Last Updated : 15 Feb, 2016 04:38 PM

 

Published : 15 Feb 2016 04:38 PM
Last Updated : 15 Feb 2016 04:38 PM

எல்ஐசி: வெற்றிக்கு ஒரு உதாரணம்!

பொதுத்துறை நிறுவனத்தைத் திறம்பட நடத்தினால், அது நாட்டுக்கும், மக்களுக்கும் எவ்வளவு உதவியாக இருக்கும் என்பதற்கு எல்.ஐ.சி. என்ற ஒரு நிறுவனத்தின் உதாரணம் போதும்.

இந்தியாவில் ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுத்திருக்கிறீர்களா என்று யாரையாவது விசாரிக்க வேண்டுமென்றால், “எல்.ஐ.சி. போட்டுருக்கீங்களா?” என்று கேட்கிறார்கள். அந்த அளவுக்கு ஆயுள் காப்பீடு என்றாலே ‘எல்.ஐ.சி’என்று மக்கள் மனதில் பதிந்திருப்பதற்குக் காரணங்கள், அது சமூகத்தின் கடைசி மனிதனையும் தொட்டிருப்பது, மக்களுக்கான உரிமங்களை நேர்மையாகத் தருவது, இந்தியப் பொருளாதாரத்துக்கான அமுதசுரபியாய்த் திகழ்வது போன்றவையே ஆகும்.

1956-க்கு முன்பாக நூற்றுக்கணக்கான தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இருந்தன. முறைகேடுகள், மோசடிகள், திவால்களின் உறைவிடங்களாக அவை திகழ்ந்தன என்பதே வரலாறு. அப்போது நாடாளுமன்றத்தில் ஃபெரோஸ் காந்தி பேசும்போது சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தில் பட்டியலிட்ட 42 மோசடிகளையும்விட அதிகமான பித்தலாட்டங்களைத் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கண்டுபிடித்துவிட்டன எனச் சாடினார். இந்தப் பின்புலத்தில்தான் 245 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களைத் தேசியமயமாக்குகிற முடிவு 1956 ஜனவரி 19-ல் எடுக்கப்பட்டது.

‘மூலை முடுக்கெல்லாம் காப்பீட்டைப் பரவலாக்குவதே’ தேசிய மயத்தின் லட்சியம் என அறிவிக்கப்பட்டது. இன்று 40 கோடி பாலிசிகளைக் கொண்ட நிறுவனமாக எல்.ஐ.சி உள்ளது. உலகில் வேறு எந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலும் இவ்வளவு பாலிசிகள் இல்லை. 2015-ல்கூட எல்.ஐ.சி.யின் சந்தைப் பங்கு பாலிசிகளில் 78%, பிரிமியத்தில் 69 %.

இதன் பொருள் என்ன? 2000-ல் மீண்டும் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட பின்பும் சாதாரண மக்களுக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பைத் தருவது எல்.ஐ.சி.தான். அரசு நிறுவனங்கள் லாபத்தை மட்டும் பார்க்காது, மக்களையும் பார்க்கும் என்பதன் நிரூபணம்.

‘நம்பகத்தன்மையே மிக முக்கியமான மூலதனம்’ என்பது இன்சூரன்ஸ் தொழிலின் கோட்பாடு. அந்தக் காலத்து சினிமாக்களில் ரெங்கா ராவ் நடிக்கிற எல்லாப் படங்களிலும் நெஞ்சுவலி வருகிற காட்சி வரும். கப்பல் கவிழ்ந்தாலே இன்சூரன்ஸ் நிறுவனங்கள் திவாலாகி விடும் என்பதால், தொலைபேசி செய்தி வந்தவுடன் சாய்ந்துவிடுவார். 1970-களுக்குப் பிறகு இந்த நெஞ்சுவலிக் காட்சிகள் இருப்பதில்லை.

காரணம் 1971, மே 30 அன்று பொதுக் காப்பீட்டுத் துறையில் 106 தனியார் நிறுவனங்களும் தேசிய மயமாக்கப்பட்டுவிட்டதுதான். 2015-ல்கூட எல்.ஐ.சி.யின் உரிமப்பட்டுவாடா 99.75%. அதே ஆண்டில் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் உரிமப்பட்டுவாடா 89% தான். சில தனியார் நிறுவனங்களில் 50% உரிமங்கள்கூடச் சிக்கலாகியுள்ளன. இதனால்தான் 24 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் - உலகின் பெரிய பெரிய நிறுவனங்களும், இந்தியாவின் மிகப்பெரும் தொழிலகங்களும் கூட்டு சேர்ந்து வந்த பிறகும், எல்.ஐ.சி.யின் சந்தைப் பங்கு பாலிசிகளில் 70% ஆக உள்ளது. இது கருத்துக் கணிப்பு அல்ல, வணிகக் களத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பு. அறுதிப் பெரும்பான்மை வாக்குகளை எல்.ஐ.சி. பெற்றிருப்பது அமோக வெற்றி!

‘ஆதாரத் தொழில் வளர்ச்சியின் அடித்தளம் ஆயுள் இன்சூரன்ஸ் துறை’ என்பது பொருளாதாரத்தில் அதன் தனிச்சிறப்பு. 7-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் எல்.ஐ.சி. வழங்கியிருக்கிற நிதியாதாரங்கள் ரூ.7,04,151 கோடிகள். 8-வது திட்டக் காலத்தில் இதுவரையிலான முதல் மூன்று ஆண்டுகளில் மட்டுமே ரூ.7,52,633 கோடிகள் மின்சாரம், குடிநீர் அடிப்படை வசதிகளுக்காக இத்தொகை பயன்பட்டுள்ளது.

ரயில்வே பட்ஜெட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.1,50,000 கோடிகள் தேவை என அறிவித்தால், உடனடியாக எல்.ஐ.சி. ஆண்டுக்கு ரூ.30,000 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.1,50,000 கோடி தருவதாகப் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டது. மேலும் 11,63,604 முகவர்களுக்கு நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளைத் தந்துள்ளது. இப்படியொரு அமுதசுரபி எங்கு கிடைக்கும்? அந்நிய முதலீடுகள் வாயிலாகவே ஆதாரத் தொழில் வளர்ச்சி நடந்தேறும் என்கிற உலகமயவாதம் பொய்யாக்கப்பட்டுள்ளது. ஆனால், ஓர் அரசு நிறுவனம் திறம்படச் செயல்பட்டால் தேச நிர்மாணத்துக்குப் பயன்படும் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது!

- க. சுவாமிநாதன், துணைத் தலைவர்,
தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு.
தொடர்புக்கு: swaminathank63@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x