நாடுகளில் தடுப்பூசிக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதும், தடுப்பூசிச் செயல்திட்டத்தின் வெற்றிக்குத் தடைபோடுகின்றன. உதாரணமாக, இந்தியாவில் இதுவரை 4.6% பேர்தான் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

தடுப்பூசியில் தாமதம்

நாடளவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி, தடுப்பூசி செலுத்துவதில் தாமதம் ஏற்படுமானால், இப்போது வீரியத்துடன் பரவிவரும் டெல்டா - டெல்டா பிளஸ் வேற்றுருவங்கள் இன்னும் நிறையவே உருமாறிவிடும். அப்போது தற்போதுள்ள தடுப்பூசிகள் அவற்றுக்குச் செயல்படாமல் போகும். அடுத்தடுத்த அலைகள் வரும். மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப நீண்ட காலம் ஆகும். இப்படியான அச்சுறுத்தல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.

இந்தச் சூழலில் தற்போதுள்ள தடுப்பூசிச் செயல்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டியதும் வேகப்படுத்த வேண்டியதும் மக்கள்தொகை அதிகமுள்ள உலக நாடுகள் முன் நிற்கும் ஆகப் பெரிய சவால்கள். இந்தச் சவால்களை எதிர்கொள்ள, முதலில் தற்போது நடைமுறையில் உள்ள தடுப்பூசிகளின் உற்பத்தியைப் பல மடங்கு அதிகரித்துத் தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடுத்தது, சமூகத்தின் தேவையைச் சரியாகக் கணித்துத் தடுப்பூசி விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும். இந்த இரண்டில் முதலாவதுதான் மிகவும் கடினமானது. காரணம், ஒவ்வொரு தடுப்பூசியும் வெவ்வேறு தொழில்நுட்பத்தில் உருவாகியிருப்பதால், உடனடியாக அவற்றின் உற்பத்தியை உலகத் தேவைக்குப் பெருக்க முடியவில்லை. மேலும், முதல் தவணை செலுத்தப்பட்ட தடுப்பூசிதான் இரண்டாம் தவணையிலும் செலுத்தப்பட வேண்டும் என்ற விதிமுறையும் தடுப்பூசித் தட்டுப்பாட்டுக்கு வழிவகுக்கிறது. ஜான்சன் அண்டு ஜான்சன் தடுப்பூசி நீங்கலாக மற்றவை எல்லாமே இரண்டு அல்லது மூன்று தவணை செலுத்தப்படும் தடுப்பூசிகள். இந்த நிறுவனங்களின் உற்பத்தி அளவு போதுமானதாக இல்லை. சரியான தவணைக் கால இடைவெளியை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், அவற்றின் விநியோகம் சமநிலையில் இல்லை. இந்தப் பிரச்சினை இந்தியாவில் மட்டுமல்ல… உலக அளவிலும் இருக்கிறது.

நவீன வழிமுறை

பெருகி வரும் தடுப்பூசித் தேவையைச் சீரமைக்கும் வகையில் நவீன வழிமுறைகளை அறிமுகப்படுத்த அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சீனா, ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, ஜெர்மனி, தென்கொரியா ஆகிய நாடுகள், புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வெற்றிகண்டுள்ளன. அவை பின்பற்றிய அறிவியல் பின்னணி இதுதான்: ஒரு பயனாளிக்கு இரண்டு தவணைகளிலும் ஒரே வகைத் தடுப்பூசியைச் செலுத்துவதற்குப் பதிலாக, முதல் தவணை முதன்மைத் தடுப்புக்கும் இரண்டாம் அல்லது மூன்றாம் தவணை ஊக்கத் தடுப்புக்கும் வெவ்வேறு வகைத் தடுப்பூசிகளைச் செலுத்துவது (Heterologous prime – boost regimens). இப்படிச் செலுத்தப்படும் தடுப்பூசிகளுக்குக் ‘கலப்பு - இணைத் தடுப்பூசிகள்’ (Mix-and-match vaccines) என்று பெயர்.

