Published : 05 Jul 2021 03:12 am

Updated : 05 Jul 2021 07:41 am

 

Published : 05 Jul 2021 03:12 AM
Last Updated : 05 Jul 2021 07:41 AM

மூளை என்றொரு மின்தடம்

brain

அமெரிக்காவைச் சேர்ந்த நரம்பியலாளரும், பிபிசியில் ஒளிபரப்பாகும் ‘தி ப்ரெய்ன்’ என்ற புகழ்பெற்ற தொடர் நிகழ்ச்சியை வழங்குபவருமான டேவிட் ஈகிள்மேன், மனித மூளையின் அசாத்தியமான நெகிழ்வுத்தன்மை குறித்து சமீபத்தில் எழுதியுள்ள ‘லைவ்வயர்ட்’ நூல் குறித்து ‘தி கார்டியன்’ இதழுக்கு ஒரு நேர்காணலை அளித்துள்ளார். புதிய அனுபவங்களுக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்வதில் மூளை எப்படிச் சிறந்து விளங்குகிறது என்பதை இந்த நேர்காணலில் பகிர்கிறார். செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்காக இவர் கைக்கடிகாரத்தின் வடிவத்தில் உருவாக்கிய ‘பஸ்’ (buzz) என்ற கருவி, ஒலியை வெவ்வேறு அதிர்வு வடிவங்களாகப் பெயர்த்து என்ன சத்தம் என்பதை அவர்களுக்குத் தெரிவிப்பதாகும்.

நமது கபாலத்துக்குள் மூன்று பவுண்ட் எடையில் கொழகொழப்பாக இருக்கும் சிறிய உறுப்பான மூளையில் நடக்கும் நிகழ்ச்சியை ‘உயிர்மின்தடம்’ (live wire) என்று கூறுகிறார். அங்கே 86 பில்லியன் நியூரான்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 10 ஆயிரம் இணைப்புகளைக் கொண்டவை. நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியைக் கடக்கும்போதும் மூளையை அவை மறுவடிவாக்கம் செய்துகொண்டேயிருக்கின்றன. இந்தப் பத்தியை வாசித்து முடிக்கும்போதே, இதை வாசிக்கத் தொடங்கிய நபர் சற்றே மாறிய வேறு நபர் என்கிறார் ஈகிள்மேன்.


நியூ மெக்சிகோவில் இருக்கும் அல்பகொகீ நகரத்தில் செயல்படும் போதைப்பொருள் விற்பனையாளர்களின் செயல்திறனுடன் மூளையின் செயல்திறனை ஈகிள்மேன் ஒப்பிடுகிறார். ஒரு குழந்தையின் மூளையில் பாதி அளவு அறுவைச்சிகிச்சை மூலம் துண்டிக்கப்படுகிறதென்று வைத்துக் கொள்வோம். மிச்சமிருக்கும் மூளை, அந்தப் பாதிப் பகுதிக்குத் தனது தொடர்பிணைப்பு களைப் புதுப்பித்துக் கொண்டு செயல்படத் தொடங்கிவிடும் என்கிறார். ஈகிள்மேன் தான் பிறந்து வளர்ந்த அல்பகொகீ நகரத்தின் ஒரு பகுதி, சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்றால் அழிந்துபோய்விட்டால், அங்குள்ள போதைப்பொருள் வியாபாரிகள், மிச்சமிருக்கும் பகுதியில் தங்கள் இணைப்புகளைப் பலப்படுத்தி வியாபாரத்தை வெற்றிகரமாகத் தொடரும் காரியத்துடன் மூளையின் செயலை ஒப்பிடுகிறார். மூளைக்குள் இருக்கும் பல நூறு கோடி நியூரான்கள் தங்களது சொந்தப் பிராந்தியத்துக்காக, அல்பகொகீ நகரத்து போதைப்பொருள் வியாபாரிகளைப் போலவே போராடுபவை என்கிறார்.

ஒரு நபருக்குப் பார்வை பறிபோய்விட்டாலோ, அவர் தனது கை, காலை இழந்துவிட்டாலோ, உடனடியாக அதற்கு ஏற்றபடி தகவமைக்கும் ஏற்பாடுகள் மிக வேகமாக மூளையில் நடக்கத் தொடங்கிவிடுகின்றன. வெள்ளையர்கள் நிறைய மக்களை அனுப்பியதால் பிரெஞ்சு மக்கள் வடஅமெரிக்காவில் தாங்கள் ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்திய பகுதிகளை இழந்ததைப் போன்ற நிகழ்ச்சிதான் அது. மூளையின் ஒவ்வொரு செல்லும் உயிர்ப்பைத் தக்கவைக்கத் தங்கள் ‘அண்டை வீட்டாருடன்’ தொடர்ந்த யுத்தத்தில் ஈடுபடுவதாகச் சொல்கிறார் ஆசிரியர்.

