Published : 11 Feb 2016 11:50 AM
Last Updated : 11 Feb 2016 11:50 AM

சுய பரிசோதனை தேவை!

தமிழ்த் தேசியம், இந்தியத் தேசியம் போன்ற கருத்தியல்களின் அடிப்படைகள் இன்று ஒற்றைத்தன்மையை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டன. இந்தியத் தேசியம் என்பது இந்து தேசியம் என்பதாகவும், தமிழ்த் தேசியம் என்பது சாதி, மதம் கடந்த தனித் தமிழினம் என்பதாகவுமே புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. அதுவே நம் இன்றைய சிக்கல்களுக்குக் காரணம். இப்படியான கோணத்திலேயே நாம் சிந்தித்துக்கொண்டிருந்தால், நிச்சயம் எவ்விதத் தீர்வும் கிடைக்காது. இந்தியா என்பது இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் இதர சிறுபான்மையினரையும் உள்ளடக்கிய துணைக்கண்டம் என்பதை முதலில் மனதார ஒப்புக்கொள்ள வேண்டும்.

வரலாற்று இயங்கியலில் அது இயல்பானது என்பதை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். இந்தப் புரிதல் இல்லாமல் நாம் முன்வைக்கும் வாதங்கள் பொருளற்றவையாகவே இருக்கும். சாதி, மதம் தவிர்த்த ‘தூய்மைத் தமிழ்’ நிலைக்கு ஒரு இனத்தைக் கொண்டுசெல்வதான தமிழ்த் தேசியமும் ஒருபோதும் எடுபடப்போவதில்லை. சாதிகளும் மதங்களும் எப்படிப் புழக்கத்துக்கு வந்தன எனும் சமூக வரலாற்றைத் தெரிந்துகொள்ளாதவரை வெகுமக்கள் அவற்றை விட்டுத்தரப்போவதில்லை.

இன்று பெருகியிருக்கும் சாதியக் கட்சிகளே அதற்குச் சான்று. எளிய வார்த்தைகளில் சொல்வதானால், ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதே எதார்த்த நிலைக்கு இணக்கமானதாக இருக்கும். வரையறுக்கப்பட்ட ஒற்றைத்தன்மை என்பது - அது எப்படி இருப்பினும் - வல்லாதிக்கமாகவே இருக்கும். இந்திய, தமிழ்த் தேசியர்கள் தங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்வதற்கு ஏற்ற தருணம் இது.

- முருகவேலன், கோபிசெட்டிபாளையம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x