பிரிட்டனில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ‘காம்-கோவ்’ (COM-COV study) ஆய்வில் முதல் தவணையாக ஆஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியைச் (இந்தியாவில் கோவிஷீல்டு) செலுத்திக்கொண்ட 800 தன்னார்வலர்களுக்கு இரண்டாம் தவணையில் பைசரின் எம்ஆர்என்ஏ தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆஸ்ட்ராஜெனேகா அல்லது பைசர் தடுப்பூசியை இரண்டு தவணைகள் செலுத்திக்கொண்டவர்களோடு ஒப்பிடும்போது, இவர்களுடைய ரத்தத்தில் கரோனாவை மட்டுப்படுத்தும் தடுப்பணுக்கள் பல மடங்கு அதிகரித்ததோடு, நினைவாற்றல் ‘டி’ செல்களும் அதிகரித்திருந்தன. இந்த இரண்டு அதிகரிப்புகளும் கரோனாவிலிருந்து பயனாளிகளுக்கு நீண்ட காலம் பாதுகாப்பு கொடுக்கும் என்பது ஏற்கெனவே அறியப்பட்ட உண்மை. இந்தக் களப்பதிவுகளை அமெரிக்காவிலும் ஸ்பெயினிலும் நடந்த ஆராய்ச்சிகளும் உறுதிசெய்துள்ளன.

இது ஒரு நவீன முறைமைதான் என்றாலும், புதிய முறைமையில்லை. ஏற்கெனவே எபோலா நோய்க்குத் தடுப்பூசி செலுத்தும்போது, இந்த முறைமைதான் பயன்படுத்தப்பட்டது. தவிரவும், தற்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் ‘பென்டாவேலன்ட்’ - ‘மோனோவேலன்ட்’ ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்துகளை உருவாக்கும் கிருமிகளும் வெவ்வேறானவையே. இவற்றின் பயன்பாட்டிலும் இதுவரை தவறேதும் இல்லை. ஆகவே, கரோனாவுக்காக ‘கலப்பு - இணைத் தடுப்பூசிக’ளைப் பயன்படுத்தினாலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.

மேலும், ஜெர்மனியின் வேந்தராகப் பதவிவகிக்கும் ஏஞ்சலா மெர்கெல் (Angela Merkel) முதல் தவணையில் ஆஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியையும் இரண்டாம் தவணையில் மாடர்னா தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டு, வரலாறு படைத்த பெண் அரசியலரானார். இதைத் தொடர்ந்து, 30-க்கும் மேற்பட்ட உலக நாடுகள், துணிச்சலுடன் ‘கலப்பு - இணைத் தடுப்பூசிக’ளை ஏற்றுக்கொண்டன. இனி, இந்தியாவும் இந்த முறைமையைப் பின்பற்றக்கூடும்.

முக்கியத்துவம் என்ன?

‘கலப்பு - இணைத் தடுப்பூசிக’ளின் பயன்பாட்டைத் தடுப்பூசித் தட்டுப்பாட்டைத் தகர்க்க உதவும் புதிய ஆயுதம் எனலாம். காரணம், கரோனாவுக்கு எவரும் எந்தத் தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ளலாம் எனும் எளிய வழியை இது கொடுத்திருக்கிறது. ஒரு தடுப்பூசி கிடைக்காதபோது அதற்காகக் காத்திருக்காமல், கிடைக்கும் எந்தவொரு தடுப்பூசியையும் பயன்படுத்திக்கொள்ளலாம். பயனாளிகள் தங்கள் வசதிக்கேற்றபடி குறைந்த விலை தடுப்பூசிகளையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். அயல்நாட்டுப் பயணிகள் அந்தந்த நாடுகளில் கிடைக்கும் தடுப்பூசி வகைகளைப் போட்டுக்கொள்ளலாம் என்பதால், ‘தடுப்பூசி பாஸ்போர்ட்’ பெறுவதும் எளிதாகிவிடும்.

தடுப்பூசிக்குத் தவமிருக்கும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஒரு நம்பிக்கை வெளிச்சமாக இது தோன்றுகிறது. இதைப் பயன்படுத்தி, விரைவிலேயே பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியும். அப்போது கரோனா பெருந்தொற்றுக்கு முடிவுகட்டவும் முடியும்.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர். தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x