உறங்கும்போது கனவுகள் தோன்றுவதற்கான காரணத்தை ஈகிள்மேன் விளக்கும் விதம் ஆச்சரியத்தைத் தருவது. புலன்களுக்குள் நடக்கும் போட்டி, அவை ஒன்றையொன்று வெல்ல முயல்வதன் ஓர் உதாரணச் செயல்பாடே கனவுகள் என்கிறார். ஒருவரின் கண்ணைத் துணியால் கட்டிவிட்டால், கொஞ்ச நேரத்தில் தொடுதல் மற்றும் செவிப்புலன்களில் மாற்றங்கள் தொடங்குகின்றன. மூளையின் பார்வைத் திறன் சார்ந்த அம்சத்தைத் தொடு புலனும், செவிப் புலனும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிடுகின்றன. அதேபோலத்தான் நாம் உறங்கப் போகும்போது, பார்வை மண்டலம் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. இருட்டில் நம்மால் முகரவும் கேட்கவும் தொடவும் ருசிக்கவும் முடிகிறது. ஆனால், பார்ப்பது இயலாததாகிறது. ஒவ்வொரு இரவும் இப்படியாக, நாம் உறங்கும்போது, கருவிழிகள் இயக்கத்தில் இருக்கும்போது, 90 நிமிடங்களுக்கு ஒரு முறை பார்வை மண்டலம், தான் எதிர்கொள்ளும் அச்சத்தை வெல்லவும் தனது ஆட்சியைப் பாதுகாக்கவும் எடுக்கும் நடவடிக்கைதான் கனவுகள் என்று ஈகிள்மேன் கூறுகிறார். கனவின் வழியாக நாம் உறக்கத்திலும் நமது பார்வைப் புலன் மண்டலத்தை அனுபவிக்கிறோம். மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத உலகில் இருட்டு, மனிதனின் பார்வைப் புலனுக்கு அளித்த சவால் இது என்கிறார் ஈகிள்மேன்.

மனிதனின் பிரக்ஞையைப் புரிந்துகொள்வதும், அது எப்படி உருவானது என்பதும் இன்னமும் தீர்க்க முடியாத மர்மமாகவே திகழ்கிறதென்கிறார் ஈகிள்மேன். சிவப்பைச் சிவப்பென்றும், வலியை வலியென்றும், நறுமணமென்றும் வீச்சமென்றும் தன்வயமாக்கிப் புரிந்துகொள்வதை இன்னமும் விளக்கவே முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்.

டேவிட் ஈகிள்மேன் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க இலக்கியத்தில் முதுகலை படித்தவர். இலக்கியம்தான் தனது முதல் நேசம் என்றும் கூறுகிறார். தத்துவப் புரிதலுக்காக வகுப்புகளுக்குச் சென்றபோதுதான் நரம்பியலில் ஈடுபாடு வந்ததாகக் கூறுகிறார். தத்துவரீதியான புதிர்களில் சிக்கும்போதெல்லாம், அதிலிருந்து விடுபட முடியாத நிலையில்தான் நரம்பியலை நோக்கிய ஆர்வம் இவருக்கு எழுந்ததென்று சொல்கிறார். உலகத்தைப் பாரத்து விளக்கும் குறிப்பிட்ட இயந்திரத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியுமானால், இந்தப் புதிர்களுக்கு விடை கிடைக்கும் என்று நினைத்துக் கல்லூரி நூலகத்தில், மூளை பற்றிக் கிடைத்த எல்லா நூல்களையும் படிக்கத் தொடங்கியதாகக் குறிப்பிடுகிறார்.

மூளையில் மிகச் சிறிய பகுதியையே மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லப்படுவது கற்பிதம் என்கிறார் ஈகிள்மேன். நாம் எல்லாச் சமயங்களிலும் நூறு சதவீதம் நமது மூளையைப் பயன்படுத்தவே செய்கிறோம் என்னும் அவர், தகவலை உள்வாங்கும் முறைதான் வித்தியாசமானது என்கிறார். அடுத்த தலைமுறையினர் நம்மைவிடப் புத்திசாலிகளாக இருக்கப்போவது நிச்சயம் என்கிறார். ஏனெனில், விருப்பார்வம் கொண்டு பதில்களைப் பெறும்போது மூளை, அதிகபட்சமாக நெகிழ்வுத்தன்மை கொள்கிறது என்கிறார்.

அனுபவங்களுக்கும் சூழல்களுக்கும் தகுந்தாற்போல பொருந்தித் தகவமைத்துக் கொள்ளும் வகையில் நமது மூளைகள் நெகிழ்வுடன் படைக்கப்பட்டுள்ளன. கூர்மை யான பற்களும் நீளமான கால்களும் நமக்கு உயிர்தரிப்பதற்கு உதவுவதைப் போலவே மூளைகள் தம்மை மறுவடிவமைப்பு செய்து கொள்கின்றன. மூளையின் உயிர்த்தன்மை கொண்ட நுட்பமான மின்தடங்கள், புதியதைக் கற்று, திறன்களையும் மேம்படுத்திக்கொள்வதை நிறுவுகிறார் டேவிட் ஈகிள்மேன்.

- ஷங்கர்ராமசுப்ரமணியன், தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in


Brainமூளை என்றொரு மின்தடம்மூளைமனித மூளைதி ப்ரெய்ன்லைவ்வயர்ட்Live wire

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x